இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
He who walks in darkness does not know where he is going. (John 12:35)
Jn11:10; Jn12:39,40; Ro11:7-10; 2Cor3:14; 1Jn2:8-11; Ps69:22-28; Pro4:19; Jer13:16,17.
அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக் காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும், இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள், இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். (யோவான் 12:35)
யோவான் 11:10; யோவான் 12:39,40; ரோமர் 11:7-10; 2கொரிந்தியர் 3:14; 1யோவான் 2:8-11; சங்கீதம் 69:22-28; நீதிமொழிகள் 4:19; எரேமியா 13:16,17.
இருளில் நடக்கிறவன்:
ஒளி இருக்கும்போது இருளில் நடக்கிறவன் ஒளியை விரும்பாமலும், இருளில் நடப்பதினால் வரக்கூடிய தீங்குகளை அறியாமலும் உணராமலும் இருக்கிறவன் என்று இயேசு கூறுகின்றார்.
தங்கள் சன்மார்க்க வாழ்வை முன்வைத்தும், தங்கள் குல தெய்வங்களை முன் வைத்தும், தான் கற்ற கல்வியை முன்வைத்தும், தங்கள் குல பெருமையை முன்வைத்தும், தங்கள் செல்வபெருக்கை முன்வைத்தும் நடக்கிறவனுக்கு கிறிஸ்துவாகிய ஒளி தேவையில்லை என்று நினைக்கின்றான். உலக பெருமையெல்லாம் இருளில் நடப்பதற்கு போதுமான வெளிச்சத்தை தருவதில்லை. இவைகளின் வெளிச்சம் போதுமானதாயிராததினால் இடறல்களும், நொறுங்குதல்களும், அழிவுகளும், தோல்விகளும் பெருகிக்கொண்டேயிருக்கின்றது.
கிறிஸ்துவாகிய ஒளியை நிராகரித்ததினால் உண்டாகியுள்ள மாற்றங்களை நினைவுகூர வேண்டும். பாவம், அக்கிரமம், பொல்லாப்பு, தீமை போன்றவை அதிகரிக்கின்றது. பூமியெல்லாம் சீர்கெட்டு காணப்படுகின்றது. பாவத்தின் வேர் ஆழமாக வேரூன்றிக் காணப்படுகின்றது. எத்தகைய சட்டங்களினாலும், நற்போதனைகளினாலும், நற்கிரியைகளினாலும் சீர்செய்யப்பட இயலாத அளவுக்கு தீமையின் உச்சம் தென்படுகின்றது.
கிறிஸ்துவாகிய ஒளியை நிராகரித்த சமுதாயம், குடும்பங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், தொழிற்சாலைகள், அரசுகள் போன்ற எல்லா இடங்களிலும் பாவத்தின் இருள், பிரிவினையின் இருள், கீழ்படியாமையின் இருள், இச்சையின் இருள், வன்முறைகளின் இருள், போதைகளின் இருள் பெருகிக் கொண்டே போகின்றது. தடுக்க முடியவில்லை. காட்டாற்று வெள்ளத்தை அணைக்கட்டி தடுக்க இயலாததுபோல இவைகளின் ஆக்ரோஷம் அதிகமாயுள்ளது.
வேலிகளே பயிர்களை மேய்கின்றது. காவலாளனே களவாடுகின்றான். பணம், இச்சை, பதவி போன்ற மாயைக்குள் அகப்பட்டவன் எவனும் நற்காரியங்களை கொண்டுவரமுடியாது, நற்போதகத்தை கொடுக்க முடியாது, நல்ல சந்ததியை உருவாக்க முடியாது. குணம் புதைந்து பணம் மிதந்து செல்லும் காலம். உண்மை அன்பு இல்லை. காதலும், களியாட்டங்களும் பெருகிவிட்டன. பணம், பதவி, ஜாதி, மதம், இச்சைக்காக எதையும் செய்யும் சந்ததி எழும்பியுள்ளது. கட்டுபாடுகளும், ஒழுக்கமுறைகளும் காணப்படாமல் போய்விட்டது. விழுகையைக் குறித்தோ, மரணத்தைக் குறித்தோ, அழிவைக் குறித்தோ பயமில்லாமல் போய்விட்டது. பெற்றோர் விரும்பும் வழியில் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பதில் பிள்ளைகள் விரும்பும் வழியிலே பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் பெருகிவிட்டனர்.
எங்கும் இருள், எதிலும் இருள்; எல்லாம் மாயை, எப்பொழுதும் மாயை.
கிறிஸ்துவாகிய ஒளியை தேடும் காலம் கட்டாயம் வரும்.
மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள். சங்கீதம் 12:8. துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள். நீதிமொழிகள் 28:28.