இது மூன்றாவது தரிசனம்
This is third time Jesus showed Himself to His disciples after He was raised from dead. (John 21:14)
John 20:19,26,14; Luke 24:13,15,31,50-53; Matthew 28:9,16; Mark 16:9; John 21:2; 1Corinthians 15:6,7; Acts 1:3-12.
இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். (யோவான் 21:14)
யோவான் 20:19,26,14; லூக்கா 24:13,15,31,50-53; மத்தேயு 28:9,16; மாற்கு 16:9; யோவான் 21:2; 1கொரிந்தியர் 15:6,7; அப்போஸ்தலர் 1:3-12.
தரிசனம்:
கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு தமது சீஷர்களுக்கு பலவிதங்களில் தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார். இங்கே தரிசனம் என்று சொல்லப்படுவது தூக்கத்திலும், ஜெபத்திலும், தியானத்திலும் உண்டாகின்றதாக அல்லாது பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்தியது போலவே இயேசு கிறிஸ்து இங்கேயும் காட்சி கொடுக்கின்றார். இந்த காட்சியில் மூன்று விஷயங்கள் அடங்கியுள்ளன.
முதலாவது, இயேசு கிறிஸ்து தம்மை தேவனுக்கு சமமாக காண்பிக்கின்றார். பிதாவாகிய தேவன் – யெகோவாவாகிய தேவன் பழைய ஏற்பாட்டின் பக்தர்களுக்கு வெளிப்படுத்தியது போலவே குமாரனாகிய தேவனும் இயேசுகிறிஸ்துவுமாகிய இரட்சகர் தம்மை வெளிப்படுத்துகின்றார். பிதாவுக்கு சமமாயிருப்பதை விட்டு விட்டு வந்தவர் மரணமடைந்து, உயிர்த்து தேவனுக்கு சமமானவராய் உயர்ந்திருக்கின்றார். பிதாவானவரே தமது குமாரனை தமது வலது பாரிசத்தின் புருஷனாக உயர்த்தினார் என்பது விவிலிய பாரம்பரியம். இனி இயேசு கிறிஸ்துவை பிதாவுக்கு கீழானவராகவோ, பிதாவுக்கு மேலானவராகவோ சித்தரிக்க வேண்டியதில்லை. பிதாவானவர் தமக்கு சமமாக தமது குமாரனை உயர்த்தியது போல இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய இராஜ்யத்துக்காய் உழைக்கும் சீஷர்களும் இயேசு கிறிஸ்துவுக்கு சமமாக உயர்த்தப்படுவார்கள். இந்த மேன்மை உரிமைபாராட்டுதலுக்கானது அல்ல, தேவனோடு இணைந்து செல்வதற்கான ஸ்திதியாகும்.
இரண்டாவது, தரிசனம், வெளிப்பாடு, காட்சி கொடுத்ததினிமித்தம் இயேசுகிறிஸ்து தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பிக்கின்றார். பூமியில் மனிதனாக வாழ்ந்தபோது தம்மை தேவகுமாரன் என்று காண்பிக்கவே அற்புதங்களையும், அடையாளங்களையும் நடத்தினார். இப்பொழுது தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பிக்க தரிசனங்களைக் கொடுக்கிறார். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததினாலும், தேவனுக்கு சமமாக உயர்த்தப்பட்டதினாலும் சீஷர்களோடு இயேசு கிறிஸ்து காணப்படுவது தரிசனமாக அறியப்படுகின்றது. ஜீவிக்கிறவர், ஜீவனுள்ளவர் என்று நிரூபிக்கிறதற்கான நிரூபணங்களே தரிசனங்கள். சீஷர்கள் இயேசுவை உயிரோடிருக்கிறவராக ஏற்றுக்கொண்டு, விசுவாசித்து முன்னேறுவார்கள்.
மூன்றாவது, இயேசுவை உயிரோடிருக்கிறவராக கண்டும், அறிந்தும், விசுவாசித்துமிருப்பதினால் அதற்காக வைராக்கியம் உடையவர்களாய் தங்களை மரணத்துக்கு குறிக்கப்பட்டவர்களாக காணப்பட்டாலும் அவரை உயிரோடிருக்கிறவர் என்று பிரசங்கிக்க துணிவார்கள். அவரின் நாமத்தினாலே அற்புதங்களை நடப்பித்து இயேசுவை உயிரோடிருக்கிறவராகவும், தாங்கள் அதற்கான கண்கண்ட சாட்சியங்கள் என்றும் பறைசாற்றுவார்கள். இவர்களின் வைராக்கியத்திற்கு முன்பாக பாவங்களோ, இருளோ, பிசாசுகளோ, அதிகாரங்களோ நிற்கமுடியவில்லை.
ஆம் இயேசுகிறிஸ்து மரித்தும் வாழ்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் மூலம் அவர் இன்றும் வாழ்கிறார்.
எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்து வருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 1கொரிந்தியர் 15:8-19.