இயேசு பரத்திலிருந்து தராவிட்டால் என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது

இயேசு: பரத்திலிருந்து தராவிட்டால் என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது.

Jesus. You could have no power at all against Me unless it had been given you from above. (John 19 :11)

John 3:27; John 7:30; Luke 22:53; Act 2:23; Act 4:28; Roman’s 11:36; Roman’s 13:1; James 1:17; Psalm 39:9; Jeremiah 27:5-8; Lam 3:37.

இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது, ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். (யோவான் 19:11)

யோவான் 3:27; யோவான் 7:30; லூக்கா 22:53; அப்போஸ்தலர் 2:23; அப்போஸ்தலர் 4:28; ரோமர் 11:36; ரோமர் 13:1; யாக்கோபு 1:17; சங்கீதம் 39:9; எரேமியா 27:5-8; புலம்பல் 3:37.

அதிகாரத்துக்கு அடங்கி போன இயேசு:

விவிலியமானது எல்லா அதிகாரங்களும் தேவனிடமிருந்தே வருகின்றது என்று போதிக்கின்றது. நன்மை செய்வதற்கும், தீங்கு உண்டாக்குவதற்கும், பாடம் கற்பிப்பதற்கும் தமது அதிகாரத்தை தேவன் பயன்படுத்துகின்றார். யாருக்கு அதிகாரத்தைக் கொடுத்து யாரைக் கொண்டு மேற்சொன்னவைகளில் ஏதாவதொன்றை செய்ய விரும்புகிறாரோ அவர்களை ஊக்குவிக்கிறவர் தேவனே. இதனால் தீமைக்கும் தேவன் காரணமோ என்று எதிர்மறையாக சிந்திக்க வேண்டாம். தேவனுடைய ஜனம் பாவம் செய்யும்போது அழிக்கிறவனிடத்திலும், உபாதிக்கிறவனிடத்திலும் அதிகாரத்தைக் கொடுத்து தேவன் தமது ஜனத்தை சீர்படுத்துகின்றார். தேவனுடைய பிள்ளைகள் சீர்பட்டபின்பு அழிக்கிறவனை – உபாதித்தவனை இல்பொருளாக்கிப்போடுகிறார்.

ஓ!.. தேவனுடைய ஆச்சரியமான செயலை அறிந்தவன் யார்?

கர்த்தராகிய இயேசுவின்மேல் அதிகாரம் செலுத்தவும், இயேசுவை உபத்திரவப்படுத்தவும், சிலுவைக்கு ஒப்புக்கொடுக்கவும் ஒரு பிலாத்துவை தேவன் தெரிந்துக் கொண்டார். இதனை இருளின் காலம் என்று இயேசு கூறியுள்ளார். பிலாத்துவினிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றாலும் இந்த இருளின் அதிகாரத்துக்குள் கடந்துபோகும்படி தம்மை அனுப்பிய பிதா விரும்பியிருப்பதினால் பிலாத்துவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். இது பரத்திலிருந்து தீர்மானிக்கப்பட்ட தீர்மானம். மூளையிலிருந்து உண்டான தீர்மானம் அல்ல. ஏட்டிலிருந்து உண்டான தீர்மானமும் அல்ல.

கர்த்தராகிய இயேசு அதிகாரத்துக்கு அடங்கிபோனது உண்மையானால் அவருக்கு ஊழியம் செய்கிறவர்கள் ஒருசில உண்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, ஏற்படுத்தப்பட்டுள்ள எந்த அதிகாரத்துக்கும் எதிர்த்து நிற்கலாகாது. இரண்டாவது, அதிகாரத்துக்கு எதிர்த்து நிற்கிறவர் தேவனோடு யுத்தம் கலக்கிறார் என்று பொருள். மூன்றாவது, அதிகாரத்துக்கு எதிர்த்து நிற்பதைவிடவும் நன்மை செய்வதை மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும். நான்காவது, தேவ சித்தத்தை அறியாமல் செய்யும் எந்த காரியமும் தேவனுடைய ஆவியை துக்கப்படுத்தும். ஐந்தாவதாக, தீமையின் அதிகாரத்துக்கு எதிர்த்து நிற்காமல் தேவனுடைய பாதத்தில் மறைந்துக் கொள்ள வேண்டும்.

அன்பான தேவனுடைய ஜனமே எந்த சூழலிலும் அதிகாரத்திலிருப்போருக்கு எதிர்த்து நிற்கவோ, ஆதரித்து நிற்கவோ முனையாதீர். தேவனுக்கு பயந்து அவரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து உனக்கு தரப்பட்டுள்ள எல்லைக்குள் நன்மை செய்ய கற்றுக்கொள்.

சகல அதிகாரமும் பெற்ற இயேசு ராஜாவாக வெளிப்படுவது வரையிலும் அவரது நாமத்துக்குள் அடைக்கலம் தேடிக்கொள். அப்படியும் உபத்திரவம் வருமானால் அதுவே இரத்தசாட்சியாக முடியும்.

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்

மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.

ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். ரோமர் 13:1- 7

ADD YOUR COMMENT

Powered By Indic IME