அநேகர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
Many Jews had joined women around Martha Mary,to comfort them concerning their brother. (John 11:19)
Gen37:35; 2Sam10:2; 1Chr7:22; Job2:11; Job42:11; Ecc7:2; Isa51:19; Jer5:7; Lam1:2,9,16,21; Lam2:13; Ro12:15; 1Th4:18.
யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். (யோவான் 11:19)
ஆதியாகமம் 37:35; 2சாமுவேல் 10:2; 1நாளாகமம் 7:22; யோபு 2:11; யோபு 42:11; பிரசங்கி 7:2; ஏசாயா 51:19; எரேமியா 5:7; புலம்பல் 1:2,9,16,21; புலம்பல் 2:13; ரோமர் 12:15; 1தெசலோனிக்கேயர் 4:18.
ஆறுதல் சொல்லுதல்:
மரணித்த மனிதனின் வீட்டாருக்கு ஆறுதல் சொல்லும்படியாய், அவர்களை தேற்றும்படியாய் முயற்சிப்பது எல்லா ஜனத்தாரிலும் அவரவர் வழக்கத்திற்கேற்ப நடக்கும். யூதர்களுக்குள் இவ்வித ஆறுதல் சொல்லும் நாட்கள் 30 நாட்களாகும் என்கின்றனர். யாக்கோபுக்காக 40 நாட்களும்(ஆதியாகமம் 50:3), ஆரோனுக்காக 30 நாட்களும்(எண்ணாகமம் 20:29), மோசேக்காக 30 நாட்களும்(உபாகமம் 34:8) துக்கம் கொண்டாடி ஆறுதல் சொல்லப்பட்டது. சமூகத்தில் சற்று குறைவான நிலையிலுள்ள மனிதர்களுக்கு – சாதாரண மனிதர்களுக்காக ஆறுதலின் காலங்கள் குறைக்கப்பட்டிருக்கலாம். எப்படியும் லாசருவினிமித்தம் ஆறுதல் சொல்லும்படியான கூட்டத்தின் மத்தியில் இயேசு வந்தார். இயேசு ஆறுதல் சொல்லும்படியாய் வரவில்லை. அவர்களுக்கு நிரந்தர ஆறுதலை கொடுக்கவே வந்தார்.
பாவத்தினிமித்தம் தேவனுடைய கோபம் பற்றியெரிவதினால் மனுஷர் துன்பங்களையும், வேதனைகளையும் அடைந்து ஆறுதல் அற்று தவிக்கின்றனர். தம்மால் காயப்படுத்தப்பட்ட மக்களுக்கு தாமே ஆறுதல் கொடுக்கும்படியாய் காயம் கட்டுகிறவராகவும், குணமாக்குகிறவராகவும் வெளிப்பட்டார். அநேக நேரங்களில் பாவத்தை உணர்ந்து, மனந்திரும்பி, இரக்கங்களுக்காக மன்றாடுவோரை ஆறுதல்படுத்த தீர்க்கதரிசிகளை அனுப்பியதுமுண்டு. அவர்கள் ஜனங்களுக்கு ஆலோசனைகளைக் கொடுத்து ஆறுதல்படுத்தி வாக்குறுதிகளை தந்து கடந்து சென்றார்கள்.
கர்த்தராகிய இயேசுவும் இதே திருப்பணியை யூதர்களிடையில் செய்தார். பாவத்தினால் சீரழிந்து – நாதியற்று போய் விடுதலைக்காய் ஏங்கிய மக்கள் மீது அன்பும் கரிசனையும் உடையவராய் அவர்களுக்கு நிரந்தர மீட்பும், ஆறுதலும் கிடைக்கும்படியாய் தம்மையே பலியாக தந்தார். எவரெல்லாம் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு பாவ மன்னிப்பு பெறுகிறார்களோ அவர்கள் அவரின் சரீரமாகிய சபையில் வைத்து தேற்றப்படுகிறார்கள். அவ்விதம் தேற்றுவதற்கு பரிசுத்த ஆவியையும் தந்துள்ளார். ஆனால் நாம் திரும்பவும் கீழ்படியாமைக்குள் செல்வோமெனில் அதே பரிசுத்த ஆவியானவர் கோபத்தையும் வெளிபடுத்துவார் என்று அறியுங்கள்.
ஆறுதல் பெற மனந்திரும்புதல் அவசியம்.. ஆசீர்வாதம் பெற கீழ்படிதல் அவசியம்.
கர்த்தாவே உமது மகன் மூலம் எங்களை ஆறுதல்படுத்துவதற்காய் நன்றி. உமது ஆவியைப் பெற்று உமது மகனின் ஆலயத்தில் வைத்து தேற்றப்பட உதவிடும்.