இயேசு உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்

இயேசு: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்.

Jesus said to her,Your brother will rise again. (John 11:23)

1Cor15:15-24,50-57; 1Thes4:13-17; Rev20:4-6.

இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். (யோவான் 11:23)

1கொரிந்தியர் 15:15-24,50-57; 1தெசலோனிக்கேயர் 4:13-17; வெளி20:4-6.

உயிர்த்தெழுதல் உண்டு.
சதுசேயர் வேண்டுமென்றால் நம்பாமலிருக்கலாம். ஆனால் உயிர்த்தெழுதல் உண்டு. இது ஆறுதல் சொல்லும்படியாய் சொல்லப்பட்ட வார்த்தையல்ல. நிச்சயமான வார்த்தை. உறுதியான வார்த்தை. இயேசுகிறிஸ்து லாசருவின் உடனடி உயிர்ப்பைக் குறித்து பேசுகிறார். 21,22 ஆகிய வசனங்களின் மூலம் தன் விருப்பத்தை வெளிப்படுத்திய மார்த்தாளுக்கு வரலாற்றில் நிகழப்போவதை எடுத்து கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் வாக்குகள் உண்மையானவை. நிச்சயமானவை. அவர் சொல்லியும் செய்யாமலிருப்பதில்லை. செய்யாததை சொல்லுவதுமில்லை. அவரின் வார்த்தைகள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் நம்மில் தூண்டி விடுகிறது. மனம் மாறுகிறவருமல்ல. மறுதலிப்பவருமல்ல. தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று சொல்லுகிறவருமல்ல. முயற்சி செய்து பார்க்கிறேன். சொன்னேன் அல்லவா, முயற்சி செய்கிறேன் என்று சொல்லுகிறவருமல்ல.

விசுவாசத்தை ஊட்டும் வார்த்தைகள் உண்மையானவை. வழுவா தன்மை கொண்டவை. அதனால்தான் விசுவாசமும் பொய்யானவைகளோடு இணைந்து நிற்காமல் சத்தியத்தோடு இணைந்து நிற்கிறது. அவரால் உனக்கு சொல்லப்பட்ட வாக்குகள் தேடி கண்டுபிடித்து சொன்ன வார்த்தைகளல்ல. உண்மை தெய்வமாகிய அவருக்குள் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள். அவருக்குள் இருந்த வார்த்தை மாம்சமாகியது உண்மையாயின் அவரிடத்திலிருந்து வரும் வார்த்தைகளும் வாழ்வில் புது வடிவம் பெறும்.

உயிர் உண்டாக்கியவரும் அவரே தான். உயிர் கொடுப்பவரும் அவரேதான். ஒருவரில் உயிரை நிலைநிறுத்தி வைக்கும் அதிகாரமும், எடுத்துப்போடும் அதிகாரமும் அவரிடமே உள்ளது. உயிர் கொடுக்கிறவர் உயிரோடிருக்கிறார். என்றென்றும் நித்திய நித்தியமாய் வாழ்கிறார். நாமும் அவரைப்போல வாழும் படியாகவே உயிர் தந்துள்ளார். எனவே அவரை உண்மையாய் – உறுதியாய் பற்றிக்கொண்டு நித்திய ஜீவன் பெற்று நிலைத்து வாழுவோம்.

கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் கர்த்தரையே நம்பியிருக்கிறபடியால் கர்த்தர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வார். ஏசாயா26:3.

ADD YOUR COMMENT

Powered By Indic IME