கர்த்தர் என்று கேட்டவுடனே பேதுரு கடலில் குதித்தார்.
Peter heard that it was Lord,he put on his outer garment and plunged into sea. (John 21:7)
Mark 11:3; Luke 2:11; Acts 2:36; Acts 10:36; 1Corinthians 15:47; James 2:1; Song 8:7; Matthew 14:28-30; Luke 7:47; 2 Corinthians 5:14.
ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக் கொண்டு கடலிலே குதித்தான். (யோவான் 21:7)
மாற்கு 11:3; லூக்கா 2:11; அப்போஸ்தலர் 2:36; அப்போஸ்தலர் 10:36; 1கொரிந்தியர் 15:47; யாக்கோபு 2:1; உன்னதப்பாட்டு 8:7; மத்தேயு 14:28-30; லூக்கா 7:47; 2கொரிந்தியர் 5:14.
கர்த்தர்:
தன் கட்டளைகளை விட்டும், தன்னோடிருப்பதை விட்டும் வெளியேறிய சீடர்களைத் தேடி இயேசு கிறிஸ்து களத்து மேட்டுக்கு வந்தார். ஆதாம் ஏவாளை தேடி புதர்களண்டையிலே வந்த தந்தையாம் தேவனை போல, குமாரனாகிய கிறிஸ்துவும் அவரது சீடர்களை தேடி கடற்கரைக்கு வந்துவிட்டார். தேடி வந்தவரை அன்பான சீஷன் அடையாளம் கண்டுக்கொண்டார். அதினிமித்தம் அவர் கர்த்தர் என்று கூறினார். கர்த்தர் என்ற வார்த்தையை கேட்டவுடனே பேதுரு தண்ணீரில் குதித்து விட்டார்.
தான் வஸ்திரமில்லாமல் கோவணத்துடன் இருந்ததினால் மேலாடையை கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்தார். இந்த பகுதியிலிருந்து ஒருசில உண்மைகளை நாம் அறிந்துக் கொள்வோமாக.
ஒன்றாவது, இயேசுவின் சத்தத்தை அறிந்து கொண்ட சீஷர்கள். அவரை விட்டு விலகியிருந்தாலும், பின்வாங்கி போயிருந்தாலும் அவரின் சத்தத்தை அறிகிறவர்களாக இருந்தார்கள். இந்த அறிதலே அவர்களை மறுபடியும் அவரிடம் திரும்பி வரவைத்தது.
2 வதாக, இயேசுவை கர்த்தர் என்று விளங்கிக்கொண்டனர். தூரத்தில் கரையில் நின்று கூப்பிடுகிறவரை அடையாளம் கண்டுக்கொண்டனர். இயேசுவை கர்த்தராக அறிகிற அறிவு மாம்ச சுபாவத்திலும், உலக சிந்தையிலும் நிலைகொண்டிருக்கிறவர்களால் அடைய இயலாது.
3 வதாக, அன்பு கூருதலே இயேசுவை அறிகிறதற்கும், விளங்கிக்கொள்வதற்கும் ஏற்றதாயிருக்கிறது. யோவானுக்குள் இயேசுவை நேசிக்கும் உன்னத அன்பு நிலைகொண்டிருந்ததினால் இந்த வெளிப்பாடு உண்டானது. இதனால்தான் 1யோவான் 4:8 ல் அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையான அன்பு அவரை அடையாளம் காட்டும். உலகத்திலும், மாம்சத்திலும், உறவிலும் கொண்டிருக்கும் அன்பைவிடவும் கிறிஸ்துவில் கொண்டிருக்கும் உன்னத அன்பே அவரை அறிய வைக்கின்றது.
4 வதாக, ஆண்டவரை விட்டு விலகி உலக காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறவர்கள் நிர்வாணிகளாக்கப்படுகிறார்கள். கீழ்படியாமையே பாவமாகும். விலகிச் செல்வதே கீழ்படியாமையாகும். பாவமே நம்மை நிர்வாணியாக்கும். நாம் நிர்வாணியாக்கப்பட்டபின்பு உலகத்தோடும், மாம்சத்தோடும் ஒத்து வாழ இயலும். தேவனோடு, சபையோடு, தேவமனிதர்களோடு ஒருபோதும் ஒத்துவாழ இயலாது.
5 வதாக, கீழ்படியாமையினால் உண்டான நிர்வானம் நம்மை ஆழத்தில் தள்ளும். பண ஆசை கொண்ட யூதாஸ் நிர்வாணமாக்கப்பட்டு மரத்தில் தொங்கினான். பொருளாசைக் கொண்டு தன்னை நிர்வாணியாக்கிக்கொண்ட பேதுரு கடலின் ஆழத்தில் குதித்தான். நிர்வாணம் நம்மை ஆழத்தில் தள்ளிவிடும். நிர்வாணம் மூடப்படுவது வரையிலும் நம்மை ஆழத்திலேயே கிடக்க வைக்கும்.
இயேசுவை விட்டு பின்வாங்கிப்போனவர்கள் மறுபடியும் கிறிஸ்துவில் புதுப்பிக்கப்பட்டு இயேசுவோடு தங்களை இணைத்துக்கொண்டு புது சிருஷ்டிகளாக மாறி அவர் தரும் புத்தாடைகளை அணிந்துக்கொள்வோமாக.
உணவுக்காய் தூரம் போனவர்கள் கூட நிர்வாணியாக்கப்பட்டார்கள். அவரை விட்டு விலகச் செய்யும் காரியங்களை செய்யாதிருப்போமாக.
ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. எபிரேயர் 6:4-8.
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 1யோவான் 4:4-9.