இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா
Jesus,If I will that he remain till I come,what is that to you? You follow Me. (John 21:22)
Matthew 16:27,28; Matthew 24:3,27,44; Matthew 25:31; Mark 9:1; 1Corinthians 4:5; 1Corinthians 11:26; Revelation 1:7; Revelation 2:25; Revelation 3:11; Revelation 22:7,20.
அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். (யோவான் 21:22)
மத்தேயு 16:27,28; மத்தேயு 24:3,27,44; மத்தேயு 25:31; மாற்கு 9:1; 1கொரிந்தியர் 4:5; 1கொரிந்தியர் 11:26; வெளி 1:7; வெளி 2:25; வெளி 3:11; வெளி 22:7,20.
உனக்கென்ன? நீ பின்பற்றிவா.
பேதுருவின் கேள்விக்கு இயேசு கிறிஸ்து மூன்றுவிதமான பதிலைத் தருகின்றார். இந்த பதில் பேதுருவுக்கு சவுக்கடி கொடுத்ததுபோல் உள்ளது. அவருக்கு மட்டுமல்ல, பிறருக்காய் தீர்க்கதரிசனமுரைப்போர்களுக்கும் சவுக்கடியாகவே உள்ளது.
முதலாவது, அவனுடைய காரியம் எனது ஆதீனத்தில் உள்ளது. நான் வரும்வரை யோவான் உயிரோடிருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நானே முடிவு செய்கிறேன். என்னுடைய அதிகாரத்துக்குள் நீ நுழைய விரும்பாதே. எனது அதிகாரத்துக்குள் நீ அடங்கியிரு. இரட்சிக்கப்பட்ட, ஊழியம் செய்கிற ஒவ்வொருவரின் வாழ்வின் காரியங்களையும் தனது ஆதீனத்துக்குள் வைத்துள்ளார். அவைகளை சாத்தானோ, மனிதர்களோ, உலகமோ அறிந்துக் கொள்ள இயலாது.
இரண்டாவது, பிறருடைய காரியங்களில் நீ தலையிடாதே என்பதாகும். ஒரு சபைக்கு எதிராகவோ ஆதரவாகவோ, ஒரு ஸ்தாபனத்துக்கு எதிராகவோ ஆதரவாகவோ செயல்பட அனுமதியில்லை. அவர்களுடைய காரியங்கள் குறித்து அவர்களை நியமித்த நானே கவனத்தில் கொள்கிறேன். நீ உன் மட்டில் இரு, பிறருடைய கண்களையும், வாழ்வையும், ஊழியத்தையும் பாராதே. அவர்களை அழைத்தவர் நான். நான் அவர்களை நடத்துவேன். எனக்கு யாரும் போதிக்கவேண்டியதில்லை. அதிகார உலகத்தை எதிர்த்து நிற்கும் பலத்தை நான் அவர்களுக்கு தருகிறேன். அவரவர் தங்கள் தங்கள் பணிகளைக் கொண்டு கர்த்தரிடம் திரும்பினால் பல பிரச்சனைகள் இல்லாமல் ஆகிவிடும்.
மூன்றாவது, நீ என்னை பின்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்து. உன்னோடு 10 பேர் உன்னை பின்வந்துசேர வழியை பார் என்று கூறுகின்றார். எனக்கு தேவன் என்ன கொடுத்துள்ளாரோ அதைகொண்டு நான் பணி செய்ய வேண்டும். எனக்கு தரப்பட்டுள்ளவைகளைக் கொண்டு இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளவைகளோடு ஒப்பிட அனுமதியில்லை. பேதுரு இயேசுவை மட்டுமே பார்க்க வேண்டும். அவரை மட்டுமே பின்பற்ற வேண்டும். நாமும் நமது பணிகளை தூய்மைப்படுத்தி , அதிகாரப்படுத்தி, செம்மைப்படுத்தி தேவனுடைய இராஜ்யத்தைகெ கட்ட வேண்டும். என் பிரசங்கம், என் ஊழியம், என் குடும்பம், என் கையில் தரப்பட்டுள்ள மந்தை இவைகளை மட்டுமே நான் நோக்க வேண்டும். பிறரிடம் உள்ள குறைகளையோ நிறைகளையோ பார்க்கவேண்டியதில்லை. அது ஆபத்தானது. நிராகரிப்புக்குரியது.
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். மத்தேயு 7:1-6.
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். யாக்கோபு 4:10-17.