ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்
because He who is in you is greater than he who is in the world. (1John 4:4)
1John 4:13; 1John 3:24; John 10:28-30; John 12:31; John 14:30; John 16:11; John 17:23; Romans 8:10,11; 1Corithians 2:12; 2Corinthians 6:16; 2Corithians 4:13,14; Ephesians 3:17; Ephesians 6:12.
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (1 யோவான் 4:4)
1யோவான் 4:13; 1யோவான் 3:24; யோவான் 10:28-30; யோவான் 12:31; யோவான் 14:30; யோவான் 16:11; யோவான் 17:23; ரோமர் 8:10,11; 1கொரிந்தியர் 2:12; 2கொரிந்தியர் 6:16; 2கொரிந்தியர் 4:13,14; எபேசியர் 3:17; எபேசியர் 6:12.
என்னுள் பெரியவர் இருக்கிறார்.
இந்த நிருபத்தின் துவக்கத்திலிருந்தே இதன் ஆசிரியர் நமக்குள் நிலைகொண்டிருக்க வேண்டியவைகள் குறித்துக் குறிப்பிடுகின்றார். இருதயத்துக்குள் வசனமும், ஆவியும் நிலைகொண்டிருந்தால் மட்டுமே உண்மையான மனந்திரும்புதல் உண்டாகும் என்றும், அங்கே கிறிஸ்து வாசமாயிருக்கிறார் என்றும் கூறி வருகின்றார். நமது தியானங்களின் மூலமும் இதனை நாம் தியானித்துள்ளோம். நமக்குள் வாழும் கிறிஸ்து வளரவேண்டும் என்பதே யோவானின் விருப்பம். அவர் நமக்குள் வளர்ந்து நம்மை முழுவதும் தமக்கென்று சொந்தமாக்கிக் கொள்வது என்பது நமது செயல்களிலும், பேச்சுகளிலும், நடைமுறைகளிலும் உள்ளது. இரட்சிக்கப்பட்டபின்பு காலம் செல்ல செல்ல வசனத்தையும் ஆவியையும் இழந்தவர்களாய் நிறைவுக்காகவும், பரிபூரணத்துக்காகவும், உயர்வுக்காகவும் பிறரையும் உலகத்தையும் மாம்சத்தையும் உழைப்பையும் நம்பி செல்கின்றோம். ஆடம்பர வாழ்வையும், பிறரின் உடைகளையும், உணவு பழக்கங்களையும், செல்வ பெருக்கத்தையும், ஆஸ்திகளையும், ஐசுவரியத்தையும், சபைகளையும், ஜனதிரள் கொண்டிருப்பதையும் இன்னும் இதுபோன்ற பலவற்றையும் பார்த்து பார்த்து அவைகளை மனதில் கொண்டுவந்து உயர்ந்திருந்த இயேசுவை குறுகிப்போகவைத்து பொருளாசையில் சாய்ந்து தேவனுடைய சாயலையும், மகிமையையும், பலத்தையும், அற்புதங்களையும் நடப்பிக்கமாட்டாதவர்களாய் மாறி வருகின்றோம்.
எனக்குள் இருக்கிறவர் பெரியவர் என்றால் உலகத்தின் சத்தமோ, உறவுகளின் சத்தமோ,மாம்சத்தின் சத்தமோ என்னை பாதிப்புக்குள்ளாக்காது. ஏனெனில் இவைகளின் சத்தத்தை விடவும் இயேசுவின்சத்தம் பெரியது. அவர் எனக்குள் வல்லமையுடையவராய் இருப்பதினால் தடைகளை தாண்டுகிறேன். குறைவுகள் குறித்து கவலைக் கொள்ள மாட்டேன். வியாதிகளை கண்டு பயப்படமாட்டேன். வலி வேதனைகளை கண்டு துவண்டு போகமாட்டேன். புயலைப்போன்ற நெருக்கடிகளைக் கண்டு ஓடியொழியமாட்டேன். நான் சாவாமல் பிழைத்திருந்து தேவன் எனக்குள் பெரியவராயிருந்து செய்த பெரிய கிரியைகளை விவரிப்பேன்.
படகில் இயேசுவை வைத்துக்கொண்டு பயந்து நடுங்கிய சீஷர்களைப்போல் நமக்குள் வல்லமையுடையவராகவும், அதிகாரமுடையவராகவும், எல்லாம் உடையவராகவும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறவராகவும், ஐசுவரியசம்பன்னராகவும், ஆரோக்கியம் கொடுக்கிறவராகவும் இருக்கிற இயேசுவை வைத்துக்கொண்டு சோறுக்கும், பொருளுக்கும், பணத்துக்கும் ஓடியலைந்துக் கொண்டிருக்கின்றோமே. ஏன்?..நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்துக் கொள்ளுங்கள். செங்கடலை பிளந்தவரை நினைவுகூருங்கள். ஐந்தாயிரம் பேருக்கு உணவு பகிர்ந்தவரை நினைவு கூருங்கள். மீனின் வாயில் பணத்தைக் கண்டுபிடித்தவரை நினைவுகூருங்கள். என்னை நோக்கிப்பாருங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள் என்று கூறுகின்றார் இயேசு.
இயேசு எவ்வளவு பெரியவராய் இருக்கிறார் என்பதை காண்பிக்கிற பொறுப்பு நமது பொறுப்பு. இந்தவாய்ப்பைநழுவவிட்டால் நாம் சர்வ வல்லவரை இழந்துவிடுவோம்.
கேள்வி. என்னுள் இருப்பவர் யார், எப்படிப்பட்டவர், என்ன செய்கிறார் என்ற அறிவு நமக்கு உண்டா?.
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவான் 14:17-23.