என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்

என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்.

Every branch in Me that does not bear fruit He takes away. (John 15:2)

John 17:12; Matthew 3:10; Matthew 15:13; Matthew 21:19; Luke 8:13; Luke 13:7-9; 1Corinthians 13:1; Hebrew 6:7,8; 1John 2:19.

என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். (யோவான் 15:2)

யோவான் 17:12; மத்தேயு 3:10; மத்தேயு 15:13; மத்தேயு 21:19; லூக்கா 8:13; லூக்கா 13:7-9; 1கொரிந்தியர் 13:1; எபிரெயர் 6:7,8; 1யோவான் 2:19.

அறுத்துப்போடுகிறார்:

சுவிசேஷங்களில் வெளிப்பட்டுள்ள இயேசு கிறிஸ்து அன்பை வெளிப்படுத்துகிறவர்தான். ஆனால் பாவிகள் மீது அன்பையும், தன் பிள்ளைகள் மீது கண்டிப்பையும் வெளிப்படுத்துகிறார் என்பதுவே சுவிசேஷங்களின் சாரம். கிறிஸ்துவாகிய செடியில் இணைந்து வளரும்படி தங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து தேவனுடைய தோட்டத்துக்குள் நடப்பட்டவர்கள் கனி கொடுக்கிறவர்களாயிருக்க வேண்டும். இல்லையெனில் தோட்டக்காரராகிய நட்டவர் அந்த கொடியை அறுத்துபோடுகிறார் – நீக்கி விடுகிறார் – அகற்றி விடுகிறார். இது ஒருவிதமான உடனடி நியாயத்தீர்ப்பாக காணப்படுகிறது. பிதாவின் இந்த செயலை குமாரன் பரிந்து பேசுவதின் மூலம் சிலகாலம் தாமதப்படுத்த வைக்கலாம். ஆனால் அவரின் முடிவை ஒருவராலும் தடுக்க முடியாது.

அறுத்துப்போடுதல் என்றச் சொல் விவிலியத்தில் பல சந்தர்ப்பங்களில் பற்பலவிதமான சொற்களாக குறிக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்து பாருங்கள். பொதுவான நியாயத்தீர்ப்பின் நாள் வரையிலும் பிதாவானவர் சில விஷயங்களில் காத்திருப்பதில்லை. பாவம் பெருகும்போதும், கனிகள் இல்லாத போதும், கெட்ட கனிகளைக் கொடுக்கும் போதும் தேவ கோபாக்கினை மெதுவாக பற்றியெரிந்து சில சேதங்களை விளைவிக்கும்.

கிறிஸ்துவில் இணைந்து பிணைந்து வளராதவனின் துன்மார்க்கம் பொதுவான நியாயதீர்ப்புக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரை அறிந்து, ருசித்து, அனுபவித்து மறுதலிப்பதும் கனி கொடாதிருப்பதும் அவ்வப்போது உடனடி விளைவுகளை ஏற்படுத்தியே தீரும்.
நாம் அவர் அன்புள்ளவர் என்று பொறுமையோடிருக்கும் காலத்திலேயே அவர் தம்மை அடிக்கிறவர் என்றும் தண்டிக்கிறவர் என்றும் வெளிப்படுத்துகிறார்.

அறுத்துப்போடுமுன்பதாக சுத்திகரிக்க இடம் கொடு. தப்புவாய்.
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.

ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். நீதிமொழிகள் 1:22-33.

ADD YOUR COMMENT

Powered By Indic IME