இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுக்கப்பட்டார்.
He delivered Him to them to be crucified. So they took Jesus and led Him away. (John 19:16)
Matthew 27:26-31; Mark 15:15-20; Luke 23:20-25; Job16:11; Job 2:1-10; Psalm 7:13; 2Corinthians 12:7-10.
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். (யோவான் 19:16)
மத்தேயு 27:26-31; மாற்கு 15:15-20; லூக்கா 23:20-25; யோபு 16:11; யோபு 2:1-10; சங்கீதம் 7:13; 2கொரிந்தியர் 12:7-10.
சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொடுக்கப்பட்டார்.
யெகோவா தேவன் நமது தேவனாயிருக்கிறார். அவரால் மனுகுலம் படைக்கப்பட்டது. பாவத்துக்குள் விழுந்த தமது மனுகுலத்தை மீட்டெடுக்க தனது ஒரே மகனாகிய கிறிஸ்துவை பூலோகத்துக்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்து நேச மகனாக – ஞானமாக தேவனுடைய மடியிலே இருந்தவர். தேவனின் அன்புக்குரியவர். இந்த இயேசுவை தேவன் ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து எங்கெல்லாம் யார் யார் மூலமாக எதற்காகவெல்லாம் ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்பதை இன்றைய தியானத்தில் கவனிப்போம்.
பிதாவாகிய தேவனால் மனிதர்களின் மீட்புக்காகவேண்டி தனது மடியிலிருந்த தேவ மகனை பூமியில் இஸ்ராயேலரிடம் ஒப்புக்கொடுத்தார்.
இஸ்ராயேலர்கள் சாத்தானால் கண்கள் குருடாக்கப்பட்ட நிலையில் தேவன் மேல் வைராக்கியம் கொண்டு தங்களின் நன்மையாக வந்த தேவகுமாரனை பகைத்து தேவதூஷணகாரர் என்று முத்திரை குத்தி உரோமர்களிடம் ஒப்புக்கொடுத்தனர்.
உரோமர்கள் தங்களின் ஆட்சிக்கு குந்தகம் உண்டாகக்கூடாது என்று கருதி இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தனர்.
சிலுவையானது தன்னிடம் கொடுக்கப்பட்ட இயேசுவை வதைத்து, இரணகளமாக்கி, துன்புறுத்தி மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தது.
மரணமானது பாவத்தின் சம்பளமாக இருப்பதினாலும், மனிதனாக பிறந்த எல்லார்மேலும் அதிகாரம் உடையதாக இருப்பதினாலும் இயேசுவை அடக்கம்பண்ணப்படும்படிக்கு இந்த பூமிக்கு ஒப்புக்கொடுத்தது.
பூமியானது மனிதனின் பிறப்பிடமாக இருப்பதினால் தன்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட தேவகுமாரனை, இயேசுவின் சரீரத்தை மனுகுலத்தின் மீட்புக்காக வேண்டி தன்னிடம் ஒப்புக்கொடுக்கப்படுகிற யாவரையும் தேவனிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற மாறா பிரமாணத்தின்படி பிதாவாகிய தேவனிடமே திரும்ப கொடுத்தது.
இதற்கிடையில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாம் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதை அறிந்து தன் ஜீவனை தமது தந்தையிடம் ஒப்புக்கொடுத்திருந்தார். இப்பொழுது பிதாவாகிய தேவன் தம்மிடம் தரப்பட்ட தேவகுமாரனின் ஜீவனை மறுபடியும் தேவகுமாரனுக்கு ஒப்புக்கொடுத்து அவரை உலகத்தின் மீட்பராகவும், இராஜாவாகவும், ஆண்டவராகவும் ஏற்படுத்தி ஜீவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.
தேவனுடைய மக்களாகிய நாம் பலவிதமான பாடுகளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தாலும் நமது ஜீவன் கிறிஸ்துவுடனேகூட அவருக்குள் மறைந்திருக்கதக்கதாய் மெய்வாழ்வை வாழ்வோம். மரணத்திலிருந்து ஜீவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் என்று அறிந்து நம்பிக்கையாயிருப்போம்.
அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். ரோமர் 4:25.
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32.
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 2:20.ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:1,2. உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். ரோமர் 6:19.
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். கொலோசேயர் 3:1-4.