பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
Then the disciples went away again to their own homes. (John 20:10)
Lamentations 2:10; Lamentations 3:28; Ezekiel 33:22; Amos 5:13; Habakkuk 1:3; Habakkuk 2:20; Zephaniah 1:7; Zechaiah 2:13.
பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். (யோவான் 20:10)
புலம்பல் 2:10; புலம்பல் 3:28; எசேக்கியேல் 33:22; ஆமோஸ் 5:13; ஆபகூக் 1:3; ஆபகூக் 2:20; செப்பனியா 1:7; சகரியா 2:13.
மௌனம்:
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பது எல்லா இடங்களுக்கும் பொருந்துவதில்லை. இயேசு கல்லறையில் இல்லை என்பதை அறிந்த பின்பும் அவர்கள் மௌனமாக இருந்த காரணம் என்ன?எல்லாம் அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடந்துள்ளதினால் உண்டான பயத்தினிமித்தம் மௌனமானார்கள். இந்த பயம் இவர்களுக்குள் பல நாட்கள் தொடர்ந்தது. இதினிமித்தம் அறைகளில் அடைபட்டுக் கிடந்தார்கள். உண்மையைச் சொல்ல துணிகரம் கொள்ளவில்லை. பரிசுத்தஆவியின் நிறைவும் வரங்களும் வல்லமையும் தங்களை ஆட்கொள்வது வரையிலும் பயத்தினாலே நிரம்பியிருந்தார்கள். பயம் நீங்கியபோது ராஜாக்கள் வரையிலும் சென்று வாய் திறந்து பேசும் வாயாடிகளாக மாறினார்கள்.
மரணத்தைக் குறித்தும் கவலைப்படவில்லை.
சபை சரித்திரங்களிலும்கூட இத்தியான நிகழ்வுகளை காணமுடிகின்றது. உபத்திரவங்கள் உண்டானபோது தேவனுடைய மனிதர்கள் மௌனமானார்கள். இருளின் ஆதிக்கமும் தீமையின் பெருக்கமும் துன்மார்க்கரின் எழுச்சியும் தேவனுடைய மனிதர்களை மௌனத்தில் ஆழ்த்தியது. இந்த மௌன காலங்களில் விவிலியத் தியானங்களும் தனி ஜெப வளர்ச்சியும், குழு ஜெப வளர்ச்சியும் மிகவும் அதிகரித்தது. இந்த இருண்ட காலங்கள் முடிந்தபின்பு இவைகள் வெளிப்பட்டன.
சில நேரங்களில் நாம் சும்மா அமர்ந்திருக்க தேவனால் பணிக்கப் படுகிறோம் என்பதை தேவனுடைய மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தமது கிரியைகளை செய்வதற்காகவோ மக்கள் தங்களின் துன்மார்க்கத்தில் நிறைவடையும் படியாகவோ அவர் நம்மை மௌனமாய் இருக்க பணிக்கின்றார் . யோசேப்பின் காலங்கள் வருவது வரையிலும் அநீதிகள் அவர் மேல் பெலம் கொண்டது.
கானானியரின் பாவம் நிறைவடைவது வரையிலும் இஸ்ராயேலர்கள் உபத்திரவங்களில் கட்டப்பட்டு கிடந்தார்கள். அவர் நம்மை மௌனமாய் இருக்க கட்டளையிட்டு இருக்க நாம் என்ன செய்ய இயலும்?
நமக்கு ஜீவன் தந்தவரும் வாழ வைப்பவரும் அவரே. நாம் எப்படி வாழ வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவரே தீர்மானிக்கிறார். நமது முயற்சிகளிலும் பணிகளிலும் இடர்பாடுகளை சந்திக்கும்போது அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கவும் நமது இருதயத்தை ஆராயவும் இடம் கொடுப்போமெனில் அவர் கிரியை செய்வதை அறிய இயலும்.
ஆண்டவர் கிரியைச் செய்யாமல் விலகிச் செல்லும்போது சபை மௌனமாய் இருக்க கற்றுக் கொள்ளட்டும். அவர் திரும்பி வரும் மட்டும் அவருக்காய் காத்திருப்போம். அவரோடு இணைந்து இருப்போம். அவரோடு பணி செய்வோம். அவருடன் நடந்து செல்வோம்.
மௌனம் கலையும் நேரம் வரும்போது துக்கத்துக்கும் முடிவு உண்டாகும்.
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன். நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு; வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர். தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர். ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள். திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது. என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது. புலம்பல் 3:22-33, 39-50.