இந்த மனுஷகுமாரன் யார்?
how can You say,The Son of Man must be lifted up? Who is this Son of Man? (John 12:34)
Jn3:14-16; Jn5:25-27; Jn8:53-58; Mt16:13; Mt21:10; Mt22:42,45; Act7:56; Rev1:13; Rev14:14.
ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர், இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள். (யோவான் 12:34)
யோவான் 3:14-16; யோவான் 5:25-27; யோவான் 8:53-58; மத்தேயு 16:13; மத்தேயு 21:10; மத்தேயு 22:42,45; அப்போஸ்தலர் 7:56; வெளி 1:13; வெளி 14:14.
மனுஷகுமாரனாகிய இயேசு:
பாவம் உலகில் வருவதற்கு முன்பாக மனிதன் தேவ சாயலாகவும், தெய்வ உறவு உள்ளவனாகவும் காணப்பட்டான். பாவம் உலகில் வந்தபின்போ மனிதன் தேவ சாயலை இழந்தான், தேவனோடுள்ள உறவை இழந்தான், அற்பகால ஜீவியாக மாறினான். தேவன் நியாயபிரமாணத்தைக் கொடுத்து தூய்மைப்படுத்தியிருந்தாலும் மனிதன் தொடர்ந்து அற்பஜீவியாகவே வாந்துவந்தான். இந்த நிலையில் தேவகுமாரனாகிய கிறிஸ்து மனுஷகுமாரனாக இவ்வுலகிற்கு வந்தார். எல்லாரும் பாவம் செய்து தேவமகிமையை இழந்துபோயுள்ள இவ்வுலகில் மனுஷகுமாரனாக பிறக்கும் யாவருமே ஜென்ம பாவிகளாகவே கருதப்படுகின்றனர்.
இப்படியிருக்க இயேசுவை மனுஷகுமாரன் என்று சொல்வதினால் அவரும் சரீரநிலையில் ஜென்மபாவியாகவே கருதப்படுவார். ஆனால் இயேசுகிறிஸ்து வெறும் மனுஷகுமாரனாக வரவில்லை. தேவகுமாரனாகவும், மனுஷகுமாரனாகவும் வந்ததினால் பாவம் இல்லாதவராயிருக்கிறார்.
நியாயபிரமாண விதிகளின்படி இரத்தம் சிந்துதல் எதிர்பார்க்கப்பட்டதினால் பாவமில்லாத மனுஷகுமாரனாக தோன்றினார். அவர் மனுஷகுமாரனாக தோன்றுவார் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பழைய ஏற்பாடாகிய புனித எழுத்தேடுகள் தீர்க்கதரிசனமாக கூறியது. பாவத்தை நீக்க மனுஷகுமாரனாகவும், தேவனிடம் சேர்க்க தேவகுமாரனாகவும் வந்தார்.
நாம் பாவ உலகில் வாழும் மனிதகுமாரர்களாக இருந்தாலும் கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இருக்குமானால் நாமும் பாவமில்லாத மனுஷகுமாரர்களாக வாழ்ந்து தேவனிடம் சென்றடைய இயலும்.
ஏனெனில் குமாரனின் ஜீவன் இல்லாதவன் அவருடையவனல்ல என்று ரோமர் நிருபம் கூறுகின்றது. ரோமர்8:8-11. நீரில் எண்ணெய் கலந்தாலும் எண்ணெய் தனித்தே நிற்கும். அதுபோல பாவ உலகில் நாம் வாழ்ந்தாலும் பாவத்தினால் தூண்டப்படும் சரீரத்தை கொண்டிருந்தாலும் பாவத்தினால் அலைக்கழிக்கப்படாதபடிக்கு தேவபிள்ளைகளாக வாழும் மனிதர்களாகவே ஜீவிக்க முடியும்.
பாவ உலகில் வாழ்ந்துதானாக வேண்டும், பாவம் செய்யாமல் ஜீவித்துதானாக வேண்டும்.
இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். ரோமர்1:4,5.