இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்

The blood of Jesus Christ His Son cleanses us from all sin. (1John 1 :7)

1John 2:1,2; 1John 5:6,8; John 1:29; 1Corinthians 6:11; Ephesians 1:7; Hebrew 9:14; 1Peter 1:19; Revelation 1:6; Revelation 7:14; Zechariah 13:1.

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)

1யோவான் 2:1,2; 1யோவான் 5:6,8; யோவான் 1:29; 1கொரிந்தியர் 6:11; எபேசியர் 1:7; எபிரெயர் 9:14; 1பேதுரு 1:19; வெளி 1:6; வெளி 7:14; சகரியா 13:1.

இயேசுவின் இரத்தம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் குறித்து நாம் தியானிக்கும்போது அதோடு தொடர்புடைய ஏழு குறிப்புகளை நினைவிற்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம்.

ஒன்று, இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். மனிதர்கள் மாம்சமும் இரத்தமும் உடையவர்களாயிருப்பது போல இயேசு கிறிஸ்துவும் காலம் நிறைவேறினபோது மாம்சமும் இரத்தமும் உடையவராய் வெளிப்பட்டார். மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுவை அறிக்கை செய்யாதவன் அவருடையவனல்ல.

இரண்டு, இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி மரித்தார். நியாயப்பிரமாணத்தின் படியாக வாழ்ந்து அதற்கு கீழ்படிந்து நியாயப்பிரமாணத்தை தன்னில் நிறைவேற்றும்படியாக சிலுவையில் மரித்து தமது இரத்தத்தை சிந்தினார். அவரின் இரத்தம் குற்றமில்லாத இரத்தம். மாசற்ற ஆட்டுகுட்டியின் இரத்தம். மீட்பை கொண்டுவருவதற்காக இரத்தம் சிந்தினார்.

மூன்று, பாவம் உண்மையானது, உலகளாவியது. கீழ்படியாமையே முதல் பாவம். இச்சையே பாவமானது. இச்சை கர்ப்பம் தரித்து பாவத்தை பிறப்பித்தது. இச்சையினால் நிரப்பப்பட்டு தேவனுக்கு கீழ்படியாமற்போக செய்தது. கட்டளையை மீறுவது பாவமாகும். கொடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு முறைகளுக்கு மாறுபாடாக போனால் அது பாவத்தின் அம்சமே.

நான்கு, கீழ்படியாமை என்ற ஒரு பாவம் பல பாவங்களுக்கு வழிவகுக்கின்றது. தாவீது இச்சை என்ற பாவத்தினால் பிடிக்கப்பட்டதினால் தொடர்ந்து பல பாவங்களை செய்யவும் துணிந்தான். ஒரு பாவந்தானே, ஒரு தவறுதானே, ஒரு குற்றந்தானே என்று நினைத்து செய்யும் தவறுகள் பல தவறுகளுக்குள் நடத்திச் செல்கிறது. ஒரு பாவம் செய்யும்படி துணிகரம் உண்டாக பல பாவங்களை செய்ய மரத்துபோன மனம் உடையதாய் மாறுகின்றது.

ஐந்து, பாவம் அழுக்காக்கும். அழுக்கை கறுப்பாகவும், நிறமியாகவும் சித்தரிக்கின்றோம். தூய்மையை வெண்மையாக கருதுகின்றோம். தேவ சிந்தை கொண்டிருந்த மனதில் இச்சையின் ஆவி நுழைந்தபோது வெண்மை மறைந்து நிறமியாகிவிட்டது. நரம்புகள், எலும்புகள் யாவும் அழுக்கடைகின்றது. அழுக்கு அசுத்தமாகின்றது. அசுத்தம் இருளாகின்றது. இருள் சாத்தானின் புகலிடமாக மாறுகின்றது. இதனால் அழுக்கு அருவருப்பாகின்றது. அழுக்கு ஒளியை மறைக்கின்றது. அழுக்கு மனசாட்சியை மடிவிக்கின்றது. இனி கடிந்து கொண்டாலும், நல்லது சொன்னாலும் ஏறாது. எதிர்வினையாற்றும்.

ஆறு, அழுக்கை தண்ணீர் கொண்டு கழுவ இயலாது. மாம்ச அழுக்கை தண்னீர் கொண்டு கழுவ இயலும். மனசாட்சியின் அழுக்கை இயேசுவின் இரத்தம் கொண்டு மட்டுமே கழுவ இயலும். மிருக இரத்தம் கொண்டும் கழுவ முடியாததினால்தான் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி பாவம் போக கழுவும்படியாக வந்தார். இயேசுவின் இரத்தம் பாவத்தை நீக்கும், பாவத்தை கழுவும், பாவத்தை பரிகரிக்கும்.

ஏழு, கழுவப்பட்டவன் சுத்தவானாகின்றான். வெண்மையாகின்றான். வெளிச்சமடைகின்றான். அவனின் மாம்சமும் தூய்மையாகின்றது. முக்கியமாக மனசாட்சியும் தூய்மையாகின்றது. இரத்தத்தால் கழுவப்பட்ட மனசாட்சியிலே வசனமும் ஆவியும் வாழுகின்றது. ஆகவே இவன் இனி பாவத்துக்கு அடிமையாகாமல் நடந்துக் கொள்வான். மனசாட்சிக்கு விரோதமாக நடந்துக்கொள்ள மாட்டான். தூய்மையான மனசாட்சி என்றால் வசனமும் ஆவியும் கொண்டிருப்பது ஆகும். இது எல்லாருக்குள்ளும் ஒன்றுபோலவே காணப்படும். நபருக்கு நபர் இந்த மனசாட்சி மாறாது. இதுவே சுத்திகரிக்கப்பட்டதின் விளைவாகும்.

இயேசுவின் இரத்தம்…
என் மனசாட்சியோடே பேசிக்கொண்டேயிருக்கும்…
தூய்மையான மனசாட்சியோடு இணைந்து பயணிக்கத் தூண்டும்..
தவறுகளை தனக்குள் வைத்திருக்க இடந்தராது. அவைகளை அறிக்கையிட வைக்கும்.

சில கேள்விகள்…
மாறுபட்ட மனசாட்சியை கொண்டிருப்பவர்கள் தேவ ஆவி உடையவர்களா?…
இயேசுவின் இரத்தம் தெளிக்கிறோம் என்பது நியாய பிரமாண விதிகளுக்கு உட்படுவதல்லவா?…
இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டேன் என்று சொல்கிறவர் இயேசுவை போல மாறாத காரணம் என்ன?…

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!. எபிரேயர் 9:14.

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். எபிரேயர் 10:26-29.

ADD YOUR COMMENT

Powered By Indic IME