அப்படிபட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
For this reason the people also met Him, because they heard that He had done this sign. (John 12:18)
Jn12:9-11; Lk13:17; Act4:16,21; Jos3:5; 1Chr16:13; Ps105:6; Dan4:2,3; Mk3:8; Jn20:30; Ro15:18.
அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.
(யோவான் 12:18)
யோவான் 12:9-11; லூக்கா 13:17; அப்போஸ்தலர் 4:16,21; யோசுவா 3:5; 1நாளாகமம் 16:13; சங்கீதம் 105:6; தானியேல் 4:2,3; மாற்கு 3:8; யோவான் 20:30; ரோமர் 15:18.
அற்புதங்கள்:
கர்த்தராகிய இயேசு செய்த அற்புதங்களினிமித்தம் திரளான ஜனங்கள் அவரை பின்பற்றினார்கள். அவரை விசுவாசித்தார்கள். அவரை எதிர்த்தார்கள். அவருக்கு எதிர்கொண்டு போனார்கள். இங்கே அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, அற்புதங்களைக்குறித்து கேள்விப்பட்டு அவரை வரவேற்கும்படியாக அவருக்கு எதிர்கொண்டு போனார்கள் என்றுள்ளது. விசுவாசித்து எதிர்கொண்டு போனார்களா, ஆச்சரியப்பட்டு எதிர்கொண்டு போனார்களா என்று தெரியவில்லை. மேசியாவை குறித்த எதிர்பார்ப்பு யூதர்களிடையில் இருந்ததினாலும், இயேசுவின் அற்புதங்களைகுறித்து கேள்விபட்டதினாலும் வந்திருப்பவர் மேசியாவாயிருக்குமோ என்ற ஆர்வத்திலும் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள். இக்காலத்திலும் ஏதோவொன்றை பெறும்படியாகவும் சமூக அந்தஸ்துக்காகவும் இயேசுவின் திருச்சபைகளை நிரப்பிக்கொண்டிருக்கின்ற பரிசுத்தவான்கள் பலபேர் உண்டு. நாம் அப்படிபட்டவர்களாயிராமல் பாவமன்னிப்பிற்காகவே அவரை பின்பற்றுவோம்.
கேள்விபட்டதினால் எதிர்கொண்டுபோயினர் என்பதுபோல விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் (ரோமர்10:17) என்று கூறப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இயேசுவையும் சுவிசேஷத்தையும் குறித்து கேள்விபடும்படியாகவே இவைகளை உரக்க அறிவிக்க வார்த்தைகளையும், கிரியைகளையும் பரிசுத்த ஆவி மூலமாக நமக்குள் தந்துள்ளார். வசனத்தினாலும் கிரியைகளினாலும் உண்டாகிற விசுவாசமே பரலோகிலிருந்து வரப்போகிற இயேசுவை எதிர்கொண்டு போகும்படி நம்மை வழிநடத்துகிறது. அற்புதங்கள் ஜனங்களை சபைக்குள்ளும், நற்கிரியைகளும் விசுவாசமும் நம்மை பரதீசுக்குள்ளும் நடத்துகின்றது.
ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. 1தெசலோனிக்கேயர்1:9,10.