பின்னால் நின்ற இயேசுவைக் கண்டாள், ஆனால் அவரை இன்னாரென்று அறியவில்லை.
she turned around and saw Jesus standing there, and did not know that it was Jesus. (John 20:14)
Song 3:1-4; Song 6:1-3; Matthew 28:9; Mark 16:9; Mark 16:12; Luke 4:30; Luke 24:16,31; John 8:59; John 21:4.
இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். (யோவான் 20:13)
உன்னதப்பாட்டு 3:1-4; உன்னதப்பாட்டு 6:1-3; மத்தேயு 28:9; மாற்கு 16:9; மாற்கு 16:12; லூக்கா 4:30; லூக்கா 24:16,31; யோவான் 8:59; யோவான் 21:4.
அறியப்படாத இயேசு.
மரணத்துக்கு முன்பும் கூட கர்த்தராகிய இயேசுவை அடையாளம் கண்டுகொள்வது இயலாத காரியமாயிருந்தது. மரித்து உயிர்த்த பின்பும் கூட அதே நிலைதான் காணப்பட்டது. மரியாள் இயேசுவை தோட்டக்காரராகவும், பிறத்தியாராகவும், அந்நியராகவும், சாதாரணதொரு மனிதனாகவும் கண்டாள். அவரோடு பழகியிருந்தும், அவரை நேசித்திருந்தும், அவரை முகமுகமாய் பார்த்திருந்தும் இயேசு கிறிஸ்துவை மரியாளால் அடையாளம் காண முடியவில்லை. அதாவது இயேசு கிறிஸ்துவானவர் முன்னிருந்த தோற்றத்திலிருந்தும் மாறுபட்டவராக காணப்பட்டிருக்க வேண்டும். முன்னர் மனிதத்துக்குள் தன் தெய்வீகத்தை அடக்கிக் கொண்டவர் இப்பொழுது தெய்வீகத்துக்குள் மனிதத்துவத்தை அடக்கிக் கொண்டவராய் வித்தியாசமானவராகக் காணப்படுகிறார்.
மரியாள் மட்டுமல்ல பல சீஷர்களும் இயேசுவை அடையாளம் கண்டு கொள்ள இயலாத தேஜஸ் உடையவராகக் காணப்படிருக்க வேண்டும். மோசே தேவனோடு முகமுகமாய் பேசியும் தேவனை காணவில்லை என்று விவிலியம் கூறுகின்றது. தேவனுடைய மகிமையின் பிரகாசம் அவரை இன்னார் என்று அறியாதிருக்கச் செய்தது. ஆனாலும் தேவன் தம்மை அவருக்கு வெளிப்படுத்தினார். யோபு அவரை நான் கண்டால் என் வேதனையை பகிர்ந்துக் கொள்வேன் என்று கூறுகின்றார். என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவரை அந்நிய கண்களினால் அல்ல சொந்த கண்களினால் காண்பேன் என்றார்; அதன்படியாக அவரை கண்டார்.
உன்னதபாட்டில் ஆத்ம நேசரை தேடிச் சென்ற பக்தர் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றது.
இயேசுவை கண்டவர்கள் அவரை அறியவில்லை. அவரை அறிந்தவர்கள் அவரை காணவில்லை. நாம் மகிமைக்குள் பிரவேசிக்கும்போதுதான் இந்த முரண்பட்ட நிலைமை மாறும்.
ஆண்டவரை அறியாது அவர்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களும், அவரை காணாது அவரை பின்பற்றுகிறவர்களும் பாக்கியவான்கள். மரியாளின் இந்த அவலம் சற்றே நேரத்தில் நிவிர்த்தி செய்யப்பட்டது. ஆனால் அத்தேனேயில் அறியப்படாத தேவனை அறியவைப்பதற்கு பவுல் மிகுந்த சிரமப்பட்டார். அனேகர் விவிலியத்தை படித்து அவரை நம்புகிறார்கள். வேறு பலர் தரிசனங்களினாலோ, சொப்பனங்களினாலோ அவரை காணாதிருந்தும் அவரை நம்புகிறார்கள். அவரை பின்பற்றவும் செய்கிறார்கள். விசுவாசத்தில் உறுதியாய் நிற்கவும் செய்கிறார்கள். இன்னும் பலர் அவரை கண்டும், தரிசித்தும் அவர் மேல் நம்பிக்கை வைக்காமல் வழுவிப்போகிறவர்களாக இருக்கிறார்கள்.
அவரை காணமுடியாததுவும், அவரை அறியமுடியாததுவும், அவர் சத்தம் கேட்க முடியாததுவும் அவர் நம்முன்பாக வைத்துள்ள மிகப்பெரிய சோதனையாகும். இதில் இடறாமல் முன்னேறுவோமாக.
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம். ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது. அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஓப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2 கொரிந்தியர் 5:6-10,14-21