அவர் சுயமாய்ப் பேசாமல் கேள்விப்பட்டதைச் சொல்லுவார்.
He will not speak on His own authority, but whatever He hears He will speak. (John 16:13)
John 3:31,32; John 7:16-18; John 8:38; John 12:49; John 5:30; John 14:10.
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16:13)
யோவான் 3:31,32; யோவான் 7:16-18; யோவான் 8:38; யோவான் 12:49; யோவான் 5:30; யோவான் 14:10.
பரிசுத்த ஆவி:
கர்த்தராகிய இயேசு பிதாவினால் அனுப்பப்பட்டு, பிதாவிடமிருந்து வந்தவர். இந்த பூமியில் வந்திருந்தும் ஆதாமைப்போல சுயமாய் பேசாது தம்மை அனுப்பிய பிதாவானவர் சொல்லுவதை கேட்டு அதன்படியே பேசினார் – செய்தார். இயேசு கிறிஸ்துவைப் போலவே பரிசுத்த ஆவியானவரும் பிதாவினாலும் குமாரனாலும் அனுப்பப்பட்டு வந்தவர். பரிசுத்த ஆவியானவர் சபை நடுவில் வந்திருந்தும் இயேசு கிறிஸ்துவைப் போல பிதாவிடமிருந்தும், குமாரனிடமிருந்தும் கேள்விப்படுவதையே அறிவிக்கிறவராயிருக்கிறார்.
ஆவியானவர் சுயமாய் முடிவெடுக்க இயலாதவர் அல்ல. ஆனாலும் தேவத்துவத்துக்குள் இருக்கிறவராகையினால் சுயமாய் எதையும் செய்யாமலும், அறிவியாமலும் இருக்கிறார். தேவத்துவத்துக்கும், நியாயப்பிரமாண விதிகளுக்கும் உட்பட்டே பேசுகிறார், செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் பார்க்கிறவராகவும், கேட்கிறவராகவும் இருக்கிறார். தாம் தரிசிக்காத எதையும் அறிவிப்பதுமில்லை, செய்வதுமில்லை. அதுபோலவே தாம் கேள்விப்படாத எதனையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை.
தேவனுடைய ஊழியக்காரர்கள் தங்களிஷ்டம்போல் முடிவெடுக்க தகுதியுடையவர்களல்ல. தேவத்துவத்திடமிருந்து கேள்விப்பட்டு, செய்யப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ள விவிலியத்தின் அடிப்படையில்தான் எதையும் சொல்லவும், செய்யவும் வேண்டும். சபையிலே ஆவியானவர் காக்கும் ஆவியாக இருப்பதினால் ஆவியானவரின் சத்தம் கேட்டும், கிரியைகளை கண்டும் அதன்படி செய்யவுமே அழைக்கப்பட்டுள்ளனர். நம்மோடு பேசுகிறவருக்கு நாம் செவிகொடாதிருப்போமானால் நாம் பரிதபிக்கப்படதக்கவர்களாவோம். ஆவியானவர் நம்மோடும் நமக்கு மேலேயும், நமக்குள்ளேயும் இருக்கிறவர். சபையை கூடிவர வைக்கிறவர் அவரே. ஊழியர் மூலமாய் அவரே பேச விரும்புகிறார். விசுவாசிக்கிறவர்கள் மூலமாய் அவரே கிரியை செய்ய விரும்புகிறார்.
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:13-17.