மேல்விலாசம், நசரேயனாகிய இயேசு யூதருடைய இராஜா.
Pilate wrote a title and put it on the cross.JESUS OF NAZARETH, THE KING OF THE JEWS. (John 19 :19)
Matthew 27:37; Mark 15:26; Luke 23:38; Act 3:6; Act 26:9; Psalm 149:2; Jeremiah 30:21; Zep 3:15.
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. (யோவான் 19:19)
மத்தேயு 27:37; மாற்கு 15:26; லூக்கா 23:38; அப்போஸ்தலர் 3:6; அப்போஸ்தலர் 26:9; சங்கீதம் 149:2; எரேமியா 30:21; செப்பனியா 3:15.
குற்றவாளியாகிய இயேசு:
நசரேயனாகிய இயேசு இஸ்ராயேலர்களால் குற்றம் சுமத்தப்பட்டு, பிலாத்துவால் குற்றம் உறுதிபடுத்தப்பட்டு, போர்சேவகர்களால் சிலுவையில் அறையப்படுகின்றார். அக்காலத்தில் குற்றம் சுமத்தப்பட்டவரின் குற்றம் குறித்த குறிப்பேடு ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டோ அல்லது அந்த குறிப்பேட்டை முன்வரிசையில் சுமந்து சென்றோ முடிவில் சிலுவையின் மேற்பகுதியில் அறைவது வழக்கம். இந்த வசனம் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. பொதுமக்கள் இயேசுவை குற்றவாளியாக நினைப்பதற்கும், பாவிப்பதற்கும் இந்த வாசகம் எழுதப்பட்டது.
தனது குற்றத்தை தவிர்க்க முடியுமென்றாலும் தமது தந்தையின் விருப்பத்திற்கிணங்க குற்றவாளியாக அறைய தன்னை ஒப்புக்கொடுத்துள்ளார். மனதிலும் சிந்தனையிலும் குற்றமில்லாத இயேசு – தேவனுடைய பார்வையிலும் குற்றமில்லாத இயேசு மனிதர்களால் குற்றவாளியாக்கப்படுகின்றார். அவரை குற்றவாளியாக்குவதினால் மனுகுலத்துக்கு என்ன இலாபம்?
முதலாவது தங்களுடைய குற்றங்கள், பிழைகள், தவறுகள் மறைக்கப்பட காரணமாயமைகின்றது. நிரபராதியின் – நீதிமானின் இந்த தண்டனையை குறித்து சில காலங்களுக்கு சமுதாயம் பேசிக்கொண்டிருக்கும். இதனால் இவர்களின் குற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் தேவன் குற்றவாளிகளை குற்றமற்றவர்களாக விடமாட்டார் என்பதை நினைவிற்கொள்வோம்.
இரண்டாவது, அக்கிரமத்தின் இரகசியம் கிரியை செய்யும். இருளின் அதிகாரம் அதிகமாகும். தீமையின் எழுச்சி மேலோங்கும். இதனால் மனிதர்களுக்கு தடங்கலின்றி தங்கள் மனமும் மாம்சமும் விரும்புவதை செய்து உலக இன்பங்களில் நிறைந்து வாழமுடியும்.
மூன்றாவது, நிரபராதியை – நீதிமானையே நியாயம் விசாரித்து கழுமரம் ஏற்றியதினால் தற்பெருமையும் அகங்காரமும் உண்டாகி நல்லவர்களை பகைக்கிறவர்களாக மாறுவர். துணிகரம் கொள்வர்.
தங்களை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏன் தேவனே கூட ஒன்றும் செய்ய முடியாது என்று மமதைக் கொள்வார்கள்.
அன்பானவர்களே, நீங்கள் குற்றம் செய்யாமல் குற்றவாளியாக்கப்படும்போது சகலவற்றையும் சகித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது அந்தகாரத்தின் வேளையும் தீமையின் காலமுமாயிருக்கிறது. நமது குற்றமற்ற தன்மையை அறிகின்ற தேவன் இருக்கின்றார். அவர் வருவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களினின்று உங்களை விடுவித்து குற்றம் சாட்டுகிறவர்கள் இல்லாத தேசத்துக்கு கொண்டு செல்வார்.
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:12-19.