அன்புள்ள எவரும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறார்கள்.
everyone who loves is born of God and knows God. (1John 4:7)
1John 4:12; 1John 2:29; 1John 3:14,15; 1John 5:1; John 17:3; 2Corinthians 4:6; Galathians 4:9.
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். (1 யோவான் 4:7)
1யோவான் 4:12; 1யோவான் 2:29; 1யோவான் 3:14,15; 1யோவான் 5:1; யோவான் 17:3; 2கொரிந்தியர் 4:6; கலாத்தியர் 4:9.
தேவ அறிவு.
தேவ அன்பைக் கொண்டிருக்கிற எவரும் தேவனால் பிறந்தவராகவும், தேவனை அறிந்தவராகவும் இருக்கிறார்கள். தேவனை அறிகிற அறிவு மனிதரிடையில் ஆதிபிதாக்கள் மூலமாயும், நியாயபிரமாணம் மூலமாயும், தீர்க்கதரிசிகள் மூலமாயும், இந்த கடைசி காலங்களில் கிறிஸ்துவின் மூலமாயும் இவ்வுலகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவனை அறிகிற அறிவு பரிசுத்த ஆவியினாலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க இவ்வித சிந்தனைகளை மனதில் கொண்டவராக தேவனை குறித்த அறிவுக்கும் அன்புக்கும் உள்ள தொடர்பை குறிப்பிடுகின்றார். இயேசு கிறிஸ்து யோவான் 15:15 ல் சீஷர்களை தமது சிநேகிதர்கள் என்று கூறி அவர்களுக்கு முழுமையான சத்தியத்தைப் போதித்திருப்பதாகக் கூறுகின்றார். இவ்வசனம் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அன்பில்லாமல் தேவனை அறிய இயலாது.
கிறிஸ்துவின் அன்பைக் கொண்டுள்ளவர் மட்டுமே தேவனால் பிறந்தவராகவும் அவருக்கு தேவன் தமது ஆவியினால் சகலவற்றையும் உபதேசிக்கின்றார் என்றும் அறிய முடிகின்றது. கிறிஸ்துவின் அன்பு என்பது முழு மனதோடு கிறிஸ்துவை சிநேகிப்பதும், அந்த கிறிஸ்துவை மட்டுமே எங்கும் சுமந்து செல்லுவதும், அவரை மட்டுமே பிறருக்கு அறிவிப்பதும் ஆகிய மூன்றும் இணைந்ததுவேயாகும். இப்படிபட்டவருக்கு தேவன் தமது ஞானத்தை, அறிவை, நிதானத்தை,விவேகத்தை, காரிய சித்தியை, புத்திக்கூர்மையை கொடுக்கின்றார். அன்று பிரமாணங்களின் வழியாக இந்த அறிவைக் கொடுத்த தேவன் இக்காலத்தில் கிறிஸ்துவின் அன்பின் மூலம் இந்த மேன்மையை கொடுக்கின்றார். ஏனெனில் கிறிஸ்துவுக்குள் ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியுள்ளன.
தேவ அறிவோடுகூட உலகத்தையும், துர் உபதேசங்களையும் கலக்காமல் சத்தியத்தை மட்டுமே போதிக்கிறது யாவும் தேவ அறிவையே காட்டுகின்றது. ஆனால் இந்த அறிவு அன்பில் பிறந்ததாயிருக்குமானால் மிகவும் நல்லது. பாடபுத்தகங்களில் பிறக்கும் அறிவைவிட, மனப்பாடத்தில் உண்டாகும் அறிவைவிட, ஆராய்ச்சியில் கிடைக்கும் அறிவைவிட, அனுபவங்களில் கிடைக்கும் அறிவைவிட அன்பினால் உண்டாகும் அறிவே சிறந்தது. போதிக்கிறவனில் அன்பும், நிதானமும், கீழ்படிதலும், கரிசனையும், சிநேகமும், கண்டிப்பும் காணப்பட வேண்டும்.
கேள்வி. நமது அறிவு எத்தகையது? அதில் தெய்வமணம் வீசுகிறதா? ஆராய்ந்து பாருங்கள்.
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. யாக்கோபு 3:13-17.