கொரோனோ வைரஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளமா?

கொரோனோ வைரஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளமா?

இன்றைக்கு உலக முழுவதும் பயந்து கொண்டு இருக்கிற வார்த்தை கொரோனோ வைரஸ் என்ற வார்த்தை தான்.

உலகம் முழுவதும் இருக்கக் கூடிய அநேகர் இந்த கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அநேகர் மரித்தும் இருக்கிறார்கள்.

இந்த கொரோனோ வைரஸ் தாக்கம் வந்த போது அநேக பிரசங்கியார்கள் இது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளம் என்கிறார்கள்.

இவர்கள் சொல்லுவது உண்மையா?

அதற்கு ஆதாரமாக இந்த வசனத்தை பயன்படுத்துகிறார்கள்.
மத்தேயு 24:7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

இந்த வசனத்தை புரிந்து கொள்ளுவதற்கு மத்தேயு 24அதிகாரம் ஆரம்பத்தில் இருந்து படித்தால் தான் இதை புரிந்து கொள்ள முடியும்.

தேவாலயம் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்பட்டு போகும் காலம் வரும் என்று தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு தீர்க்கதரிசனமாக சொன்னார் .

மத்தேயு 24:1 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

மத்தேயு 24:2 இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அவர்கள் இயேசு கிறிஸ்து தனித்து இருக்கும் போது வந்து இரண்டு கேள்விகள் கேட்டார்கள் .

மத்தேயு 24:3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

அப்போஸ்தலர்களின் கேள்வி என்ன?
1)எருசலேம் தேவாலயம் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்பட்டு போவது எப்போது சம்பவிக்கும்?
2)உம்முடைய வருகைக்கும் உலகத்திற்கும் முடிவுக்கும் அடையாளம் என்ன?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் தான் இயேசு கிறிஸ்து 24ம் அதிகாரம் முழுவதும் வரிசைகிரமமாக பதில் சொல்லுகிறார் .
1) மத்தேயு 24:4-35 வரை முதல் கேள்விக்கு இயேசு கிறிஸ்து பதில் சொல்லுகிறார். (ஒரு சில வசனங்கள் தவிர)
2) மத்தேயு 24:36-51 வரை இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்லுகிறார் அதை தொடர்ந்து மத்தேயு 25ம் அதிகாரம் அவருடைய வருகையின் நாளில் என்ன சம்பவிக்கும் என்பதை பற்றியும் பேசுகிறார் .

இயேசு கிறிஸ்து சொன்ன பிரகாரம் அவர் சொன்ன அடையாளங்கள் எல்லாம் நடந்து கிபி 70ல் எருசலேம் தேவாலயம் ஒரு கல்லின் மேல் கல் இராதபடிக்கு தீத்து இராயனால் பெயர்த்து எடுக்கப்பட்டது .

இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவன் என்ன வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்?
1கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

இந்த வேத வாக்கியத்தில் நமக்கான பலம் இருக்கிறது.

1) தேவன் உண்மையுள்ளவர் .

2) நம்முடைய திராணிக்கு மேலாக சோதிக்கப்படுவதற்கு அவர் இடங் கொடுக்கமாட்டார்.

3) சோதனை வந்தாலும் சோதனையோடு கூட தாங்கத்தக்கதாக பெலத்தை கொடுப்பார்.

4)சோதனையோடு கூட அதற்கு தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

ஒருவேளை திராணிக்கு மிஞ்சி சோதனை வந்தால் என்ன செய்வது?

இயேசு கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் மிகவும் வியாகுலப்பட்டு ஜெபித்த போது என்ன சம்பவித்தது?

லூக்கா 22:44 அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

இயேசு கிறிஸ்து திராணிக்கு மேலாக சோதிக்கப்பட்ட போது தேவன் அவரை பெலப்படுத்தும்படி தம்முடைய தூதனை அனுப்பினார்
லூக்கா 22:43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

நாமும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருக்கும் போது தேவன் நமக்கு நிச்சயம் உதவியை கொடுத்து பலப்படுத்துவார்.

பவுலுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகதக்கதாக தங்கள் திராணிக்கு மேலாக சோதிக்கப்பட்டார்கள்.

2கொரிந்தியர் 1:8 ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.

மரணம் வரும் என்று பவுலும் அவரோடு இருந்தவர்களும் முடிவு செய்து இருந்தார்கள் ஆனாலும் தங்கள் நம்பிக்கையை தேவன் மேல் வைத்து இருந்தார்கள் .

2கொரிந்தியர் 1:9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.

நம்முடைய தேவன் என்ன செய்தார்?
2கொரிந்தியர் 1:10 அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

இது தான் தேவனுடைய பிள்ளைகளின் விசுவாசமாய் இருக்கிறது

எப்படிப்பட்ட மரணமாய் இருந்தாலும் தேவன் நம்மை தப்புவிப்பார் என்கிற விசுவாசம் நமக்குள்ளாக இருக்க வேண்டும்.

ஒருவேளை கொரோனோ வைரஸால் நாம் பாதிக்கப்படுவோம் என்றால் அரசாங்கம் கொடுக்கக் கூடிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொள்ள வேண்டும்.

கோரோனோவினால் நம்முடைய ஜீவன் போகும் என்றாலும் நாம் மனப்பூர்வமாய் அவருடைய சித்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் உலக சரித்திரத்தை எடுத்து பார்த்தோமானால் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்த கொள்ளை நோயால் கோடிக்கானக்கான லட்சக்கணக்கான பேர் மரித்து இருக்கிறார்கள்.

