கரையிலிருந்த சீஷர்கள் மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
other disciples came in little boat dragging net with fish. (John 21:8)
Job 34:14; Psalms 10:9; Son 1:4; Isaiah 5:18; Jeremiah 31:3; Ezekiel 32:3; Hosia 11:4; Amos 4:2; Matthew 13:48; John 5:44; Acts 20:30; Jude 1:22.
மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழுத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்து கொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். (யோவான் 21:8)
யோபு. 34:14; சங்கீதம் 10:9; உன்னதப்பாட்டு 1:4; ஏசாயா 5:18; எரேமியா 31:3; எசேக்கியேல் 32:3; ஓசியா 11:4; ஆமோஸ் 4:2; மத்தேயு 13:48; யோவான் 5:44; அப்போஸ்தலர் 20:30; யூதா 1:22.
இணைந்து பணியாற்றும் சீஷர்கள்:
போட்டிகளால் நிறைந்திருந்த சீஷர்கள் இயேசுவின் மரணத்துக்கு பின்பு இயேசுவின் முன்னிலையில் இணைந்து பணியாற்றுகிறார்கள். மீன்களுள்ள வலையை யாவரும் இணைந்து இழுத்து கரை சேர்க்கிறார்கள். சமுத்திரத்தில் கிடந்த மீன்கள் வலையின் மூலமாக கரையிலே கொண்டுவரப்படுகின்றது. இந்த செயலில் உள்ள மூன்று காரியங்களை இன்றைய தியானத்தில் நாம் காண்போம்.
இயேசு கிறிஸ்து மரித்தவராயிருந்தாலும், உயிர்த்து ஆவியாக காணப்படிருந்தாலும் எல்லாவற்றையும் அவரே கட்டுப்படுத்துகின்றார். இந்த கட்டுப்படுத்தும் ஆற்றல் அவருடைய அளவில்லாத ஞானத்தினாலும், பெலத்தினாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமது ஆழ் ஞானத்தினால் கடலின் ஆழத்தில் உள்ள மீன்களை காண்கின்றார், அறிகின்றார். தமது பெலத்தினால் அவைகள் வலையில் அகப்படும்படி செய்கின்றார். ஆம்.. நமது தேவைகள் யாவையும் அவரே கட்டுபடுத்துகின்றார். நம் நினைவுகளை அறிந்து யாவற்றையும் தமது ஆதீனத்துக்குள் வைத்துள்ளார். அவரின் அனுமதியில்லாமல் மீன்கள் வலையில் அகப்படாது, கடலிலிருந்து மீன்களை கரையில் கொண்டு வரவும் இயலாது.
சீஷர்கள் இணைந்து செல்ல வேண்டும். இணைந்து உழைக்க வேண்டும். இணைந்து நிற்க வேண்டும். உழைப்பிலும், பிழைப்பிலும் இணைந்தே பணி செய்ய வேண்டும். அவர்களுக்குள் இணைந்த மனநிலையை உருவாக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து மூன்றரைவருட காலமாக அவர்களோடு உழைத்தார். அவர்களுக்காக பணியாற்றினார். அவர்கள் தன்னோடும் இணைந்து பணியாற்ற வேண்டும், தங்களுக்குள்ளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதுவே இயேசுவின் விருப்பமாகும். ஒரே காரியத்துக்காக அழைக்கப்பட்டவர்கள், ஒருவராலே அழைக்கப்பட்டவர்கள் ஒருமித்து நடவாதிருந்தால் அது ஆவியானவரை துக்கப்படுத்தும் செயலாகும். அங்கே தேவனுடைய ஆவியானவர் நிலைகொண்டிரார். தேவனுடைய மனிதர்கள் இணைந்து நின்று திருப்பணி செய்க.
சீஷர்கள் இணைந்து வலையை இழுத்து மீன்களை சொந்தமாக்கியதைப்போல பாவ கடலுக்குள் கிடக்கும் தேவ இராஜ்ஜியத்துக்குரிய மீன்களை பாவகடலிலிருந்து சுவிசேஷம் என்ற வலையின் மூலம் இழுத்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் சேர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை கற்பிக்கின்றார். மீன்களுக்கு கடல் புகலிடமாக இருந்ததுபோல பாவம் செய்கிறவர்களுக்கு பாவம் என்ற கடல் புகலிடமக உள்ளது. பாவகடல் நரகத்துக்கு இழுத்து செல்லும் பாய்ச்சல் மிகுந்த நீரோட்டங்களை கொண்டிருப்பதினால் அந்த கடலிலிருந்து தமக்குரியவர்களை கரை சேர்க்க தேவகுமாரன் தமது சீஷர்களை – ஊழியர்களை – விசுவாசிகளை ஏற்படுத்தியுள்ளார். பாவ கடலில் கிடக்கும் மனிதர்களை மீட்டு கொண்டுவரும் பணியை நாம் இணைந்துதான் செய்ய வேண்டும். போட்டி மனப்பான்மையில் செய்யலாகாது. அவர் பிரிந்திருக்கவில்லை. தந்தையோடும், ஆவியோடும், சபையோடும் இணைந்திருப்பதைபோல நாமும் ஒருவரிலொருவர் இணைந்து வலையை இழுத்து ஆத்துமாக்களை ஜீவகரை சேர்ப்போமாக.
சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள். சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
விசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். பிலிப்பியர் 1:12-21.