இயேசு மரித்தார், காலெலும்புகள் முறிக்கப்படவில்லை
when they came to Jesus and saw that He was already dead, they did not break His legs. (John 19:33)
John 19:36; Exodus 12:46; Psalms 34:20; Romans 5:6,8,15; Romans 6:10; Romans 8:34; Colossians 2:20; 2Timothy 4:1; Revelation 2:8
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. (யோவான் 19:33)
யோவான் 19:36; யாத்திராகமம் 12:46; சங்கீதம் 34:20; ரோமர் 5:6,8,15; ரோமர் 6:10; ரோமர் 8:34; கொலோசெயர் 2:20; 2தீமோத்தேயு 4:1; வெளி 2:8.
இயேசு மரித்தார்:
இயேசு கிறிஸ்து மரித்ததை போர் சேவகர்கள், நூற்றுக்கதிபதி மற்றும் அங்கு நின்றிருந்தவர்கள் பார்த்திருக்க வேண்டும். அதற்கான அடையாளங்கள் சமநோக்கு ந்ற்செய்தி நூல்களில் காணப்படுகின்றது. அவர் மகா சத்தமாய் பிதாவே உம் கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என்று சொல்லி ஜீவனை விட்டார். இதற்கான ஆதாரங்கள் மத்தேயு 27:50-55; மாற்கு 5:37-41; லூக்கா 23:46-48.
இயேசு மரித்துவிட்டார் என்பதற்கான இரண்டாவது அடையாளம் ஒரே நேரத்தில் சிலுவையில் அறையப்பட்ட மூவர்களில் மற்ற இருவரும் மரியாதிருக்க அவர்கள் காலெலும்புகள் முறிக்கப்பட்டு, குதிகால் நரம்புகள் அறுக்கப்பட்டு கொல்லப்பட்டதாகும். ஆனால் இயேசுவின் காலெலும்புகள் முறிக்கப்படவுமில்லை, குதிகால் நரம்புகள் அறுக்கப்படவுமில்லை. காரணம் அவர் ஏற்கனவே மரித்துவிட்டார் என்பதாகும்.
இயேசு கிறிஸ்து மரணமடைவார் என்று தீர்க்கதரிசிகள் இயேசு பிறப்பதற்கு முன்பதாகவே கூறியிருந்தார்கள். ஏசாயா 53:9-12. தாம் மரிப்பேன் என்று இயேசுவும் பல நேரங்களில் கூறியிருந்தார். இயேசுகிறிஸ்து மரித்ததை சுவிசேஷங்களும் உறுதிபடுத்துகின்றன. பிற்காலங்களில் திருச்சபைக்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களில் இயேசு கிறிஸ்து மரித்தார் என்று ஆணித்தரமாக எழுதி வைத்தார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் எங்கும் திரிந்து பிரசங்கிக்கவும் செய்தார்கள்.
இது உண்மை. சத்தியம். மெய்யாகவே இயேசு கிறிஸ்து மரித்தார்.
ஆனால் அக்காலம் தொட்டு இக்காலம் வரையிலும் இயேசுவின் மரணம் குறித்த இருவகையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முதலாவது, இயேசு மரிக்கவில்லை என்பதாகும். உபத்திரவங்களினாலும், சிலுவை பாடுகளினாலும் மரித்தது போன்று மயக்க நிலையிலே காணப்பட்டார் என்றும் சீஷர்கள் அவரை கல்லறையில் வைத்து நறுமண பொருட்களை தடவி அடக்கம் செய்ததினிமித்தம் மயக்கம் தெளிந்து உயிர் பெற்றார் என்பதாகும். அக்கால அரசாங்க கட்டுபாட்டில் நடந்த இச்செயல் குறித்த காரியங்கள் தெளிவாக காணப்படுகின்றன. எனவே இயேசு மரித்தார் என்பது உண்மை.
இரண்டாவது, இயேசு தேவனுடைய குமாரன், தேவனுடைய அம்சம். அவருக்கு பிறப்பு இறப்பு என்பதெல்லாம் கிடையாது. இயேசு சிலுவையில் அறையப்படும்போது சீஷர்கள் அவரை அப்புறபடுத்தி அவரை போன்று தோற்றம் கொண்ட ஒருவரை சிலுவையில் அறைந்தார்கள். இதனால் இயேசு மரிக்கவில்லை என்பதாகும். இதுவும் ஒரு அமானுஷ்ய வாதமேயன்றி வேறல்ல. உரோமர்களின் காலத்தில் இவ்விதம் நடக்க வாய்ப்பில்லை.
மனிதகுமாரனாக பிறந்தது உண்மையாயின் அவர் மனித குமாரனாக மரித்ததும் உண்மையே. இரத்தமும் நீரும் வந்தது உண்மையாயின் அவர் மரணமடைந்ததும் உண்மையே. ஆம் அவர் எனக்காக மரித்தார். என் பாவங்களுக்காக மரித்தார். என் அக்கிரமங்களுக்காக மரித்தார். என்னை மீட்க அவர் மரணமேற்றார். அவர் மரிக்கவில்லையெனில் நான் ஆவியில் பிழைப்பது எப்படி?
அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. ரோமர் 5:6-12.
கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ரோமர் 6:8-11.