கள்வர்கள் இருவரின் காலெலும்புகள் முறிக்கப்பட்டது

கள்வர்கள் இருவரின் காலெலும்புகள் முறிக்கப்பட்டது.

soldiers came and broke the legs of the first and of the other who was crucified with Him. (John 19:32)

John 19:18; Luke 23:39-43; Jeremiah 48:25; Ezekiel 4:17; Psalms 6:2; Psalms 31:10; Psalms 32:3; Psalms 102:3; Revelation 18:4-24.

அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். (யோவான் 19:32)

யோவான் 19:18; லூக்கா 23:39-43; எரேமியா 48:25; எசேக்கியேல் 4:17; சங்கீதம் 6:2; சங்கீதம் 31:10; சங்கீதம் 32:3; சங்கீதம் 102:3; வெளி 18:4-24.

துன்மார்க்கத்துக்கு முடிவு உண்டு:
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இரு கள்வர்களில் ஒருவர் மனந்திரும்புதலுக்குள்ளாயிருந்தாலும் இருவரின் காலெலும்புகளும் முறிக்கப்பட்டது என்று யோவான் கூறுகின்றார். அவர்கள் குற்றவாளிகள். தண்டனைக்குரியவர்கள். காலெலும்புகள் உடைக்கப்படும் என்று அறிந்தவர்கள். துன்மார்க்கமாய் வாழ்ந்தவர்கள். நீதியும் நியாயமும் ஒருநாள் தங்களை கொன்றுவிடும் என்று அறிந்தும் துணிகரமாய் வாழ்ந்தவர்கள். தீங்கு செய்ய விரைந்தோடின கால்களையுடையவர்கள். இரத்தத்தை தங்கள் உடுப்பாக்கிக் கொண்டவர்கள். 

இவர்கள் தெய்வபயமில்லாதவர்கள். தேவனை குறித்த நினைவில்லாதவர்கள்.சட்டங்களை மதியாதவர்கள். சட்டங்களை வளைக்க தெரிந்தவர்கள். சட்டம் என் பையில் என்பவர்கள். பிறரின் காயத்தில் இன்பம் காண்பவர்கள். இவர்களின் காலெலும்புகள் உயிரோடிருக்கையிலே முறிக்கப்பட்டது. 

துன்மார்க்கத்துக்கு முடிவு உண்டு. துன்மார்க்கத்துக்கு தண்டனை உண்டு. சில நாட்கள், சில வருடங்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பலாம். ஆனால் ஒருநாள் சட்டத்தின் கிடுக்கிபிடியில் அகப்பட்டுத்தானாக வேண்டும். தேவன் அப்படிப்பட்ட நியமத்தை தான் இந்த உலகத்தில் வைத்துள்ளார். 

எத்தகைய இராஜாங்கத்தின் எழுச்சிக்கும் எல்லையை வகுத்துள்ளார். எந்த மனிதனின் முரட்டாட்டத்துக்கும் முடிவுநாளை குறித்துள்ளார். பலநாட்களாக அகப்படாத எலி என்றாவது ஒருநாள் பொறியில் தானாக அகப்படுவதைப்போல தளைத்துவாழும் துன்மார்க்கம் என்றாவது ஒருநாள் தன் துன்மார்க்கத்தினிமித்தம் முடிவை அடையும். அநியாயமும், அக்கிரமமும், அதர்மமும், அநீதியும் கடவுளின் பார்வையிலிருந்து தப்பவே இயலாதபடிக்கு  தேவன் உலக நியமங்களை வடிவமைத்துள்ளார். 

உலக வரலாற்றினூடே எத்தகைய சர்வாதிகாரங்களும், ராஜாங்கங்களும் ஒரு குறிப்பிட்ட காலம் தாண்டி முடிவை சந்தித்துள்ளதை மறுக்க முடியாது. இஸங்களின் வளர்ச்சியும், மதவெறி, இனவெறி,மொழிவெறி ஆர்ப்பாட்டங்களுக்கும் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. 

தேவனின் செயலை அறிய இயலாத மனுகுலம் துன்மார்க்கத்தையும், துஷ்டதனங்களையும் தூக்கிபிடித்து நிற்கின்றது. அவர் ஒருவனை – ஒன்றை எழும்ப அனுமதிக்கின்றார். எழும்ப அனுமதிக்கும் அதேநாளில் அதற்குமுடிவுரையும் எழுதி முத்திரையிட்டுள்ளார். இதனால் அதை ஒருவரும் அறியார். காலம் வரும்போது ஐயோ எப்படிப்பட்டவன் விழுந்து போனானே என்று கதறும் பின்னடியார்கள் உண்டாவார்கள். 

துன்மார்க்கத்துக்கு முடிவு உண்டு. பாவத்துக்கு முடிவு உண்டு. அக்கிரமத்துக்கு முடிவு உண்டு.  நியாயாதிபதியாகிய இயேசுவை காணாத – அறியாத கண்களின் அலறும் சத்தம் வெகு விரைவில் கேட்கப்படும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. 
பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும், சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும் கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள். 
உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை. இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று; ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள். 
மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று, அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு, தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள். 

பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான். வெளி 18:11-20.

ADD YOUR COMMENT

Powered By Indic IME