வலதுபுறம் வலையைப் போட்டு திரளான மீன்களைப் பிடித்தார்கள்.
Now they were not able to draw it for multitude of fishes. (John 21:6)
Psalms 37:16; Psalms 104:24; Psalms 106:7; Ecc 5:3; Gensis 9:7; Genesis 17:2,4; Deu 7:7; Deu 10:22.
அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். (யோவான் 21:6)
சங்கீதம் 37:16; சங்கீதம் 104:24; சங்கீதம் 106:7; பிரசங்கி 5:3; ஆதியாகமம் 9:7; ஆதியாகமம் 17:2,4; உபாகமம் 7:7; உபாகமம் 10:22.
திரளான:
இயேசுகிறிஸ்து இல்லாமலும், இயேசு கிறிஸ்துவிடம் ஆலோசனை பெறாமலும் செயல்படுகின்ற கிறிஸ்துவினால் அழைக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட தேவனுடைய மனிதர்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுவடை செய்கிறார்கள். சில நேரங்களில் ஒரு பலனும் இல்லாமலும் போகின்றது. அழைத்தவரும், தெரிந்து கொண்டவரும், அபிஷேகித்தவரும், வரங்களை தாலந்துகளை தந்திருப்பவருமான அவரின் அனுமதி இல்லாமல் அவருடையவர்கள் ஒன்றும் செய்ய இயலாது.
இயேசு கிறிஸ்துவால் கட்டளை பெற்ற சீடர்கள் இயேசுவின் ஆலோசனை பெறாமல் மீன்பிடிக்க போயிருந்தாலும் அவர்கள் மேல் கோபப்பட்டு அவர்களை நிர்மூலமாக்கவோ, நிராகரிக்கவோ துணியாமல் அவர்களை மறுபடியும் தன்னில், தனது பணியில் நிலை நிறுத்தும்படி முயற்சிக்கின்றார். அதன் அடிப்படையில் அவர்களை அவர்களின் களத்துமேட்டிலேயே சந்திக்கின்றார். எதன் மேல் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்களோ அதனையே அவர்களுக்கு மிகுதியாக திரளாக கொடுக்கின்றார். அவர்கள் அவரிடம் கேட்கவில்லை. அவர்கள் தங்களுக்குள் விரும்பியதை ஆவியிலே அறிந்த இயேசு அவைகளை அவர்களுக்கு திரளாக கொடுத்தார்.
நாம் அவருக்கு வேண்டும் என்பது அவருடைய விருப்பமாயிருக்குமானால் நம் வழியிலே அவர் கடந்து வருவார். நாம் விரும்புவதை தருவார். நாம் அவருக்குத் தேவையில்லை என்பதை தன் மனதில் கொண்டு இருப்பாரானால் நாம் செல்லும் பாதையில் ஒருபோதும் அவரை காண முடியாது. அவரை சந்திக்கவும் இயலாது.
சீஷர்களின் மனதில் நிரம்பியிருந்த ஒன்றை அகற்றுவதற்காக அதனை அவர்களுக்கு போதும் போதுமென்கிற அளவுக்கு கொடுக்கிறார். ஏனெனில் இனி ஒருபோதும் அவ்வழியில் அவர்கள் வரும்படி விருப்பமோ பின்எண்ணமோ கொண்டிருக்கலாகாது என்பதுதான். உலக நன்மைகளில் திருப்திப்பட்டு திரும்ப அதன் மேல் வெறுப்பை கொண்டிராத எவரும் தேவனுடைய இராஜ்யத்தின் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இயேசு கிறிஸ்துவால் உலக நன்மைகளை கொடுக்க முடியும். ஆனாலும் அவைகளை கொடுப்பதற்காக தமது சீடர்களை தெரிந்துகொள்ளவில்லை. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கவும், தேவனுடைய ராஜ்யத்துக்காக பாடுபடவும் அழைப்பு பெற்றிருக்கிறார்கள்.
தேவனுடைய மனிதர்கள் தேவனுடைய காரியங்களில் தேறினவர்களாக இருப்பதையே தேவன் விரும்புகிறார். கிறிஸ்துவின் சிந்தையை தரித்திருப்பவர்களாக இருப்பதையே விரும்புகிறார். கிறிஸ்துவை மட்டுமே பின்பற்றுவதை விரும்புகிறார். கிறிஸ்துவோடு நடக்கவும், பணி செய்யவும், வாழவும் மட்டுமே விரும்புகிறார். அவரின் விருப்பத்துக்கு மாறாக நாம் போகும்போது ஒன்றில் நம்மை விடாமல் துரத்தி பிடிப்பார். இல்லையெனில் நம்மை தொடராமல் விட்டு விடுவார். இது அவரின் விருப்பம். அவரின் சித்தம். ஒருவரும் அவருக்கு ஆலோசனை சொல்ல இயலாது.
தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது, அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள். ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார், அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது, இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது. அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான், அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். சங்கீதம் 78:18-25
அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள், அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை, அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே. தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று. இவையெல்லாம் நடந்தும், அவர்செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள். சங்கீதம் 78:29-32
அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார். சங்கீதம் 106:15