அவருடைய வார்த்தைகள் நமக்குள் இராது.

அவருடைய வார்த்தைகள் நமக்குள் இராது.

If we say that we have not sinned His word is not in us. (1John 1:10)

1John 1:8; Exodus 24:3; Deu 6:6; Deu 30:14; 1 Samuel 15:26; Psalms 50:17; Jeremiah 15:16; Jeremiah 23:36; Mark 8:38; John 12:47; 2Peter 2:3; Revelation 19:13.

நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
(1 யோவான் 1:10)

1யோவான் 1:8; யாத்திராகமம் 24:3; உபாகமம் 6:6; உபாகமம் 30:14; 1சாமுவேல் 15:26; சங்கீதம் 50:17; எரேமியா 15:16; எரேமியா 23:36; மாற்கு 8:38; யோவான் 12:47; 2பேதுரு 2:3; வெளி 19:13.

தேவ வார்த்தையை அவமதித்தல்.

இரட்சிக்கப்படாத ஒருவர் தன்னில் பாவமில்லையென்று சொல்லுகிறவனாயிருந்தால் அவனின் நான்காவது குணம் தேவ வார்த்தையை தனக்குள் கொண்டிராததுவேயாகும். பாவம் செய்கிறவனிலும், தன்னை பாவியென்று ஒத்துக்கொள்ளாதவனிலும் பரிசுத்தரின் வார்த்தைகள் நிலை நிற்பதில்லை. வார்த்தை என்பது அக்கினியாகவும், சம்மட்டியாகவும், விதையாகவும், வாளாகவும் இருப்பதினால் பாவம் செய்கிறவன் தேவ வார்த்தைக்கு செவிகொடுக்கமாட்டான். ஊனையும், கணுக்களையும் பிரிக்குமென்பதினால் பாவி ஒருவன் அவருடைய வார்த்தைக்கு செவிகொடான். கர்த்தருடைய வார்த்தை நியாயந்தீர்க்கும் என்பதினால் பாவம் செய்கிறவன் விவிலியம் விரும்பான்.

பாவம் என்பது தேவனுடைய வாக்கை – ஆலோசனையை – கட்டளையை தள்ளிவிட்டு சர்ப்பத்தின் – பிசாசின் – நண்பர்களின் – உலகத்தின் – மாம்சத்தின் வார்த்தையை தனக்குள் கொண்டிருப்பதாகும். சபையிலே போதிக்கப்படும் கர்த்தரின் வாக்கைக் கேட்டும் அவைகளை இருதயத்தில் வைத்திருக்க இயலவில்லை. கேட்கும்போது உணர்வடைகிறோம். சபையை விட்டு வெளியே வரும்போது மறுபடியும் இருதயம் இருளடைகின்றது. தேவனுடைய ஆலோசனையும், போதகரின் ஆலோசனையும், இரட்சிக்கப்பட்ட தகப்பனின் ஆலோசனையும் புறந்தள்ளபடுமானால் அங்கே பாவத்தையும், இச்சையையும், கீழ்படியாமையையும், கலகத்தையும் பிறப்பிக்கும் சாத்தானின் வார்த்தைகளால் நிரம்பியுள்ளது என்று பொருளாகும். கர்த்தருடைய வார்த்தையை புரட்டி, கபடாய் போதித்து, தப்பறைகளை உபதேசித்து, மாறுபட்ட விளக்கங்களை கொடுக்கிறவர்களிலும் தேவனுடைய வாக்கு இடம் பெறவில்லை. அவர்கள் போதிக்கின்ற தேவ வாக்குகளில் பாவம் சார்ந்த இனிப்பு பூசப்பட்டுள்ளது.

பரிசுத்தராகிய தேவன் பாவத்தோடு இணைந்து பயணிக்கின்றவரல்ல. பரிசுத்த ஆவியானவர் பாவத்தோடு சேர்ந்து பயணிப்பதில்லை. அப்படியானால் கர்த்தருடைய வார்த்தையும் பாவகாரியங்களும் ஒருவரில் இணைந்து பயணிக்காது. அவ்வாறு காணப்படுமானால் அது மாய்மால வாழ்க்கையும், வஞ்சிக்கும் ஆவியுமாகும்.

தேவ வார்த்தைகளை தள்ளிவிட்டவர்கள்….
பாவம், தவறுகள், பிழைகள் செய்வதை தவறாக நினைக்கமாட்டார்கள்…
அவர்களை உணர்த்தினால் ஒருவேளை கோழையாகி மௌனமாவார்கள், இல்லையெனில் எதிர்த்து சண்டைபண்ணுவார்கள்…
மனந்திரும்புதலின் ஆவியைக் கொண்டிருக்க மாட்டார்கள்…..
பொருளாசைக்கு சாயும்படி தங்களை தயார்படுத்தி அதற்கேற்றவாறு இச்சைக்கேற்ற போதகர்களை தேடிக்கொள்வார்கள்…
இவர்களில் விதைக்கப்படும் வசனங்களை பொறுக்கிப்போடும்படியாக கள்ளபருந்து கூடவே பயணிக்கும்..
இன்னும் பல….

சில கேள்விகள்….
கர்த்தருடைய வார்த்தையை வாசித்தும், தியானித்தும், கேட்டும், பிரசங்கித்தும் ஏன் அதற்கு முழுமனதோடு கீழ்படிய முடியவில்லை?….

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:1,2..

என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய். யோசுவா 1:7,8..

ADD YOUR COMMENT

Powered By Indic IME