குனிந்து பார்த்தான், கண்டான், உள்ளே போகவில்லை.
He, stooping down and looking in, saw the linen cloths lying there; yet he did not go in. (John 20:5)
1Samuel 2:17; 1Samuel 25:5; 2Chronicles 10:8; Job 29:8; Psalms 119:9; Proverb 1:4; Ecc 11:9; Ecc 12:1; Isaiah 40:30; Acts 2:17; 1John 2:13,14.
அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. (யோவான் 20:5)
1சாமுவேல் 2:17; 1சாமுவேல் 25:5; 2நாளாகமம் 10:8; யோபு 29:8; சங்கீதம் 119:9; நீதிமொழிகள் 1:4; பிரசங்கி 11:9; பிரசங்கி 12:1; ஏசாயா 40:30; அப்போஸ்தலர் 2:17; 1யோவான் 2:13,14.
வாலிபம்:
வாலிப பருவம் என்பது முறுக்கானது, உயிரோட்டமான துடிப்பு மிக்கது என்று பலவாறு கூறுகிறார்கள் இளம் கன்று பயமறியாது என்றும் கூறுவார்கள். ஆனால் வாலிபம் மாயை என்று விவிலியம் கூறுகின்றது. வயோதிபர்கள் முன்னிலையிலும் உயர்ந்தோரின் முன்னிலையிலும் தாழ்மையாகவும், பணிவாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பது விவிலிய போதனை.
பேதுருவை முந்தி ஓடிய சீஷன் தன் பலத்தினாலும் தைரியத்தினாலும் கலைமானை போல வேகமாக ஓடினான். கல்லறையினிடமும் உந்தி வந்தான். திறக்கப்பட்ட கல்லறையையும் கண்டான். உள்ளே குனிந்து பார்க்கவும் செய்தான். சீலைகளையும் கண்டான். ஆனால் கல்லறைக்குள் செல்லவில்லை. வாலிபனாகிய சீஷன் இயேசுவின் கல்லறைக்கு செல்ல இயலாத காரணம் என்ன? அறிஞர்கள் பயம் என்று கூறுகின்றார்கள். வாலிபம் எவ்வளவுதான் துடிப்புமிக்கதாக இருந்தாலும் இளங்கன்று பயமறியும் என்று கூற வேண்டியுள்ளது.
வாலிபர்களின் பயமற்ற வாழ்வுதான் பல பிரட்சனைகளுக்கும், தவறுகளுக்கும், பொல்லாப்புகளுக்கும், தீமைகளுக்கும் காரணமாய் அமைகின்றது. விவிலியம் வாலிபர்களின் பயப்படுதல் குறித்து போதிக்கின்றது.
முதலாவது வாலிபர்கள் தங்கள் பெற்றோருக்கு பயந்து கீழ்ப்படிந்து அடங்கி அமைதிபட்டு வாழ கற்றுக் கொண்டிருக்க வேண்டும். இதுதான் சமூக வாழ்வுக்கும் ஆன்மிக வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கிறது. இங்கே தவறுகிறவர்கள் முற்றிலும் தவறுகிறவர்களாகவே இருக்கிறார்கள். சில விதிவிலக்குகள் காணப்படலாம்.
இரண்டாவது போதிப்பவர்களாகிய ஆசிரியர்கள், போதகர்கள் ஆகியோருக்கு கீழ்ப்படிந்து பயந்து வாழ வேண்டியதாகும். இந்த அமைப்பு ஒரு வாலிபனை சிறந்த பக்கவமுள்ள திறமைசாலியாக மாற்றுகிறது.
மூன்றாவது வயோதிபர்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அவர்கள் முன்னிலையில் பணிவுடனும் மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். இதுவே ஒரு வாலிபனை பக்குவமடைந்த பண்பாளனாக மாற்றுகிறது.
நான்காவது தேவனுக்கு பயப்படுதல் ஆகும். அவரின் கட்டளைகளுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிந்து பயத்துடனே கர்த்தரைச் சேவிக்கிறவர்களாக இருக்க வேண்டும். முந்தின மூன்றில் ஏதாவது ஒன்றில் தவறினாலும் தேவன் முன்னிலையில் நிற்க தகுதியற்றவர்களாவோம். இந்த நிலைமையினால்தான் ஜீவனும் நன்மையும் சமாதானமும் ஆசீர்வாதமும் நீண்ட வாழ்வும் உண்டாகின்றது.
வாலிபர்களே உங்கள் வாழ்வை நீங்களே தீர்மானிக்க இயலாது. இந்த நான்கு நிலைகளினூடே கடந்த போகாமல் ஜெயிக்கவும் முடியாது.
நினைவு கூருங்கள்.
பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக் கண்டு அவனைக் கவனித்தேன். அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும், அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டை வழியாய் நடந்துபோனான். அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள். உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே. அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். நீதிமொழிகள் 7:7-11,21-27.