பூமியிலிருந்துண்டானவன், பூமிக்கடுத்தவைகளை பேசுகிறான்.
he who is of the earth is earthly and speaks of the earth. (John 3:31b)
Mat6;18-24;Rom8:5-8;1Cor15:46-49;Heb9:1,9,10;1Jn2:15-17.
உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். (யோவான் 3:31)
மத்தேயு 6;18-24; ரோமர் 8:5-8; 1கொரிந்தியர் 15:46-49; எபிரெயர் 9:1,9,10; 1 யோவான் 2:15-17.
பூமியிலிருந்துண்டானவன்:
1. மனிதன் பூமியிலிருந்துண்டாக்கப்பட்டவன் என்றாலும், தேவனின் சுவாசத்தை பெற்று தேவனுக்கடுத்தவைகளிலே ஆர்வமாயிருந்தான். பாவம் மனிதனுக்குள் வந்தபோது அவனுக்குள் சில மாற்றம் உண்டானது.
– தான் மண் என்று நினைவுகூர வைக்கப்பட்டான்.
– தான் ஒரு பலவீனன் என்பதை புரிந்து கொண்டான்.
– தேவனின் இராஜ்ஜிய எண்ணங்களை மறந்து இவ்வுலகு சார்ந்தவைகளையே பின்பற்றலானான்.
2. சாத்தான் தேவனுக்கு எதிராக செயல்பட விருப்பமுள்ளவனாயிருந்தான். தூதர்களைபோலொத்த படைப்பாயிருந்தாலும், மண்ணுக்குரிய தன்மைகளை கொண்டிருந்ததினால், தேவ இராஜ்ஜியத்தில் இடமின்றி தள்ளப்பட்டான். அவனும் தேவ இராஜ்ஜிய காரியங்கள் குறித்த அறிவு கிடைக்காததினால், மண்ணுக்குரியவைகளிலே ஆர்வமுள்ளவனாயிருக்கிறான்.
3. அழிவுக்குரியவைகளில் எவர்கள் அதிகமாய் ஆர்வமுள்ளவராய் இருக்கிறார்களோ, அவர்களே பூமிக்குரியவர்கள் ஆவர். ஏனெனில் உலக சிந்தை – மாமிச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை(ரோமர் 8:7) என்கிறார் பவுல்.
இயேசுகிறிஸ்து, இவையிரண்டுக்கும் சேர்த்து பணி செய்ய இயலாது என்றார். (மத்தேயு 6;24).
நமது ஆசை, ஆர்வம், முன்னுரிமை போன்றவையே நாம் விண்ணுக்குரியவர்களா? அல்லது மண்ணுக்குரியவர்களா என்று காண்பிக்கும்.
கர்த்தாவே, நாங்கள் எங்கள் பாவங்களினிமித்தம் பூமிக்குரியவைகளில் நாட்டம் கொண்டு உலக பிரகாரமாக வாழ்ந்து வந்தோம். நீர் உம் குமாரனை அனுப்பி அவர் இரத்தத்தால் உம்மோடு ஒப்புரவாக்கப்பட்டு பரலோகிற்குரியவர்களாகவும், பரலோக சிந்தையில் நாட்டம் உடையவர்களாகவும் மாற்றினீர். நாங்கள் தொடர்ந்து உன்னத அனுபவங்களுடன் வாழ்ந்து கிறிஸ்துவின் வருகையில் இணைக்கபட எங்களுக்கு உதவிடும்.