சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
He showed His hands and His side. Then disciples glad when they saw Lord. (John 20:20)
John 20:27; Luke 24:39,40; 1John 1:1; John 16:22; Matthew 28:8; Luke 24:41; Isaiah 25:8,9; Psalms 69:32; Psalms 118:24.
அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். (யோவான் 20:20)
யோவான் 20:27; லூக்கா 24:39,40; 1யோவான் 1:1;யோவான் 16:22; மத்தேயு 28:8; லூக்கா 24:41; ஏசாயா 25:8,9; சங்கீதம் 69:32; சங்கீதம் 118:24.
சீஷர்களின் சந்தோஷம்.
சந்தோஷம் என்ற சொல் மகிழ்ச்சி என்றும், அளவற்ற உள்ள கிளர்ச்சி என்றும், வாழ்த்துக்களை கூறுதல் என்றும் பொருள் கூறலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி மட்டற்ற மகிழ்ச்சியை உண்டுபண்ணினது. அவருடைய ஊழியத்தினிமித்தம் கலக்கத்தில் இருந்த அனேகர் சந்தோஷப்படவும், சமாதானமடையவும் செய்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தின் மூலம் அவரை பின்பற்றியவர்களும் அவரோடிருந்த சீஷர்களும் கலக்கமடைந்தவர்களாய் – பயம் கொண்டவர்களாய் காணப்பட்டனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து அவரை கண்டதினிமித்தம் சீஷர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்.
எதினிமித்தம் சீஷர்கள் சந்தோஷப்பட்டார்கள் என்பதை இந்த வசனம் நமக்கு தெளிவை தருகின்றது. இயேசுகிறிஸ்து தமது கைகளையும், விலாவையும் சீஷர்களுக்கு காண்பித்தார். அவர்கள் கேட்டதினாலல்ல, அவர்கள் பயத்துடனிருந்ததினால் இவ்வாறு காண்பித்தார். இந்த அடையாளங்களைக் கண்ட சீஷர்கள் இயேசுவே இவர் என்றும், மரித்தவர் அடக்கம்பண்ணப்பட்டவர் இவரே உயிரோடிருக்கிறார் என்றும் நம்பி ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். மகிழ்ச்சியைக் கொடுத்த இந்த அடையாளமானது இயேசுவை மரணம் ஜெயிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
சீஷர்களுக்குள் உண்டான சந்தோஷம் சீஷர்களை சிறைசாலைகளிலும், உபத்திரவங்களிலும், பலவீனங்களிலும், இழப்புகளிலும், குறைவுகளிலும், காயங்களிலும், அவமானங்களிலும், நிந்தைகளிலும் விசுவாசத்தில் ஆரோக்கியமுடையவர்களாகவும், நம்பிக்கையில் உறுதியுடையவர்களாகவும் அசையாமல் கிறிஸ்துவில் உறுதியாய் நிற்க வைத்தது. அப்போஸ்தலர் 5:41; அப்போஸ்தலர் 8:39; அப்போஸ்தலர் 12:14; அப்போஸ்தலர் 13:52; அப்போஸ்தலர் 21:17; பிலிப்பியர் 2:17; பிலிப்பியர் 3:1; பிலிப்பியர் 4:4; கொலோசெயர் 1:24; 1தெசலோனிக்கேயர் 5:16; எபிரெயர் 10:34.
இயேசு கிறிஸ்துவின் வசனத்தைக் கேட்டவர்கள் சந்தோஷமடைந்தனர். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிறைவாய் இருக்கும் என்று கூறினார் இயேசு. நிறைவான சந்தோஷத்தை அடைய அதை கொடுப்பதாக கூறினார். இப்பொழுது இயேசுவைக் கண்டதினிமித்தம் சந்தோஷப்படுகிறார்கள்.
இந்த சந்தோஷம் சீஷர்களை பலவீனத்திலும் பலமடைந்து கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் செய்தியையும் தேசமெங்கும் சுமந்து செல்ல வைத்தது. மகிழ்ச்சியோடு சுவிசேஷத்தை சுமந்து சென்றார்கள். நாசரேத்தூரில் பிறந்த இயேசுவே ஆண்டவர் என்றும், மரித்த இயேசுவே இப்பொழுதும் ஜீவிக்கிறார் என்றும் ஆணித்தரமாகக் கூறவைத்தது.
சீஷர்கள் தோற்றக்காட்சியையோ, தரிசனத்தையோ பார்க்கவில்லை. நேரடியாக இயேசுவை தொட்டுப்பார்த்து அனுபவித்து சந்தோஷமடைந்தார்கள். ஆகையினால் அந்த சந்தோஷத்தை எந்த அக்கினி நதியினாலும் அவிக்க இயலவில்லை. அவர்களை உத்தமர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், உறுதியுள்ளவர்களாகவும் மாற்றியது.
மகிழ்ச்சியே மனோபெலன்; சந்தோஷமே சாவிலும் நிலைப்பது.
மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது: பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும். ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள கடனாளிகளாயிருக்கிறோம்.
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை. தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள். 3யோவான் 1:1-8,11,12