இயேசு: பிதாவே நீர் எப்பொழுதும் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்.
And I know that You always hear Me. (John 11:42)
Jn11:22; Jn8:29; J 12:27,28; Mat26:53; Heb5:7; Heb7:25; 1Kin9:3; 1Kin17:24; 1Kin18:36,37.
நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன், ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். (யோவான் 11:42)
யோவான் 11:22; யோவான் 8:29; யோவான் 12:27,28; மத்தேயு 26:53; எபிரெயர் 5:7; எபிரெயர் 7:25; 1இராஜாக்கள் 9:3; 1இராஜாக்கள் 17:24; 1இராஜாக்கள் 18:36,37.
நான் அறிவேன்:
பிதா தனக்கு எப்பொழுதும், எல்லா சூழ்நிலைகளிலும் செவிக்கொடுக்கிறார் என்பது குறித்து இயேசுவுக்கு தெரியும். ஏனெனில் இயேசு கிறிஸ்து பிதாவுக்கு பிரியமானதை எப்பொழுதும் செய்கிறார். பிதாவுக்கு சித்தமானதை செய்வதை தனது சொந்த அலுவலாகவும், அன்றாட போஜனமாகவும் கொண்டிருந்தார். ஆகையினால் பிதா கிறிஸ்துவின்மேல் பிரியமானவராகக் காணப்பட்டார்.
நாமும் தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும், ஆவிக்கும், சபைக்கும் பிரியமானவைகளைச் செய்வதில் அதிக சிரத்தையெடுக்க வேண்டும். பிதா தன்னை நேசிக்கும்படியாக நடந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து நடந்த அடிச்சுவடுகளில் நடப்பதே பிதா நம்மை நேசிப்பதற்கு காரணமாகின்றது. அவர் நடந்ததுபோல நடப்பதும், அவர் வாழ்ந்ததுபோல வாழ்வதும், அவர் பேசியதுபோல பேசுவதும், அவர் செய்ததுபோல செய்வதுமே நாம் அவரின் அன்பை பெற காரணமாகின்றது. இவ்விதம் நாம் அவருக்கு பிரியமானதை செய்யும்போது அவர் நமக்கு செவிக்கொடுக்கிறார் என்பது அனுபவத்தினூடாக காணப்படும்.
தான் ஜெபித்தபோதும், கேட்ட போதும், விரும்பிய போதும் பிதாவாகிய தேவன் செவிக்கொடுத்ததை உணர்வுபூர்வமாக அறிந்ததினால்தான் பிதாவாகிய நீர் எனக்கு செவிக்கொடுக்கிறீர் என்று அறிந்திருக்கிறேன் என்றார் இயேசு.
நமக்கு பிதாவாகிய தேவன் செவிக்கொடுப்பதையும், நாம் அவருக்கு பிரியமானவர்களாய் இருக்கிறோம் என்பதையும் நாம் அறிந்து அனுபவித்திருக்காமல் சாட்சி பகர இயலாது. இதனை அனுபவ அறிவு அல்லது Practical Knowledge என்றும் கூறலாம். இந்த அறிவு கிறிஸ்துவோடுள்ள நல்ல உறவில் மலர வேண்டும். உலகியல் அனுபவங்களை கொண்டோ, சமூக அனுபவங்களை கொண்டோ, அறிவுபூர்வமான அனுபவங்களைக் கொண்டோ கணக்கிட இயலாது. நமக்கும் தேவனுக்கும் உள்ள நல் உறவில் வெளிப்படும் அனுபவமே மற்றவர்களின் வாழ்வைக் கட்டி எழுப்பும் நல்ல சிந்தனைகளாகும்.
நமக்கும் தேவனுக்கும் இடையில் கிறிஸ்து மட்டுமே இருப்பாரானால் நாம் அவரை அறிய முடியும். அவர் செய்வதையும் நம்பி முன்னேறமுடியும்.
என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:8.