இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுகிறான்.
Now the ruler of this world will be cast out. (John 12:31)
Jn14:30; Jn16:11; Mt12:29; Lk10:17-19; Act26:18; 2Cor4:4; Eph2:12; Eph6:12; Col2:13-15; Heb2:14,15; 1Jn3:8; Rev12:9-11; Rev20:2,3; Gen3:15; Isa49:24-26.
இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது, இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். (யோவான் 12:31)
யோவான் 14:30; யோவான் 16:11; மத்தேயு 12:29; லூக்கா 10:17-19; அப்போஸ்தலர் 26:18; 2கொரிந்தியர் 4:4; எபேசியர் 2:12; எபேசியர் 6:12; கொலோ2:13-15; எபிரெயர் 2:14,15; 1யோவான் 3:8; வெளி 12:9-11; வெளி 20:2,3; ஆதியாகமம் 3:15; ஏசாயா 49:24-26
புறம்பாக்கப்படும் அதிபதி:
முழு உலகமும் தேவனால் வார்த்தையாகிய இயேசுவை கொண்டு படைக்கப்பட்டது. இவ்வுலகில் காணப்படும் மற்றும் காணப்படாத யாவற்றுக்கும் அவரே அதிபதியாக இருக்கிறார். பாவம் உலகில் நுழைந்த பின்பு இருளுக்கு அதிபதி, பாவத்துக்கு அதிபதி, உலகிற்கு அதிபதி, நரகிற்கு அதிபதி, பாதாளத்துக்கு அதிபதி, வானமண்டல அதிபதி என்று பலவாறாக பிரிக்கப்பட்டு அவைகளையெல்லாம் ஒருங்கிணைக்கிறவனாகவும், தேவனுக்கும் தேவனுடைய ஜனத்துக்கும் விரோதமாக யுத்தம் பண்ணுகிறவனாகவும் சாத்தான் தனக்குதானே மகுடம் சூட்டிக்கொண்டான். உலகம் முழுவதும் தனக்குள்ளும், தன் கீழும் அடங்கியிருக்கிறது என்று முழக்கமிடுகிறான். உலகின் சர்வ சிருஷ்டிகளும் சாத்தானின் அடக்குமுறையினால் அவதிப்பட்டு தேவனை நோக்கி முறையிட்டுக் கொண்டிருக்கிறது. தேவ பக்தியுள்ள சந்ததி தோன்றாதோ என்று சிருஷ்டிகள் ஏங்குகின்றன.
இவ்விதமான சூழலில் உலகத்தின் அதிபதியை மேற்கொள்ளும்படியாக, சாத்தானின் அதிகாரத்தை பிடுங்கும்படியாக வானத்துக்கு ஏறுவேன் என்று வானலோகத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் ஆகாயத்து அதிகார பிரபுவை ஜெயிக்கும்படியாக, மரணத்தின் அதிகாரியை ஜெயிக்கும்படியாக, வலுசர்ப்பத்தின் தலையை நசுக்கும்படியாக கர்த்தராகிய இயேசு மனுஷகுமாரனாக வெளிப்பட்டார்.
இயேசுகிறிஸ்துவின் இரட்சண்ய கிரியையானது தன் அதிகாரத்தை பிடுங்கிபோடும் ஆற்றல் கொண்டது என்பதினால் உலக மக்களையெல்லாம் தன் ஆளுகைக்குள் வைக்க அவர்களுடைய கண்களை குருடாக்கி சுவிசேஷத்தின் ஒளி அவர்களுக்குள் பிரகாசிக்காதபடிக்கு பார்த்துக் கொள்கிறான் சாத்தான்.
ஒளியை இருள் பற்றிக்கொள்ளாததுபோல சுவிசேஷத்தின் ஒளி குருடாகிபோன மனகண்களை உபத்திரவங்கள் மத்தியிலும் குறைவுகள் மத்தியிலும் வேதனைகள் தோல்விகள் மத்தியிலும் கிறிஸ்துவின் ஊழியகாரர்களை கொண்டும், விசுவாசிகளை கொண்டும் பிரகாசிக்கப்பண்ணிக்கொண்டு வருகிறார் பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியின் இந்த வேலையை எதுவும் தடுக்க முடியாது, மேற்கொள்ளவும் முடியாது. கர்த்தராகிய கிறிஸ்து வருவது வரையிலும் சபையையும் சபையின் திருப்பணிகளையும் நடத்திக்கொண்டேயிருப்பார்.
கர்த்தராகிய இயேசுவின் மகிமையின் பிரசன்னத்தினாலே உலகின் எல்லா அதிபதிகளும் வெளியேற்றப்படுவார்கள். தேவனுக்கு விரோதமாக எழும்பும் எந்த அதிபதியும் தான் விதைத்ததை அறுவடை செய்தேயாக வேண்டும்.
இஸ்ராயேலை அழிக்க நினைத்த ஹிட்லர் போன்றோர் அழிந்தே போனார்கள். ஆனால் இஸ்ராயேல் இன்றும் நிலைத்து நிற்கின்றது.
தேவனுடையவர்கள் தேவனாலே வாழுவார்கள்.
நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் .
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். சங்கீதம் 2:6-12.