எங்கள் ஐக்கியம் பிதாவோடும் குமாரனோடும் இருக்கிறது.
Truly our fellowship is with the Father and with His Son Jesus Christ. (1 John 1:3)
1John 1:7; 1John 2:23,24; John 14:20-23; John 17:3,11,21; 1Corinthians 1:9,30; 2 Corinthians 13:14; Philippians 2:1,2; Philippians 3:9-11; Hebrew 3:14.
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. (1 யோவான் 1:3)
1யோவான் 1:7; 1யோவான் 2:23,24; யோவான் 14:20-23; யோவான் 17:3,11,21; 1கொரிந்தியர் 1:9,30; 2கொரிந்தியர் 13:14; பிலிப்பியர் 2:1,2; பிலிப்பியர் 3:9-11; எபிரெயர் 3:14.
எங்கள் ஐக்கியம்.
வாசகர்கள் சீஷர்களோடு ஐக்கியமாயிருக்க வேண்டுமென்பதற்குரிய இரண்டாவது காரணத்தைக் குறிப்பிடுகின்றார். முதல் காரணம் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதின் மூலம் அறிவிப்பவர்களோடு ஐக்கியமடைவது ஆகும். இரண்டாவது காரணம் கிறிஸ்துவோடும், பிதாவோடும் ஐக்கியபட வேண்டுமென்பதாகும். இதில் இரண்டுவிதமான
நிலைகள் அல்லது படிகள் இருப்பதை அறியமுடிகின்றது.
முதல் படிநிலை என்பது, சுவிசேஷத்தைக் கேட்டவர்கள் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களோடு நல்ல உறவில் வளர்ந்திருக்க வேண்டும் என்பதாகும். அப்பொழுதுதான் அறிவிக்கிறவர்களின் நோக்கம் வெற்றியடையும். விசுவாசத்தில் வளரவும், விசுவாசத்தின் மூலமாய் நல்ல விளைச்சலை பெறவும் இது அவசியமாகும்.
இரண்டாம் படிநிலை என்பது, நீங்கள் எங்களோடு ஐக்கியமானால் நாங்கள் மேலான ஐக்கியத்தை உங்களுக்கு காண்பிக்கிறோம் என்பதாகும். சுவிசேஷத்தைக் கேட்கிறவர்கள் அறிவிக்கிறவர்களோடு நல்ல ஐக்கியத்தைக் கொண்டிருந்தால்தான் அறிவிக்கிறவர்களை நியமித்தவரும், அனுப்பினவருமாகிய பிதாவோடும் குமாரனாகிய கிறிஸ்துவோடும் ஐக்கியமடைய இயலும். இதில் அறிவிக்கிறவர்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலை என்னவெனில் தங்களோடு ஐக்கியப்பட்டவர்களை தெய்வீகத்துவத்தோடு ஐக்கியப்பட வழிநடத்துவதாகும். கண்களினால் காணப்படுகிற சபையோடு ஐக்கியப்பட்டுள்ள விசுவாசிகளை கண்களினால் காணப்படவியலாத கிறிஸ்துவின் சரீரத்தோடு – ஆவிக்குரிய சபையோடு ஐக்கியபடுத்துவதில் வெற்றி காண்கிறவர்களே உண்மையான ஊழியக்காரர்கள்.
சபையானது கிறிஸ்துவின் சரீரமாகும். அது பிதாவாகிய தேவனால் ஆயத்தம் செய்யப்பட்டதாகும். அந்த சரீரத்தின் நிழலாட்டமே நாம் காண்கின்ற சபைகள். எல்லா சபைகளும் ஒன்றுக்கொன்று பிரிந்து காணப்பட்டாலும் ஒருவருக்கொருவர் வேறுபாடுகள் கொள்ளாத ஒரே சரீரமாகிய கிறிஸ்துவின் சரீரத்தோடு இணைக்கப்பட முயற்சிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். இதற்காகவே ஊழியக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஊழியக்காரர்கள் தங்கள் சபையென்று பெருமைபட்டுக்கொள்வதிலும் அதற்காக ஓடியாடி உழைப்பதிலும் கவனம் செலுத்தும் அதே வேளையில் எல்லா சபைகளும் கிறிஸ்துவின் சரீரமாகிய ஆவிக்குரிய சபையோடு இணைக்கப்படுகிறது என்பதையும் மறந்து போகலாகாது.
ஒரு விசுவாசி தங்கள் ஊழியகாரரோடும், பிதாவோடும், குமாரனாகிய கிறிஸ்துவோடும் பிரிக்கப்படவியலாதபடிக்கு எப்பொழுது இணைக்கப்படுகிறாரோ அப்பொழுதுதான் தேசத்தில் தேவனின் மகத்துவம் வெளிப்படும்.
இவ்வித ஐக்கியத்தினால் உண்டாகும் மாற்றம் என்ன?
ஒருவருக்கொருவர் பரஸ்பர ஐக்கியத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்.
வேறுபாடுகள் களையபடுகின்றது. வேறுபாடுகள் காணப்பட்டாலும் அதை கவனத்தில் கொள்ளார்.
கிறிஸ்துவின் சாயல் ஒளியாக தேசத்தில் பரிணமிக்கும்.
அன்பு எல்லாவற்றையும் ஆட்கொள்ளும்.
தேவ இராஜ்ஜியத்தின் விரிவாக்கம் வேகம் பெறும்.
இது எனது சபை, இவர்கள் என் மக்கள் என்று சொல்வது சரிதானா?..
வரங்கள், தாலந்துகள், ஆசீர்வாதங்கள் போன்றவைகளில் நாம் நிறைவடைய முடியுமா?..
ஒருவருக்குள் கிறிஸ்துவை எந்த அளவுக்கு வளர்ச்சியடைய செய்துள்ளேன் என்று கவனித்தீர்களா?…
என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன். கலாத்தியர் 4:19.
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; ரோமர் 8:29.