நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளில் அறிவீர்கள்.
At that day you will know that I am in My Father, and you in Me, and I in you. ( John 14:20)
John 15:5-7; Romans 8:1; 1Corinthians 1:30; 2 Corinthians 5:17; 2 Corinthians 12:2; 2 Corinthians 13:5; Galatians 2:20; Ephesians 2:10; Colossians 1:27; 1John 4:12.
நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். (யோவான் 14:20)
யோவான் 15:5-7; ரோமர் 8:1; 1கொரிந்தியர் 1:30; 2கொரிந்தியர் 5:17; 2கொரிந்தியர் 12:2; 2கொரிந்தியர் 13:5; கலாத்தியர் 2:20; எபேசியர் 2:10; கொலோசெயர் 1:27; 1யோவான் 4:12.
அறிவீர்கள்:
இயேசுகிறிஸ்து பிதாவிலும், பிதா கிறிஸ்துவிலும், சீஷர்கள் இயேசு கிறிஸ்துவிலும், இயேசுகிறிஸ்து சீஷர்களிலும் இருக்கிறதை அறிகிற அறிவும், அறியும் முறைமையும், அறியும் காலமும் மிகவும் முக்கியமானது. சீஷர்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்களா என்பதும், கிறிஸ்து சீஷர்களுக்குள் இருக்கிறாரா என்பதும் அற்புத கிரியைகளினாலும், நற்கிரியைகளினாலும், கிறிஸ்துவின் குணங்களைப் பிரதிபலிப்பதினாலும் மட்டுமே அறிய முடியும்.
சீஷர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள ஐக்கியமானது கிறிஸ்துவின் ஜீவன் மூலம் உருவானதாகும். அந்த ஜீவன் மரணத்தை ஜெயித்ததும், பாவத்தை ஜெயித்ததும், சாத்தானை ஜெயித்ததும் ஆகும். எனவே அவர் தமது சீஷர்களுக்குள் இருப்பாரெனில் சீஷர்கள் பாவத்தைக் கண்டும், மரணத்தைக் கண்டும், சாத்தானைக் கண்டும் பயப்படமாட்டார்கள். இந்த இறை அறிவுதான் அவர்களை பலவான்களாக மாற்றுகிறது. இதனால் எந்த பயமும் இல்லாமல் சுவிசேஷத்தைக் கொண்டு போனார்கள்.
நம்மில் அவர் வாசம் செய்ய வேண்டுமெனில் நாம் அவரில் வாழும்படி கற்றுக்கொண்டிருக்க வேண்டும். நம்மை அவருடைய கற்பனைகளுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அவருடைய ஆலோசனைகளை தள்ளாமலும் அவரின் வழிமுறைகளை விட்டு விடாமலும் அவருக்குள் தொடர வேண்டும். நாம் அவரோடு வாழவும், நடக்கவும் கற்றுக்கொள்வோமெனில் அவர் நம்மில் வாசம் செய்வார். அவர் நம்மில் வாசம் செய்யும்போது நாம் முற்றிலும் ஜெயிக்கிறவர்கள் ஆவோம்.
அவரை அறிகிற அறிவும், அவர் என்னை அறிகிற அறிவும் என்று ஒன்றிணைகிறதோ அன்றுதான் ஜெயவாழ்வு ஆரம்பம்.
என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். யோவான் 15:4-8