இன்றைக்கு நரகத்தில் யார் இருக்கிறார்கள்?
இன்றைக்கு அநேகர் ஒரு மனுஷன் மரிக்கும் போது அவன் ஒன்று நரகத்திற்கு போகிறான் அல்லது பரலோகத்திற்கு போகிறான் என்று போதிக்கிறார்கள்.
இது சத்தியமா?
ஒருவன் மரிக்கும் போது நரகத்திற்கும் (அக்கினி கடல்) பரலோகத்திற்கும் போவான் என்றால் எதற்காக நியாயத்தீர்ப்பு நாள் என்று ஒன்று இருக்கிறது?
இயேசு கிறிஸ்து எல்லாரையும் நியாயத்தீர்ப்பார் என்கிற தீர்க்கதரிசனமே பொய்யாக போய் விடும்.
இன்னும் சில கள்ள போதகர்கள் தங்களை தேவன் நரகத்திற்கு கூட்டிக் கொண்டு போய் எல்லாவற்றையும் காண்பித்து நீ பூமிக்கு போய் நரகத்தைப் பற்றியும் அதில் வேதனைப்படக்கூடியவர்களைப் பற்றியும் எச்சரி என்று சொன்னதாக ஆடியோ கேசட் மற்றும் டீவிடி கேசட் கூட வெளியிட்டு இருக்கிறார்கள் இது எல்லாம் உண்மையா?
இப்போது கூட ஒரு ஸ்திரீ நரகத்திற்கு போய் விட்டு வந்தேன் என்று பேசக்கூடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டு இருக்கிறது.
இந்த மாதிரி வீடியோ ஆடியோ வரும் போது வேத வாக்கியங்களை கொண்டு நாம் சோதித்து பார்க்க வேண்டும்.
நாம் மனுஷர்கள் போதிக்கக்கூடிய உபதேசங்களை சோதித்து பார்ப்பதற்கு தேவன் நமக்கு அனுமதி அளித்து இருக்கிறார்.
1யோவான் 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
1தெசலோனிக்கேயர் 5:21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
நாம் எப்படி சோதித்து பார்க்க முடியும் என்றால் அவருடைய வேத வசனங்களை கொண்டு தான் அப்படி செய்ய முடியும்.
முதலில் மனுஷன் மரிக்கின்ற போது எங்கே போகிறான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும் அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
எந்த ஒரு மனிதனும் மரித்தாலும் அவன் பாதாளத்திற்கு தான் போகிறான். அங்கே இரண்டு பிரிவுகள் இருக்கிறது.
1) வேதனையுள்ள ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
2) பரதீசு அல்லது ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த போது அவரோடு மனந்திரும்பி மரித்த கள்ளனும் பாதாளத்திலே இருக்கிற பரதீசுக்கு சென்றார்கள் .
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சிலுவையில் மனந்திரும்பின பின் மரித்த கள்ளனும் கிறிஸ்துவும் மரித்த போது பரதீசுக்கு தான் சென்றார்கள்.
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷன் மூன்றாம் வானம் வரை சென்று பரதீசுகுள்ளாக எடுக்கப்பட்டு மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று பவுல் சாட்சி கொடுக்கிறார்.
2 கொரிந்தியர் 12:2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
2கொரிந்தியர் 12:3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
2கொரிந்தியர் 12:4 அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
கிறிஸ்துவுக்குள்ளான மனுஷன் பரதீசில் என்ன பார்த்தார் என்பதை இந்த வசனத்தில் இருந்தே கற்றுக் கொள்வோம்.
1)பரதீசில் மனுஷர்கள் பேசக்கூடிய எந்த பாஷையும் அங்கே பேச படுவதில்லை.
2)அங்கே பேசக்கூடிய வார்த்தைகள் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகள் என்றால் அந்த வார்த்தைகளை அவரால் புரிந்து கொள்ள முடிந்ததா?
3)பரதீசுக்கு போன மனுஷன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ என்பதே அந்த மனுஷனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
4)அது தேவனுக்கு மாத்திரமே தெரியும்.
வேத வாக்கியங்கள் பரிசுத்த ஆவியானவர் மூலம் எழுதப்பட்ட படியினால் எல்லாரும் சாட்சிகளாய் இருக்கிறார்கள்.
அப்படியென்றால் பரதீசு என்று ஒன்று இருக்கிறது அல்லவா?
கிறிஸ்தவ வாழ்க்கையில் ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்று கிறிஸ்துவும் வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்.
வெளி 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
பாதாளத்திலே பரதீசு என்ற ஒரு பகுதி இருக்கிறது.
மேலும் இன்னும் இந்த பாதாளத்தின் பகுதிகளை தரித்திரனாகிய லாசருவின் சம்பவத்தில் இருந்து இன்னும் அதிகம் கற்றுக் கொள்ள முடியும்.
லாசரு ஐஸ்வரியவன் சம்பவம் அது உவமை என்று அநேகர் சொல்லுகிறார்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்து இந்த சம்பவத்தை உவமை என்று எங்கேயும் சொல்லவில்லை என்பதை கவனியுங்கள்.
நம்முடைய மரணத்திற்கு பிறகு என்ன சம்பவிக்கிறது என்பதை இயேசு கிறிஸ்து இந்த சம்பவத்தின் மூலம் மிக தெளிவாக காண்பிக்கிறார்.
லாசருவும் ஐசுவர்யவானும் மரித்த போது அவர்கள் எங்கே இருந்தார்கள்?
