உடல்கள் ஓய்வுநாளில் சிலுவையில் தொங்கலாகாது.
because it was Preparation Day,bodies should not remain on cross on Sabbath. (John 19:31)
Deuteronomy 21:22,23; Leviticus 23:7-16; Joshua 8:29; Galathians 3:13; Act 5:30; Psalms 9:13; Psalms 40:2,3; Psalms 41:9; Psalms 113:7; Psalms 145:14.
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.(யோவான் 19:31)
உபாகமம் 21:22,23; லேவியராகமம் 23:7-16; யோசுவா 8:29; கலாத்தியர் 3:13; அப்போஸ்தலர் 5:30; சங்கீதம் 9:13; சங்கீதம் 40:2,3; சங்கீதம் 41:9; சங்கீதம் 113:7; சங்கீதம் 145:14.
கிறிஸ்து நமக்காக சாபமானார்:
நியாயப்பிரமாணவிதிகளின்படி சிலுவையிலோ, மரத்திலோ தொங்குகின்ற, தொங்கவிடப்பட்ட மரித்துப்போன உடல்கள் இரவு வருமுன்பாக அகற்றப்பட்டிருக்க வேண்டும். அதன் படியாக மரித்த இயேசுவின் உடலும் மற்ற இருவரின் உடல்களும் அன்றே சிலுவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. உரோம சட்டதிட்டங்களின்படி உடல்கள் கெட்டுபோவதுவரையிலும் சிலுவையில் தொங்கவிடுவார்கள். அதன்பின்பு பறவைகள் வந்து உடல்களை தின்றுவிடும். இதனால் பூமியானது செத்த உடல்களினால் கெட்டுபோகாமல் காணப்படும்.
இயேசுகிறிஸ்து ஓய்வுநாளுக்கு முந்தின நாள் மரித்து போனார். மாலை 6 மணிக்கு முன்பதாக உடல்களை சிலுவையிலிருந்து இறக்கி கல்லறைக்குட்படுத்தினார்கள். இவ்விதமாக சிலுவையில் தொங்கிய இயேசு சபிக்கப்பட்டவராக கருதப்பட்டார். கலாத்தியர் 3:13 ன் படி கிறிஸ்து நமக்காக சாபமானார். நியாயப்பிரமாணத்தினால் உண்டான சாபத்துக்கு நீங்கலாக்கப்படும்படியாக இயேசு கிறிஸ்து சாபமானார்.
மனிதர் தேவகட்டளைக்கு எதிராக கீழ்படியாமற்போனதால் தேவனுடைய கோபத்திற்கு ஆளாகி சாபத்திற்குள்ளானார்கள். சாபத்திற்குள்ளானவர்களை மீட்கும்படியாக தேவன் தமது நியாயப்பிரமாணங்களை கொடுத்தார். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு உட்படாதுபோன மனுகுலம் மேலும் மேலும் சாபத்திற்குள்ளானது. சாபம் தண்டனையாக மாறிப்போனதினால் மரணமே பங்காக அமைந்தது.
சாபத்துக்குள்ளான மனிதனை மீட்டெடுக்க நியாயப்பிரமாணத்துக்குட்பட்ட கிறிஸ்துவை தேவன் உலகத்தில் அனுப்பினார். இயேசுகிறிஸ்து நியாயபிரமாணத்துக்கு கீழ்படிந்து அதன் ஆக்ரோஷமாகிய சாபத்தை தன்மேல் ஏற்றுக்கொண்டு சாபத்துக்கும், மரணத்துக்கும் முடிவுண்டாக்கினார். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள் மேல் இனி சாபத்துக்கு அதிகாரம் இல்லை. ஆகையினால் 1கொரிந்தியர் 12:3 ன் படி இயேசுகிறிஸ்துவை சபிக்கப்பட்டவர் என்று ஒருவரும் கூறலாகாது என்ற எல்லைக்குட்படுகின்றோம்.
கிறிஸ்து நமக்காக சாபமாகி நமது சாபங்களை நீக்கிப்போட்டதினால் ஒருவரும் பிறிதொருவரை சபிக்கலாகாது. ஆசீர்வதிப்பதேயன்றி சபிக்கலாகாது. மத்தேயு 5:44. மேலும் ஒரே வாயிலிருந்து துதித்தலும், சபித்தலும் உண்டாக இடம் தரலாகாது. யாக்கோபு 3:10. சாபத்துக்குள்ளானவர்களை மீட்க ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆசீர்வாதத்தின் பிள்ளைகளாக வாழ வேண்டும். சாபத்தை சுமந்த இயேசு அதை சிலுவையிலே கொன்று முடிவுண்டாக்கி ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துவாக உயர்ந்திருக்கின்றார்.
எனவே நாம் ஆசீர்வதிப்பதேயன்றி சபியாதிருப்போம். அன்பு காட்டுவதேயன்றி வெறுப்பை காட்டாதிருப்போம். மாரநாதா.
உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். கொலோசெயர் 2:13-15.
அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. கலாத்தியர் 3:9-14.