அவரில் எவ்வளவேனும் இருளில்லை
In Him is no darkness at all. (1John 1:5)
James 1:17; Joe 2:2; Psalms 18:11; Psalms 139:12; Matthew 10:27; Luke 12:3; John 8:12; John 12:46; Colossians 1:13; 1John2:8.
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.(1 யோவான் 1:5)
யாக்கோபு 1:17; யோவேல் 2:2; சங்கீதம் 18:11; சங்கீதம் 139:12; மத்தேயு 10:27; லூக்கா 12:3; யோவான் 8:12; யோவான் 12:46; கொலோசெயர் 1:13; 1யோவான் 2:8.
இருள் இல்லாதவர்.
இருளை இரவின் அம்சமாகவும், தீமையின் மறு உருவாகும், அறியாமையின் தன்மையாகவும், பிசாசுகளின் தண்டனையாகவும், பாவத்தின் வாழ்விடமாகவும் விவிலியம் கூறுகின்றது. இவைகளில் எத்தகைய தன்மை கொண்டதான இருளும் பிதாவாகிய தேவனிடம் இல்லை. ஏனெனில் அவர் ஒளியாய் இருக்கிறார். அவரில் எவ்வளவாயினும் இருள் இல்லை என்பதே யோவானின் மெய்ப்பாடு.
விளக்கில் இருள் இருக்கிறது என்கிறார்கள். சூரியனிலும் இருள் என்ற வெற்றிடம் இருக்கும் என்கிறார்கள். ஆனால் ஒளியை உண்டாக்கிய ஒளியாக வெளிப்பட்ட தேவனில் இருள் இல்லை. அவர் இருளை மறைவிடமாக கொண்டிருக்கிறார் என்பதினால் அவர் இருளில் வாசம் செய்பவர் அல்ல. இருள் ஆதியிலிருந்தது அல்ல. தேவனின் படைப்பின் ஒரு அம்சம். வெளிச்சத்தை வித்தியாசப்படுத்தி காட்டவும், கால குறியீட்டுக்காகவும், மனிதர்கள் ஜீவராசிகள் ஓய்வெடுத்து கொள்வதற்காகவும் இருளை படைத்தாரேயன்றி இது ஆதி தன்மை கொண்டதல்ல.
தேவனிடம் இருள் இல்லை என்றால் தீமையும் பாவமும் அவரிடம் இல்லை என்றே பொருள். இருள் இல்லாததினால் தான் அவர் மெய்யான ஒளி எனப்படுகிறார். இருளாகிய தீமையையும் பாவத்தையும் சாத்தானையும் மேற்கொள்வதற்காக தான் அவர் ஒளியாக காணப்படுகிறார். ஒளியை இருள் அல்ல, இருளையே ஒளி மேற்கொள்ளும். எனவே அவரில் இருள் இல்லை.
இருள் இல்லாத ஒளியாக, பாவமில்லாத பரிசுத்தராக, தீமை இல்லாத நன்மை யாளராக வெளிப்பட்டார். தேவனுக்கு எதிராக கலகம் விளைவித்த அவர்களை ஒளியிலிருந்து வேறு படுத்துவதற்காகவே அவர்களை இருளுக்குள் அடைத்துப் போட்டார். இருளுக்குள் அடைக்கப்பட்ட சிற்றொளியாகிய அவர்கள் தங்களை தெய்வங்களாகவும் அக்னிபகவான்களாகவும் காண்பித்து உலகத்தை மாய வலைக்குள் தள்ளிவிட்டார்கள். இவர்களின் பிடியிலிருந்து மனுக்குலத்தை மீட்பதற்காகவே இருள் இல்லாத ஒளியாக வந்தார்.
இருள் இல்லாத தேவன் நம்மில் எதிர்பார்ப்பது என்ன?.
முழுவதும் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று…
கசப்புகள் வெறுப்புகள் வைராக்கியங்கள் கோபங்கள் கொண்டிராதவர்களாய் இருக்க வேண்டும் என்று….
யாவரோடும் சமாதானமாய் இருக்க வேண்டும் என்று..
இருளோ இருளின் வஸ்துக்களோ தங்களையும் தங்களில் உள்ள ஒளியையும் ஒருபோதும் மேற்கொள்ள இயலாது என்ற நம்பிக்கை கொண்டிருக்க…
வெளியரங்கமான – பட்டவர்த்தனமான வாழ்க்கை வாழ எதிர்பார்க்கிறார்.
சில கேள்விகள்…
ஒளியும் இருளும் சேர்ந்ததுதான் உலகம் என்ற கூற்று சரியா?..
நாம் பாவம் செய்யும்போது தேவன் நம்மில் இருளை அனுமதிக்கிறாரா?…
இருள் இல்லாத உலகம் என்ற ஒன்று வெளிப்பட வாய்ப்பு உண்டா?…
அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்ராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்.
1தீமோத்தேயு6:15,16.