அவர்கள் உம் வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
They were Yours, You gave them to Me, and they have kept Your word. (John 17:6)
John 8:31,32; John 14:21-24; John 15:3,7; Colossians 3:16; 2 Timothy 1:13; Hebrew 3:6,8; Hebrew 2:13; Psalm 119:11; Proverb 2:1-5; Proverb 3:1-4; Proverb 23:23.
நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். (யோவான் 17:6)
யோவான் 8:31,32; யோவான் 14:21-24; யோவான் 15:3,7; கொலோசெயர் 3:16; 2தீமோத்தேயு 1:13; எபிரெயர் 3:6,8; எபிரெயர் 2:13; சங்கீதம் 119:11; நீதிமொழிகள் 2:1-5; நீதிமொழிகள் 3:1-4; நீதிமொழிகள் 23:23.
வசனத்தைக் கைக்கொள்ளுதல்:
கர்த்தராகிய இயேசு பிதாவினால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர். பிதா கற்பிக்கும் வார்த்தைகளைப் பேசினார். பிதா காண்பிக்கும் கிரியைகளை செய்தார். இயேசுவை அனுப்பிய பிதாவையும் அறிந்து விசுவாசித்து ஏற்றுக்கொள்வதே அழிவில்லாத வாழ்வு ஆகும். இஸ்ராயேலர்கள் பிதாவை நம்பினார்கள். பிதாவினால் அனுப்பப்பட்ட இயேசுவை நம்பாமற் போனார்கள். இதனால் இயேசு பேசியவைகளையும், செய்தவைகளையும் காய்மாகார கண்கள் கொண்டு பார்த்து அவிசுவாசமுள்ள மாறுபாடான சந்ததிகளாக மாறினர். ஆனால் பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்டு இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சீஷர்களோ பிதாவையும் இயேசுவையும் நம்பினர். இயேசுவின் வார்த்தைகளை நித்திய ஜீவனுக்குரியவைகளாகவும், இயேசுவின் கிரியைகளை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தும் பலத்த கிரியைகளாகவும் கண்டனர்.
இப்பொழுது இயேசுகிறிஸ்து தமது தந்தையிடம் கூறுகின்றார். என்னவெனில், பிதாவே நீர் கொடுத்த வார்த்தைகளை நீர் எனக்கு தந்தவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் என்னையும், நான் கூறிய வார்த்தைகளையும் ஏற்றுக்கொண்டு என்னிலே நிலைத்திருக்கிறார்கள் என்பதாகும். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் ஒருவருக்குள் நுழைந்து எப்படிபட்ட கிரியைகளை நடப்பிக்கிறது என்பதை இயேசு அறிவார். பிரசங்கிக்கப்படும் வார்த்தை ஜனங்களுக்குள் எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆவியின் மூலமாக போதகர்கள் அறிகின்றார்கள்.
வசனமானது ஆவியாயும், உண்மையாயும், ஜீவனாயும், வல்லமையுடையதாயும் இருப்பதால் அது வெறுமையாய் ஒருவருக்குள்ளும் நுழையாது. அது மனதில் நுழைந்து விட்டதானால் செய்ய வேண்டிய வேலையை செய்தே தீரும். இதனை இயேசு அறிந்ததினால் தம்மை பின்பற்றுகிறவர்கள் வசனத்தையுடையவர்களாயிருக்கிறார்கள் என்கிறார்.
இயேசு கூறியதை போலவே இயேசுவின் பரமேறுதலுக்கு பின்பாக தங்களில் இருந்த வசனத்தை சீஷர்கள் எங்கும் திரிந்து உபதேசித்தனர். கர்த்தர் அவர்களோடிருந்து அவரின் வசனத்தை உறுதிப்படுத்தினார்.
நமக்குள் வசனம் இருப்பதை ஆவியானவர் அறிவார். அது நம்மில் இருந்தால் நாம் அவருடையவர்களாகி மிகுந்த நன்மைகளை பெற்று நற்கனிகளை கொடுக்கிறவர்களாவோம்.
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:10,11.
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். நீதிமொழிகள் 2:1-5.