இயேசுவுக்கு காடியைக் குடிக்க கொடுத்தார்கள்

இயேசுவுக்கு காடியைக் குடிக்க கொடுத்தார்கள்

They filled a sponge with sour wine, put it on hyssop, and put it to His mouth. (John 19:29)

Exodus 15:23; Number 9:11; Ruth 1:20; Psalm 69:21; Proverb 14:10; Proverb 17:25; Isaiah 38:17; Matthew 27:34; Act 8:23; Romans 3:14; Hebrew 12:15; Revelation 10:10.

காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். (யோவான் 19:29)

யாத்திராகமம் 15:23; எண்ணாகமம் 9:11; ரூத் 1:20; சங்கீதம் 69:21; நீதிமொழிகள் 14:10; நீதிமொழிகள் 17:25; ஏசாயா 38:17; மத்தேயு 27:34; அப்போஸ்தலர் 8:23; ரோமர் 3:14; எபிரெயர் 12:15; வெளி 10:10.

காடியைக் கொடுத்தார்கள்.
காடி என்பதைக் குறித்து விவிலிய விற்பன்னர்கள் பல காரண காரியங்களைக் கூறியிருந்தாலும் நாம் இங்கே கசப்பு  என்றே தியானத்தில் கொள்கின்றோம். தன்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள் என்று சங்கீதகாரர் கூறுகின்றார். மத்தேயு 27:34 லும் இயேசுவுக்கு கசப்பு கலந்த காடியைக் குடிக்க கொடுத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

எப்படிப்பட்ட கசப்பை அவருக்கு குடிக்க கொடுத்தார்கள்? 
தாகத்தோடிருந்தவருக்கு குடிக்கும் தண்ணீரில் கசப்பை கலந்து கொடுத்தார்கள். பசியோடிருந்தவருக்கு உணவில் கசப்பை கலந்து கொடுத்தார்கள். நல்வார்த்தைகளை – கிருபையுள்ள வார்த்தைகளை வசனித்து அனேகரின் இருதயத்தை தேற்றினவருக்கு கசப்பான வார்த்தைகளை வசனித்து மனநோவுண்டாக்கினார்கள். தன் உயிருனும் மேலாக கருதிய தன் ஜனத்தாரும், சீஷர்களில் சிலரும் சாவிலும் கசப்பாகவே இருந்தார்கள். சமாதானத்துக்கு பதிலாக கசப்பை கொடுத்தார்கள். களைகளை பிடுங்கி நெருப்பிலே போட்டு நற்கனி கொடுக்கும் உயர்குல திராட்சை செடியாய் நாட்டினவருக்கு எதிராக கசப்பான வேரை முளைக்க செய்தார்கள். 

இயேசுகிறிஸ்து கசப்பான காடியைக் குடித்தாரோ இல்லையோ நற்கிரியைகளை செய்த அவருக்கு கசப்பை கொடுக்கும் உரோமர்களிடம் ஒப்படைக்கும் தைரியம் துணிகரம் இஸ்ராயேலருக்கு எப்படி உண்டாயிற்றோ அப்படியே அனேக நன்மைகளை செய்த மனிதர்கள் கசப்பான அனுபவங்களினால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவியுள்ளார்கள். 

குடும்பத்தில் கணவருக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும், பெற்றாருக்கு பிள்ளைகளும் , பிள்ளைகளுக்கு பெற்றாரும் சாவிலும் கசப்பாய் இருப்பதை சமீப காலங்களாக  காண்கின்றோம். 
சபைகளிலே ஊழியருக்கு விசுவாசிகளும், விசுவாசிகளுக்கு ஊழியரும், கசப்பாய் இருப்பதை சில இடங்களில் காண்கின்றோம்.
சமுதாயத்தில் ஜாதிவெறி, மதவெறி, மொழிவெறி, வன்முறை, பாலியல் கொடுமை, குடிவெறி, போதைபொருள், காதல் களியாட்டம், சினிகூத்து போன்ற கசப்பான வேர்கள் முளைத்து சமுதாயத்தை சீரழிப்பதை காண்கின்றோம். 

அரசியலில் தூய்மையானவர்களின் காலங்கள் கடந்துபோய் சமுதாயத்தில் கசப்பாயிருப்பவர்களே அரசியலில் கோலோச்சுகின்றனர். 

இயேசுவுக்கு காடியைக் குடிக்க கொடுத்ததுபோல நல்லவர்களுக்கும், நீதிமான்களுக்கும், செம்மையானவர்களுக்கும், நன்னெறியாளர்களுக்கும் இக்கால சமுதாயம் கசப்பை குடிக்க கொடுத்து கொன்றுவிட எத்தனிக்கின்றது. 

கசப்பானவைகளை தித்திப்பாக்கும் இயேசு கசப்பான வேர்களை பிடுங்கிபோடும் ராஜாங்கம் கொண்ட ராஜாவாக சீக்கிரம் வரப்போகின்றார். 

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். எபிரேயர் 12:14-17.

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். யாக்கோபு 1:12-15.

ADD YOUR COMMENT

Powered By Indic IME