துணிக்கையை வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான்.
Now after the piece of bread, Satan entered him. (John 13:27)
John 13:2; Matthew 12:45; Luke 8:32,33; Luke 22:3; Acts 5:3; Psalms109:6.
அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். (யோவான் 13:27)
யோவான் 13:2; மத்தேயு 12:45; லூக்கா 8:32,33; லூக்கா 22:3; அப்போஸ்தலர் 5:3; சங்கீதம் 109:6.
உட்புகும் சாத்தான்:
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனாக தெரிந்துக் கொள்ளப்பட்டு, அவரோடு பலநாட்களை செலவிட்டு, அவரது கிரியைகளில் மகிழ்ச்சியடைந்தவனாய் காணப்பட்ட யூதாஸ் இயேசுகிறிஸ்துவின் முறைமைகளின்படி நடவாது அவருக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபாடு கொண்டவனாய் காணப்பட்டதினால் சாத்தான் அவனுக்குள் புகுந்தான்.
சாத்தானால் நிரப்பப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக செயல்படுவதுண்டு. கர்மேல் மலையில் பலிசெலுத்திய பாகாலின் தீர்க்கர்கள் கத்தியால் தங்களை கீறிக்கொண்டதுண்டு. இயேசுவின் காலத்தில் லேகியோன் தன்னையும் பிறரையும் ஊனப்படுத்துகிறவனாக காணப்பட்டான். சிலபேர்களை பிசாசு தீயிலும், ஜலத்திலும் தள்ளியதுமுண்டு.
ஆனால் பிசாசினால் நிரப்பபட்ட யூதாஸ் அமைதியாயிருந்து இயேசுவை காட்டிக் கொடுத்து அவருக்கு துரோகம் செய்து முடிவில் தூக்குப்போட்டு செத்து போனான்.
விவிலியமானது பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள் என்றும் அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்றும் கூறுகின்றது. பிசாசானவனின் விருப்பமான காரியங்களை நாம் செய்யும்போது பிசாசானவன் நம்மை சேதபடுத்த நம் வலப்பக்கத்திலே நிற்பான்.
தேவனுக்கு கீழ்படிந்து அவருக்கு பிரியமானதை செய்யும்போது மட்டுமே பிசாசை எதிர்த்து நின்று வெற்றிக் கொள்ள முடியும்.
பிசாசினால் அகப்பட்டவர்களை விடுதலையாக்கவே இயேசு வந்தார். சத்தியமானது நமக்குள் முளைக்கும்போது பொய்மையின் சாத்தானுக்கு நம்மிடம் இடமில்லை. நமது கிரியைகள் தூய்மையானதாக இராதிருந்தால் பிச்சாசனவன் நம்மை விடாது துரத்துவான். அவனால் நாம் பிடிபடாதபடிக்கு இயேசுவுக்கு கீழ்படிந்து வாழுவோம்.
பிள்ளைகளே நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல. 1யோவான் 3:7-10.