சீஷர்கள் கூடியிருக்கையில், கதவுகள் பூட்டியிருக்கையில் இயேசு வந்தார்.
doors were shut where disciples were assembled,Jesus came and stood in midst. (John 20:18)
John 20:26; John 14:19-23; John 16:22; Matthew 18:19,20; Revelation 3:20; Leviticus 26:12; 2Corinthians 6:16; Revelation 2:1; Psalms 139.
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். (யோவான் 20:19)
யோவான் 20:26; யோவான் 14:19-23; யோவான் 16:22; மத்தேயு 18:19,20; வெளி 3:20; லேவியராகமம் 26:12; 2கொரிந்தியர் 6:16; வெளி 2:1; சங்கீதம் 139.
ஊடுருவுகிறவர்:
ரோம அரசாங்கத்துக்கும் யூத சமய தலைவர்களுக்கும் பயந்ததினிமித்தம் சீஷர்கள் 11 பேரும் வழக்கமாக கூடிவருகிற ஒரு வீட்டின் அறையிலே அடைக்கலம் புகுந்தார்கள். பலவிதமான யூகங்களுக்கும் செய்திகளுக்கும் விடை கிடைக்காதவர்களாய் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் கேள்விபட்டவைகளைக் கூறி மேலும் மேலும் பயம் உண்டாக்குகிறவர்களாய் காணப்பட்டனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து தெளிவற்றவர்களாகக் காணப்பட்டனர். இத்தருணத்தில் இயேசு கிறிஸ்து அவர்கள் நடுவே தோன்றினார். கதவுகள் உட்புறத்தில் பூட்டப்பட்டிருக்கையில் இயேசு கிறிஸ்து தோன்றினார்.
அறைவீட்டுக்குள் கடந்து வந்த இயேசு கிறிஸ்துவின் தன்மையை குறித்து ஒருசில உண்மைகளை நாம் அறிவது நல்லது.
இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கும்போது என் நாமத்தினாலே நீங்கள் கூடிவரும்போது உங்கள் நடுவே நான் வருவேன் என்று கூறியிருந்தார். அதன்படியாக பூட்டப்பட்ட அறைக்குள் இயேசு கிறிஸ்து தோன்றினார். இந்த செயலினைதான் நான் உங்கள் நடுவே உலாவி உங்கள் தேவனாயிருப்பேன் என்று ப.ஏ. ல் சொல்லப்பட்டுள்ள சத்தியத்தை வெளிபடுத்துகிறது. நான் எங்கும் உலாவுகிறவர் என்பதையும் பல இடங்களில் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
பூட்டிய அறைக்குள் ஊடுருவிய இயேசுகிறிஸ்து எப்படிபட்ட சரீரமுடையவராயிருந்தார் என்பதை முன்னர் நாம் கண்டுள்ளோம். அதாவது, மனித சரீரத்தை மகிமையின் சரீரமாக கொண்டிருந்தார் என்பதுவேயாகும். இந்த மாற்றம் மறுரூபபடுதல் மூலமாக உண்டாகிறது என்பதையும் நாமறிவோம். எனவே இயேசு கிறிஸ்து மகிமையின் தோற்றத்தோடு சீஷர்களுக்கு நேரடியாக காட்சிக்கொடுத்தார்.
பூட்டிய வீட்டுக்குள் ஊடுருவிய இயேசு கிறிஸ்துவால் சிறைசாலைக்குள்ளும், அரண்களுக்குள்ளும், பாதுகாப்பு பெட்டகங்களுக்குள்ளும் ஊடுருவி வரமுடியும். இயேசுவுக்கு இடமில்லை என்று சொல்லுகிற அந்தகார சங்கிலிகளினால் பூட்டப்பட்டுள்ள இருதயங்களுக்குள்ளும் ஊடுருவி வர இயலும். ஆனாலும் மனித உள்ளங்களை உண்டாக்கிய அவருக்கு தங்கள் உள்ளங்களில் இடம் கொடுப்பதற்காக இதய வாசலண்டை நின்றுக்கொண்டு தட்டிக்கொண்டேயிருக்கின்றார். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு தன் இதய கதவை திறந்து இடம் கொடுப்பானென்றால் அவர் உள்ளே வந்து அவனோடு வாசம் பண்ணுவார்.
அன்று உலகத்தில் வாசம்பண்ண மனிதனாக வந்தார். இன்று மனித உள்ளங்களில் ஆவியாக வாசம் பண்ண மகிமையின் கிறிஸ்துவாக வருகிறார். இன்னும் கொஞ்சகாலத்தில் உலகில் ஆளுகை செய்ய மகிமையின் இராஜாவாக வரப்போகிறார்.
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.
நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. சங்கீதம் 139:7-16.