லூக்கா 16:22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்;
ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்களை தேவன் தம்முடைய தூதர்களை கொண்டு ஆபிரகாமின் மடியில் கொண்டு போய் விடுகிறார் என்பதே எவ்வளவு பெரிய சந்தோசம் பாருங்கள்.
ஐஸ்வரியவன் மரித்து கண்ணை மூடிய போது அவர் பாதாளத்தில் வேதனையுள்ள ஸ்தலத்தில் கண்களை திறந்தார்.
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
அப்படியானால் இன்றைக்கு எந்தவொரு மனிதன் மரித்தாலும் ஒன்று பாதாளத்திலே வேதனையுள்ள ஸ்தலத்திலே இருப்பார்கள் அல்லது பரதீசிலே இருப்பார்கள்.
வேதனையுள்ள ஸ்தலத்தில் இருப்பவர்கள் பரதீசில் இருப்பவர்களை பார்க்க முடியும் பேச முடியும். ஆனால் அவர்கள் கடந்து பரதீசுக்கு போக முடியாது என்றால் இரண்டுக்கு இடையில் பெரிய பிளப்பு உண்டாக்கப்பட்டு இருக்கிறது.
அங்கே போன ஐஸ்வரியவன் எவ்வளவு கெஞ்சியும் அவன் பூமிக்கு திரும்ப முடியவில்லை.
அப்படியென்றால் மரிக்கிறவர்கள் பாதாளத்திற்கு போகிறார்கள் என்றால் நரகத்தில் (அக்கினி கடலிலே யார் இருக்கிறார்கள்?
அப்படியானால் இன்றைக்கு நரகத்திலே யார் இருக்கிறார்கள்?
நரகம் எப்படி இருக்கும் என்று மனுஷர்கள் நமக்கு சாட்சி கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் தேவனே நரகம் எப்படி சாட்சி கொடுக்கிறார்.
மாற்கு 9:47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
மாற்கு 9:48 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
அது அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடல் என்று தேவன் குறிப்பிடுகிறார்.
வெளி 21:8 ………….இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
கீழே உள்ள வசனத்தில் நரகம் என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள் ஆனால் அது ஆழமான படு குழி என்று தான் கிரேக்க வேதாகமத்தில் இருக்கிறது.
2பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
ஆதி மேன்மையை காத்துக்கொள்ளாத தூதர்களை தேவன் நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
நியாயாாதிபதிகள் 1:6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
இந்த ஆழமான படு குழி, அந்தகார இருள் இது எல்லாம் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் (தேவனை தவிர) தெரியாது இவர்கள் நியாயத்தீர்ப்பு நாளுக்காக அடைத்து வைக்கப் பட்டு இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து இந்த பூமியை நியாயந்தீர்க்க இரண்டாம் வருகையில் வரும் போது இந்த உலகத்தை நியாயந்தீர்க்கும் போது அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாதவர்களை அக்கினி கடலிலே தள்ளுவார்.
மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியாதவர்களை நித்திய அக்கினியிலே போடுகிறவர்கள் தேவதூதர்களா அல்லது பிசாசா?
மத்தேயு 13:49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
மத்தேயு 13:50 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
தேவ தூதர்கள் தான் அந்த வேலையை செய்ய போகிறார்கள்.
இன்றைக்கு நரகத்தில் (அக்கினி கடல்) யாரும் இல்லை என்பது தெளிவாக இருக்கிறது அல்லவா.
இயேசு கிறிஸ்து உலகத்தை நியாயத்தீர்த்த பிற்பாடு தான் மரணமும் பாதாளமும் அக்கினி கடலிலே தள்ளப்படும்.
வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
இந்த வசனத்தில் கிறிஸ்து உலகத்தின் முடிவில் தான் தமக்கு கீழ்ப்படியாதவர்களையும் பிசாசையும் அவன் தூதர்களையும் அக்கினி கடலிலே தள்ளும் போது அந்தகாரத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிற தூதர்களும் நியாயந்தீர்க்கப்பட்டு தள்ளப்படுவார்கள்.
இதில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய சத்தியம் என்னவென்றால் இன்றைக்கு அக்கினி கடலிலே (நரகம்) யாரும் இல்லை என்று தேவன் தம்முடைய வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
அப்படியென்றால் நரகத்திற்கு போய் விட்டு வந்தோம் அங்கே அநேகர் வேதனைப்படுகிறார்கள் சாத்தான் அவர்களை வாட்டி வதைக்கிறான் என்று பிரசங்கிக்கக் கூடிய கள்ள போதகர்களைக் குறித்து என்ன?
2பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2பேதுரு 2:2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
இப்படி தேவனுடைய வார்த்தைகளை புரட்டக்கூடியவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
இன்னொரு விசயம் என்னவென்றால் தேவன் ஒருபோதும் மனுஷனுடைய சாட்சியை ஏற்றுக்கொள்வதில்லை?
இயேசு கிறிஸ்து தன்னை குறித்து சாட்சி கொடுத்தாலே அது மெய்யாய் இராது.
யோவான் 5:31 என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
இயேசு கிறிஸ்து தன்னை குறித்து அவர் மாத்திரம் சாட்சி கொடுத்தால் அது மெய்யாய் இராது என்றால் நாம் மனுஷருடைய சாட்சிகளை ஏற்றுக் கொள்ளலாமா?
யோவான் 5:34 நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் பாதாளத்தைக் குறித்து சில சத்தியங்களைக் கற்றுக் கொள்வோம்.