பிதாவே இரட்சியும், ஆனாலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்

பிதாவே இரட்சியும், ஆனாலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

Father,save Me from this hour? But for this purpose I came to this hour. (John 12:27)

Jn11:41; Jn18:37; Mt26:37-44,53,54; Lk22:41-44,53; Mk9:19; Ro15:3; Phi1:20-26; 1Tim1:15; Heb10:5-9; Heb12:2.

இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ, ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். (யோவான் 12:27)

யோவான் 11:41; யோவான் 18:37; மத்தேயு 26:37-44,53,54; லூக்கா 22:41-44,53; மாற்கு 9:19; ரோமர் 15:3; பிலிப்பியர் 1:20-26; 1தீமோத்தேயு 1:15; எபிரெயர் 10:5-9; எபிரெயர் 12:2.

இந்த வேளைக்குள் வந்தேன்:
வருத்தமும், தனிமையும், வேதனையும் மனிதவாழ்வில் சகிக்கவியலாத பெருந்துன்பங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உடையவராய் காணப்பட்டிருந்தாலும் இவ்வேளையில் வருத்தத்தினாலும், தனிமையினாலும், வலியினாலும் உள்ளத்திலும், ஆவியிலும் துடிக்கின்றார். இன்னும் சில நாட்களில் சரீரத்தில் அடையப்போகிற வலியை ஆன்மாவில் உணர்ந்தவராய் நம்மைபோல தமது தந்தையிடம் மன்றாடுகின்றார்.

தந்தையே இந்த பாடுகளிலிருந்து என்னை காப்பாற்றும், உமக்கு பிரியமானவைகளை நான் செய்து வருகிறதினால் என்னை மீட்டருளும் என்று கேட்கின்றார். இந்த பாத்திரத்தை என்னை விட்டு அகற்றும் என்று கேட்கின்றார். இதனை அவநம்பிக்கையினாலோ, பயத்தின் மிகுதியினாலோ கேட்கவில்லை. சகிக்கக்கூடிய பெலன் குறைவாயிருப்பதினால் கேட்கின்றார். (லூக்கா22:43).

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அங்கலாய்ப்பு இதோடு முடியவில்லை, விண்னப்பத்தை இன்னும் தொடர்கின்றார். அது என்னவெனில், இந்த வருத்தத்தையும், தனிமையையும், வேதனையையும் சரீரத்தில் அடைவதற்காகவே நான் உம்மால் அனுப்பப்பட்டேன், அதற்காகவே நான் வந்தேன், அதை குறித்தே இதுவரையிலும் பேசி வந்தேன். எனவே உமது சித்தம் ஆகக்கடவது. நீர் என்னில் என்ன செய்ய விரும்புகிறீரோ அதை நீர் என்னில் பரிபூரணமாய் செய்ய என்னை முழுமையாய் ஒப்புக்கொடுக்கின்றேன் என்றார். பாடுகளின் கிரியைகள் தேவ நோக்கத்தை சிதைக்கவும், பிசாசின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவும் இடம் கொடுக்கலாகாது என்பதில் கவனமாய் இருந்தார் இயேசு.

பரிசுத்த பவுல் பிலிப்பிய நிரூபத்தில் பாடுகளினிமித்தமாக சீக்கிரத்தில் தேவனிடம் சென்று சேர வாஞ்சிப்பதாக கூறினாலும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற இவ்வுலகில் அவர் தனக்கு வைத்திருக்கும் நாட்கள் வரையிலும் வாழ்ந்திருப்பதையே வாஞ்சிப்பதாக கூறுகின்றார்.

கர்த்தராகிய இயேசு நம் நிமித்தமாக மட்டுமல்ல, தேவனுடைய விருப்பப்படியும் இந்த பாடுகளை அனுபவித்தார். பரிசுத்த பவுல் தேவ பிள்ளைகளை உபத்திரவப்படுத்தினதினால் மட்டுமல்ல, கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தமாக பாடுகளை அனுபவிக்க வேண்டும் என்ற தேவ திட்டத்திற்காகவும் பாடுகளை அனுபவித்தார்.
பாடுகள், இழப்புகள், வேதனைகள், தனிமைகள், வருத்தங்கள் யாவும் நம்மை தேவனிடம் நெருங்கி சேரவைக்கும் சாத்தானின் முட்கள். பாவம் நிறைந்த இந்த உலகில் இந்த முட்களினால் காயப்படுதல் இல்லாமல் தேவ சகாயம் நாம் பெற முடியாது. இந்த முட்கள் நம் சரீரத்தின் இச்சைகளை குத்திகுத்தி வெளியேற்றி முடிவில் மகிமையின் சரீரமாக மாற்ற உதவுகிறது.

முட்களினூடேதான் லீலிபுஷ்பம் மலரும். நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு. பிலிப்பியர் 1:28-30.

ADD YOUR COMMENT

Powered By Indic IME