ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்

ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்…

யோவான் 3:1-6.

முகவுரை :-
குளித்தபின்பு ஆடை அலங்காரம் செய்வது வழக்கம்.வேலை செய்வதற்கு தகுதியும் வேண்டும், பணிசெய்வதற்கான uniform ம் அவசியம்.ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் – தண்ணீர் சுத்திகரிப்பும், ஆவியின் சுத்திகரிப்பும் அவசியம். தண்ணீர் சுத்திகரிப்பானது பாவ அழுக்கு நீங்கவும்,
ஆவியின் சுத்திகரிப்பானது கிறிஸ்துவின் சாயல் விளங்கவும் அவசியமானது.

1. ஜலத்தினால் பிறத்தல்.
இது முதல்படியாகும். இதனை நுழைவுபடி எனவும் கூறலாம். மத்தேயு 4:17 ல் மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் ஆயத்தமாயுள்ளது என்று இயேசு கூறினார்.

ஜலத்தினால் பிறத்தல் என்பது தண்ணீர் ஞானஸ்நானம் ஆகும்.

ஜலத்தினால் பிறக்க.

– கேள்விபடவேண்டும். வசனத்தை பிரசங்கிப்பவர்க்கு செவிகொடுக்க வேண்டும். ரோமர் 10:17. வசனத்துக்கு செவிகொடுத்தலே இரட்சிப்புக்கான முதல்படி.

– வசனத்தை நம்புதல். அப்போஸ்தலர் 8:14. கேட்ட வசனத்தை ஏற்றுக்கொண்டு அதை தேவ வாக்காக நம்புகிறான்.

– இயேசுவை ஏற்றுகொள்ளல். யோவான் 20:31. வசனம் கூறும் இயேசுவை நம்பி அவரை தன் பாவங்களை மன்னிப்பவராகவும், தான் கேட்பதை தருகிறவர் என்றும் நம்புகிறான்.

– விட்டுவிடுதல். உலக, பாவ, மாமிச காரியங்களை விட்டுவிடுகிறான். அப்போஸ்தலர் 2:40. தன் பழைய சுபாவங்களை விட்டு விடுகிறான்.

– தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுக்கிறான். அப்போஸ்தலர் 2:41. தண்ணீரில் முழுகி சுத்தமாகிறான். தண்ணீரிலிருந்து எழும்பி புது வாழ்வு வாழ துவங்குகிறான்.

2. ஆவியினால் பிறத்தல்.
இரண்டாம் படி. இதனை வாழ்க்கைபடி எனலாம். முழுகி ஞானஸ்நானம் எடுத்தவன் 10 விஷயங்களை கைக்கொள்ளுகிறான்.

– அனுதின தியானம். விவிலியத்தில் அன்றாடம் காலை தியானம் மற்றும் மாலை தியானம் செய்கிறான். அப்போஸ்தலர் 17:11 ல் பெரேயா மக்கள் அனுதினமும் விவிலியத்தை ஆராய்ந்து பார்த்தனர் என்று புதிய ஏற்பாடு கூறுகின்றது.

– ஆவியில் நிரம்புதல். ஆவியின் ஞானஸ்நானம் மற்றும் ஆவியில் நிரம்பி வாழும் அனுபவம் அவசியமாகின்றது. எபேசியர் 5:18-21. உள்ளான மனுஷனில் பலப்பட வேண்டுமெனில் இந்த நிரம்புதல் அவசியமாகின்றது. எபேசியர் 3:16

– தனி ஜெபத்தில் வளர்தல். இயேசு கிறிஸ்து திருமுழுக்கு எடுத்தபின்பு தனி ஜெபம் செய்ய வனாந்தரத்துக்கு சென்றார். லூக்கா 3:21
அப்போஸ்தலர் 10:9 ல் பேதுரு தனி ஜெபம் செய்தார் என்றுள்ளது.
தனிஜெபம் என்பது அதிகாலையில் செய்வது ஆகும். மற்றபடி நேரம் கிடைக்கும்போதும் செய்யலாம்.
தனி ஜெபம் ஆரம்பிக்கும்போது அவரவர்க்கு எதிராக காலமெல்லாம் நடந்து வந்த துர்கிரியைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

– தொழுகையில் முனைப்பு. ரோமர் 10:12-14, 1 பேதுரு 1:17. இரட்சிப்பு தொடர்ந்து செல்ல இந்த தொழுகை அவசியம். தொழுகையானது அவர் எஜமானர் என்பதை வெளிபடுத்தும். இந்த எஜமானத்துவம் பேணப்பட வேண்டும்.

– தூய வாழ்வு. 1பேதுரு 2:11,12; 1பேதுரு 1:15. அவர் உன்னோடு நடக்க இந்த தூய வாழ்வு அவசியம். மாம்சத்தில் தொடரும் போராட்டத்தில் இச்சைக்கு அடங்காது முன்னேற இந்த பரிசுத்தத்தை காத்துகொள்.

– விசுவாச வாழ்வில் வளர்தல். அப்போஸ்தலர் 14:22; அப்போஸ்தலர் 16:5. விசுவாசத்தை அவரே துவங்கினார். நாம் விசுவாசத்தில் நிலைத்திருப்பது அவசியமானது. அப்பொழுதுதான் அவர் நம்மில் வாழ்வார். எபேசியர் 3:17

– ஆவியின் வரங்களை செயல்படுத்துதல். 1கொரிந்தியர் 12:7-11. ஆவியானவர் நம்மில் வாழ்கிறாரென்றால் வரங்கள் உண்டாகும். வரங்கள் நாம் மேன்மையடைவதற்கானது அல்ல, சபையை மேம்பாடு அடைய செய்வதாகும். அதாவது நாம் பக்தி விருத்தி அடைவதாகும்.

– ஆவியின் கிரியைகளில் ஈடுபடுதல். 1கொரிந்தியர் 12:28. சபையின் திருப்பணிகளில் உற்சாகம் வர காரணம் அவர்களில் ஆவியானவர் இருப்பதாலே. பலவிதமான திருப்பணிகள் சபையில் உள்ளன. அப்போஸ்தலராக – தீர்க்கதரிசியாக – சுவிசேஷகராக – மேய்ப்பராக – போதகராக – மூப்பராக – டீக்கன்களாக – உதவிகாரர்களாக – ஜெபக்குழுக்களாக செயல்பட ஆவியானவர் தூண்டுகின்றார்.

– ஆவியின் கனியில் நிறைவடைதல். கலாத்தியர் 6:22,23. இது ஆவியானவரின் இறுதி காரியம். கனி நிறைந்த அனுபவமே மறுரூபத்துக்கான அடையாளம். அவர் கனி தேடி வருவார்.

நமது ஆவிக்குரிய வாழ்வு ஆவியோடு இணைந்த வாழ்வு. அதனை பிடித்துக் கொள்வோம். விடாதிருப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்.
ஜெபிப்போமா?
அன்பு கர்த்தாவே, நாங்கள் உம்மில் பிறந்து உம்மில் நிறைவடைய உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME