சிலுவை கூறும் செய்தி – 7.
வெறுமையான சிலுவையும், கல்லறையும் – அது வெற்றியின் செய்தி.
இயேசு கிறிஸ்து என்னிடம் இல்லை என்று சிலுவையும், கல்லறையும் கூறுவதற்காகவே வெறுமையான சிலுவைகளாக அவருடைய சந்ததிகளிடமும் திருச்சபை கட்டிடங்களிலும் கல்லறைகள் மீதிலும், வெறுமையான கல்லறையாக இஸ்ராயேல் நாட்டிலும் இன்றுவரையிலும் காணப்படுகின்றது. சிலுவையின் – கல்லறையின் எஜமானாகிய மரணமும் இயேசு கிறிஸ்து என்னிடம் இல்லை என்று கூறுகின்றது. அவரை என்னால் மூன்று நாட்களுக்குமேல் வைத்திருக்க முடியவில்லை என்று கூறுகின்றது. அப்பொழுது நான் மரணத்திடம் இயேசு எங்கே என்று கேட்டேன். அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்று மரணம் என்னிடம் கூறியது. ஆம் இயேசு உயெர்த்தெழுந்துவிட்டார். இதுவே சிலுவையானது மரணத்தின்மேல் கொண்ட வெற்றி. கல்லறையானது மரணத்தின்மேல் கொண்ட வெற்றியாகும். ஆகையினால்தான் அவைகள் வெறுமையாய் காட்சியளிக்கின்றது.
இந்த வெறுமையான சிலுவையானது இனி ஒருவரையும் தன்னில் ஏற்றுக்கொள்ளாது. இந்த வெறுமையின் கல்லறையும் இனி ஒருவரையும் தன்னில் ஏற்றுக்கொள்ளாது. இந்த உலகம் இருப்பது வரையிலும் இவைகள் இந்த வெற்றி செய்தியின் ஒளியை பிரதிபிம்பித்துக் கொண்டேயிருக்கும். இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் இந்த வெற்றியின் பாதையில் தான் பயணிக்க முடியும். வேறு வழி இல்லை. இதுவே நற்செய்தியாகும். நற்செய்தியானது நம்மை மூன்று இடத்துக்கு நம்மை வழிநடத்தி நமக்குள் விசுவாசத்தை உண்டாக்கி மீட்படையவைக்கும். நீ சிலுவையில் மரித்த இயேசுவை நினைத்து உன் பாவங்களை – சுயத்தை சிலுவையில் அறைய ஒப்புக்கொடு என்று கூறும். நீ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவை நினைத்து உன் பாவங்கள் முழுதும் மூழ்கடிக்கப்பட்டு புதைக்கப்பட ஞானஸ்நானத்துக்கு ஒப்புக்கொடு என்று கூறும். மூன்றாவது நற்செய்தியானது உன்னை உயிர்த்த இயேசுவிடம் அழைத்து செல்லும். மீட்கப்பட்ட நீ இயேசுவைபோல புது சிருஷ்டியாக வாழும்படியாக இயேசுவின் உயிர்ப்பின் ஆவியை பெற்றுக்கொண்டு உனக்கு எதிராக எழும்பும் எல்லா ஆயுதங்களையும் ஜெயித்து பரலோகில் வந்தடைய கூறும். அதாவது, பரலோகில் இருக்கின்ற அவரிடம் சென்று சேரும்படியாக வழி நடத்தும். இதுவே சிலுவையின் வெற்றியாகும்.
நாம் விசுவாசத்துக்குள் வராவிட்டால் இந்த சிலுவையின் வெற்றியை அனுபவிக்க இயலாது. இனியொரு தடவை சிலுவையானது உயிர்த்த இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் செய்யாது. சிலுவையின் பணி முடிந்து விட்டது. எனவே உயிர்த்த இயேசுவை அனுபவித்துக்கொள்ளும்படியாக விசுவாசத்துக்குள் வாருங்கள்.
விசுவாசத்தின் ஆதாரங்களே சிலுவையும் கல்லறையும். இவைகள் வணங்கப்படுவதற்கல்ல. உயிர்த்த இயேசுவுக்கு நேராக வழிநடத்துபவை. விசுவாசத்தினால் வராத யாவும் பாவமேயாகும். நமது விசுவாசமே உலகை ஜெயிக்கிற ஜெயம்.
இயேசு உயிர்த்தார். இயேசு ஜீவிக்கிறார்.
இயேசு வரப்போகிறார். நாம் அவரோடு வாழப்போகிறோம். அல்லலேலூயா..
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 15:50-57.