அவர் தம் சிலுவையைச் சுமந்துகொண்டு கொல்கொதா சென்றார்.
Bearing His cross,went out to a place called the Place of a Skull, which is called in Hebrew,Golgotha, (John 19:17)
Matthew 10:38,39; Matthew 16:24-26; Matthew 27:31-33; Mark 8:34-38; Mark 10:21; Luke 9:23-25; Luke 14:26,27; Hebrew 13:11-13.
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். (யோவான் 19:17)
மத்தேயு 10:38,39; மத்தேயு 16:24-26; மத்தேயு 27:31-33; மாற்கு 8:34-38; மாற்கு 10:21; லூக்கா 9:23-25; லூக்கா 14:26,27; எபிரெயர் 13:11-13.
கொல்கொதா நோக்கி:
கொல்கொதா என்றால் மண்டை ஓடு என்று பொருள். இரண்டுவிதமான பாரம்பரியங்கள் உண்டு. ஒன்று எருசலேமிலிருந்து பார்க்கும்போது மனிதனின் மண்டைஓடு போல காட்சியளிக்கும் என்பதாகும். இன்னொன்று ஆதாமின் மண்டை ஓடு இங்கே கண்டெடுக்கப்பட்டதாக நம்பப்படுவது என்பதாகும். இதனால் இதனை மண்டைஓட்டு மலை என்பதுமுண்டு. அதுதான் கபாலஸ்தலம் எனப்படுகிறது. எது எப்படியாயினும் தீர்ப்பிடப்படுகிறவர்களை சிலுவையில் அறையும்படியாக உரோமர்களால் தெரிந்துக்கொள்லப்பட்ட இடமாகும். இங்கு குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து மரித்த பின் இங்கே புதைப்பதுமுண்டு.
கர்த்தராகிய இயேசு தம்மை அறையபோகும் சிலுவையை தாமே சுமந்துக்கொண்டு கொல்கொதா மலைக்கு செல்கிறார். ஏறக்குறைய 600 மீட்டர் அதாவது 2500 அடி தூரம் தனது சிலுவையை சுமந்து சென்றுள்ளதாக அறியப்படுகின்றது. சிலர் அறையப்படும் இடம் வரையிலும் ஏறக்குறைய ஒன்றேகால் மைல் தூரம் என்பர். இயேசு சிலுவையின் கிடைதுண்டை சுமந்து சென்றதாக கூறப்படுகின்றது. இந்த துண்டு ஏறக்குறைய 80 லிருந்து 110 பவுண்ட் எடை கொண்டதாகும். கர்த்தராகிய இயேசு தமது சிலுவையை சுமந்து சென்றதை உற்று நோக்கும்போது ஒருசில உண்மைகளை நாம் அறியமுடிகின்றது.
முதலாவது, காயத்திலும், வலியிலும் இரத்தம் ஒழுக ஒழுக சிலுவையை சுமந்து சென்றார். இரண்டாவது, இவ்வளவு வலியினூடேயும் அழுது, ஒப்பாரிவைத்து தனது வலியை வெளிப்படுத்தவில்லை. மூன்றாவது, தனது பாவத்தினிமித்தமல்ல, சர்வலோகத்தின் பாவத்தினிமித்தமே இந்த சிலுவையை சுமந்து செல்கிறார். நான்காவது, சிலுவையின் பாரத்தைவிடவும் மனுகுலத்தின் பாவத்தின் பாரம் அதிகமாய் தன்னை அழுத்துவதை உணர்ந்தார். ஐந்தாவதாக, அவரை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் மரணத்தை நோக்கி பாரங்களை சுமந்து செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது.
இயேசு சிலுவையை சுமந்து கொல்கொதா மேட்டை நோக்கி செல்கின்றார். இயேசுகிறிஸ்துவின் ஊழியகாரர்களாக தெரிந்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் பாவம் செய்யாதிருந்தாலும் பிறரின் பாவங்களினிமித்தம், குற்றங்களினிமித்தம் உண்டாகும் பாரங்களை சுமந்து செல்லும்படியாக அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவை போல நம்மை அனுப்புகின்ற இடங்களில் உள்ள ஜனங்களின் பாவங்களை அகற்றவும், தொலைக்கவும் போராட வேண்டியுள்ளது. அவர்களுடைய பாவங்களின் தாக்கங்கள் ஊழியர்கள்மேல் சுமத்தப்பட்டு அப்பகுதியிலே கிறிஸ்துவின் விதையாகவும் மாறுகிறார்கள்.
நமது பாரங்கள் ஒருபுறமும், ஜனங்களின் பாரங்கள் மறுபுறமுமாக சுமந்து செல்வதற்காகவே நம்மை அழைத்து அபிஷேகித்துள்ளார். நமது சிலுவையையும் ஜனங்களின் சிலுவையையும் கிறிஸ்துவின் சிலுவையையும் சுமந்து செல்வதே ஊழிய பணியாகும். அவர்களே சீஷத்துவத்தின் முத்துக்கள்.
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 16: 21-28.