என்னைத் தொடாதே, நீ சகோதரரிடம் போய் நான் ஏறிப்போவதைச் சொல்லு
Do not cling to Me, for I have not yet ascended to My Father;go to My brethren and say to them. (John 20:17)
John 13:1,3; John 14:2,6,28; John 16:28; John 17:5,11,25; Luke 24:49-51; Ephesians 1:15-23; Ephesians 4:8-10; 1Peter 1:3; Psalms 68:18; Psalms 89:26.
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.(யோவான் 20:17)
யோவான் 13:1,3; யோவான் 14:2,6,28; யோவான் 16:28; யோவான் 17:5,11,25; லுக்கா 24:49-51; எபேசியர் 1:15-23; எபேசியர் 4:8-10; 1பேதுரு 1:3; சங்கீதம் 68:18; சங்கீதம் 89:26.
நான் ஏறிப்போவதை அறிவி.
தன் பாதத்தைப் பிடித்துக்கொண்டு கதறி அழுத மரியாள் அதே போலொத்த செயலை திரும்பவும் செய்யவேண்டாம் என்று இயேசு பணிக்கின்றார். அதற்குரிய காரணம் என்னவெனில் இயேசு கிறிஸ்து பிதாவிடம் ஏறிப்போகிறவராயிருப்பதினாலும், தொட்டுப்பார்க்கவியலாத மகிமையின் சரீரம் உடையவராக இருப்பதினாலுமே.
இயேசு கிறிஸ்து பிதாவினிடமிருந்து வந்தவர். இப்பொழுது பிதாவினிடமே திரும்ப போகிறார். மகிமையை துறந்து, ஏழை கோலம் பூண்டு, அடிமையின் ரூபமெடுத்து, மனித சாயலாக வந்தவர். இப்பொழுது மனித சரீரத்தை மகிமையின் சரீரமாகக் கொண்டவராய் பிதாவிடம் செல்கின்றார். எடுத்துக்கொண்ட மனித சரீரத்தை மண்ணினில் விட்டுவிடவில்லை. அதே மனித சரீரத்தை மகிமையின் சரீரமாகக் கொண்டு பரமேறுகிறார். அதே மனித சரீரத்தோடு பரமேறுவதின் காரணம் இரண்டாகும். ஒன்று, இயேசு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக பிதாவின் முன்பு காணப்பட வேண்டும் என்பதாகும். இன்னொன்று, இதே பூமியில் இராஜாவாக திரும்ப வரவேண்டியிருப்பது என்பதாகும்.
இயேசு கிறிஸ்து பிதாவினிடம் ஏறிப்போவதை என் பிதா – உங்கள் பிதா, என் தேவன் – உங்கள் தேவன் என்றுக் கூறி கிறிஸ்தவ ஐக்கியத்தின் மூலகாரணத்தை வெளிப்படுத்துகின்றார். என்னில் எவ்விதம் ஐக்கியம் கொண்டிருக்கிறீர்களோ அவ்விதமே என் தேவனிடமும் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும். என் பிதாவை உங்கள் பிதாவாகவும், உங்கள் தேவனாகவும் தொழுதுவர வேண்டும் என்பதற்கான அறிக்கையேயாகும்.
இயேசு பரலோகத்துக்கு ஏறிச் செல்வதை சீஷர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பது மரியாளுக்குரிய கட்டளை. என்னை நேசித்து என் பாதத்தண்டையில் இருப்பதை விடவும் என்னைநேசித்து என்னைப்பற்றி – என் உயிர்ப்பை, பரமேறுதலை பற்றி பிறருக்கு அறிவிப்பதே உன்னதமானது என்று காண்பிக்கின்றார். இயேசு பரமேறிச் செல்வதை முதன் முதலாக மரியாளுக்கு அறிவித்து அதன் பிற்பாடே சீஷர்களுக்கு அறிவிக்கின்றார்.
மரியாள் இயேசுவை நேசித்ததை விடவும், இயேசு மரியாளை அதிகமாக நேசித்தார். இயேசுவின் அன்பு தெய்வ இரகசியங்களை வெளிபடுத்தியது. அன்பு திரளான பாவங்களை மூடுவது மட்டுமல்ல, உன்னதமான ரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தது மட்டுமல்ல பரலோகத்துக்கு ஏறிப்போகிறார் – சென்றுள்ளார் – திரும்ப வரப்போகிறார் என்பதுவும் சேர்ந்ததுவே உன்னத சுவிசேஷம்.
அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். அப்போஸ்தலர் 1:3-12.