இயேசு செய்தவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் உலகம் கொள்ளாது.
many other things that Jesus did, which if they were written one by one.. (John 21 25)
John 20:30,31; Matthew 11:5; Acts 10:38; Acts 20:35; Hebrew 11:32; Job 26:14; Psalms 40:5; 71:15; Ecc12:12-14.
இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:25)
யோவான் 20:30,31; மத்தேயு 11:5; அப்போஸ்தலர் 10:38; அப்போஸ்தலர் 20:35; எபிரெயர் 11:32; யோபு 26:14; சங்கீதம் 40:5; சங்கீதம் 71:15; பிரசங்கி 12:12-14.
அளவில்லாத கிரியைகள்:
இயேசு கிறிஸ்துவின் வரலாற்று கிரியைகளையும், வரலாற்று உபதேசங்களையும், பரலோக இராஜ்யத்தின் காரியங்களையும் குறித்து மத்தேயு முதல் யோவான் வரையிலும் உள்ள புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இவைகள் மட்டுமே நமக்கு போதுமானது என்று அவைகளை எழுதியுள்ளார்கள். இயேசு கிறிஸ்து அநேக காரியங்களைச் செய்தார், பேசினார். யோவான் சுவிசேஷத்தில் எழுதபட்டுள்ளவைகள் தவிர்த்தும் ஏராளமான காரியங்கள் உண்டு என்று சொல்லுகிறார். யோவான் கூறுவது உண்மையே. யோவான் சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிராத வேறு அநேக காரியங்கள் குறித்து வேறு 3 புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இதனையே குறிப்பிடுகின்றார் என நம்பலாம். ஏனெனில் லூக்கா சகலவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து எழுதியுள்ளதாக குறிப்பிடுகின்றார்.
ஒருவேளை முந்திய மூன்று சுவிசேஷங்களையும் தவிர்த்து இன்னும் ஏராளமுண்டு என்று கூறுகின்றாரென்றால் அவைகளை ஆவியானவர் ஏன் எழுதிவைக்கவில்லை? இரண்டு காரணங்களை எடுத்துக்கொள்வோம். ஒன்று, மற்ற சுவிசேஷங்களைவிடவும் இயேசுவின் கிரியைகளை உபதேசங்களை வித்தியாசமான முறையில் – வியாக்கியான முறையில் எழுதுவதை குறித்து இப்படி கூறியிருக்கலாம். இரண்டாவது, இயேசுவின் கிரியைகளும், உபதேசங்களும் எழுதப்படாமல் விட்டுவிட ஆவியானவர் தூண்டினார். காரணம் என்னவெனில் பிற்காலங்களில் அவைகளை ஆய்ந்து தேடி உண்மையை விட்டு விலகிப்போகும்படியான சோதனைக்குள்ளாக்கும்படியாகவே.
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பது உண்மையாயின் ஆவியானவர் அவைகளை எழுதாது விட்டிருக்கமாட்டார். ஆவியானவர் மூன்று காரியங்களை மனதில் கொண்டிருந்தார். இங்கே நாம் முன்னர் கண்டதின்படி ஒன்று பிற்கால சமுதாயங்களின் மீட்புக்கு இவைகள் போதுமென்று ஆவியானவர் அறிந்திருந்தார். இரண்டாவது, பிற்கால சந்ததியினரை சோதிக்கும்படியாக இவைகளை எழுதாமல் விட்டிருக்கக்கூடும். மூன்றாவது ஆவியானவர் அவைகளை பிற்காலங்களில் வெளிபடுத்தும்படியாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அப்படியானால், ஆவியானவர் அவைகளை எந்தகாலத்தில், எங்குவைத்து வெளிபடுத்துவார் என்பதற்கு விடை காணவேண்டும்.
அதாவது, சபையுகத்தில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் இவைகளை வெளிபடுத்துவார். கிறிஸ்துவை உண்மையாக பற்றிக்கொண்டு நடப்பவர்களின் மூலம் கிறிஸ்துவின்மேல் விசுவாசிகள் அதிக விசுவாசம் கொள்வதற்காகவும், பக்திவிருத்தியடைவதற்காகவும் வெளிபடுத்துவார். மாறிவரும் உலகில் சபைகள் மாற்றமடையாமல் உறுதிபட்டு நிற்பதற்கு ஆவியானவர் போதகர்கள் மூலம் சபைக்குள் யோவானைபோல வியாக்கியானங்களை அருளிச் செய்வார். ஆனால் இவைகளினால் இடறலும் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவோமாக.
அன்பானவர்களே! இன்று யோவான் சுவிசேஷத்தின் தியானங்கள் முற்றுப் பெறுகின்றது. இதுவரையிலும் தாங்கள் இந்த தியானங்களை வாசித்து பக்தியில் விருத்தியடைந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அநேக கேள்விகளுக்கும் யோவான் சுவிசேஷத்திலிருந்து விடைகிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். என் காலைதியானம் எனக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்ததை நான் உணர்ந்தேன். உங்களுக்கும் அப்படியே பயனுள்ளதாயிருந்திருக்கும் என்று கிறிஸ்துவில் நம்புகிறேன்.
இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்களுக்கு உண்டாவதாக.
அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளிபடுத்தல் 22:10-19.