கிபி 1346ம் ஆண்டு முதல் கிபி 1353 ஆம் ஆண்டு வரை வந்த புபோனிக் பிளேக் என்ற கொள்ளை நோயினால் ஐரோப்பா ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் 75 முதல் 200 மில்லியன் மக்கள் செத்துப்போனார்கள் என்று வரலாற்று பதிவு இருக்கிறது.

இன்றைக்கு இருக்கக்கூடிய கொரானோ பாதிப்பு என்பது இந்த தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் இது ஒரு கடுகு அளவு பாதிப்பு தான்.

இது இயேசு கிறிஸ்துவின் வருகையின் அடையாளம் என்று சொல்லுவார்கள் என்றால் இயேசு கிறிஸ்து ஏன் கிபி 1346ல் 200 கோடி பேர் செத்துப்போனார்களே அப்போது ஏன் வரவில்லை?

ஆபிரகாம் காலம் முதற்கொண்டு பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளுக்கும் கொள்ளை நோய்களும் பட்டயங்களும் வெட்டுக்கிளிகளும் போன்ற சகல வாதைகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து வருகையின் நாள் மட்டும் இது எல்லாம் வந்து கொண்டே தான் இருக்கும் ஆனால் இது வருவதினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்து போகாது.

கொள்ளை நோய் வரும் போது நாம் செய்ய வேண்டியது என்ன?
2நாளாகமம் 7:13 நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது,
2நாளாகமம் 7:14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

இந்த மாதிரி நேரங்களில் நாம் நம்மை தாழ்த்தி ஜெபம் பண்ணி தேவனை தேடி பொல்லாத வழிகளை திரும்ப வேண்டும் அப்போது தேவன் நம்முடைய தேசத்திற்கு ஆரோக்கியத்தை கட்டளையிடுவார்.

தேவனுடைய சித்தமில்லாமல் தலையில் இருக்கக் கூடிய ஒரு முடியாவது கீழே விழாது என்றால் இந்த கொள்ளை நோய் உலகமெங்கும் பரம்புகிறது என்றால் அது தேவனுடைய கிரியை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் உலகத்தை ஆளுக்கூடியவர்களுக்கு கொரோனோ என்பது உயிரை கொள்ளக்கூடிய கிருமி தான் ஆனால் நம்மை பொறுத்தவரை அது தேவனுடைய எச்சரிப்பு.

கேள்வி என்னவென்றால் இந்த கொள்ளை நோயை தேவன் ஏன் அனுப்புகிறார்?

இன்றைக்கு ஜனங்களை ஆளக்கூடியவர்கள் தங்களை தேவனுக்கு ஒப்பாக நினைத்து கொள்ளுகிறார்கள் .

எசேக்கியேல் 28:2 மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

தேவனை ஏற்றுக் கொள்ளாமல் தங்களை மனுஷர்கள் உயர்த்தும் போது தேவன் இப்படிப்பட்ட கொடிய கொள்ளை நோயை அனுப்பி தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார்.

யாத்திராகமம் 9:14 ,,,,, பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன்.

தேவன் தான் தங்களை நிலை நிறுத்தினார் என்பதை அவர்கள் அறிய வேண்டும்.

யாத்திராகமம் 9:16 என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

உலகத்தை கட்டி ஆண்ட சாம்ராஜ்யமாக இருந்த பாபிலோன் ராஜாவாகிய நோபுகாத் நேச்சர் இதை உணர்ந்து கொண்டார்
தானியேல் 4:34 அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

தானியேல் 4:35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

இன்றைக்கு அநேக தேசத்து தலைவர்கள் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

தங்களை வல்லரசு என்று சொன்னவர்கள் கூட இந்த கொள்ளை நோயை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள்.

நாம் செய்ய வேண்டிய என்ன?

இந்த நேரத்தில் எல்லா மனுஷருக்காகவும் நாம் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் பண்ண வேண்டும்
1தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

இந்த நேரத்தில் நம்மை ஆளக்கூடியவர்களுக்காகவும் அதிகாரமுள்ளவர்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும்.
1தீமோத்தேயு 2:2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

அரசாங்கம் நமக்கு இந்த கொரோனோ கொள்ளை நோயில் இருந்து எப்படி பாதுகாக்க என்ன சட்டத்திட்டங்களை கொடுக்கிறார்களோ அதற்கு நாம் மனப்பூர்மாய் செவி கொடுக்க வேண்டும்.

ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

ரோமர் 13:2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

ரோமர் 13:5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.

அரசாங்கம் தவிர மற்றவர்கள் பரப்பக்கூடிய வீண் வதந்திகளை ஒருபோதும் நம்பவும் கூடாது அதை பரப்பவும் கூடாது.

கொரோனோ வைரஸ் சம்பந்தமாக என்ன கட்டளைகளை கொடுத்து இருக்கிறார்களோ அதற்கு நாம் செவி கொடுத்து கீழ்ப்படிய வேண்டும்.

இன்றைக்கு வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது என்று அரசாங்கத்தின் மூலமாக தேவன் நமக்கு கட்டளை கொடுத்து இருக்கிறார் .

யாத்திராகமம் 9:20 பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான்.

யாத்திராகமம் 9:21 எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.

தேவனுடைய வார்த்தையை மதிக்காமல் யார் வெளியே இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் அழிக்கப்பட்டார்கள்
யாத்திராகமம் 9:25 எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.

இது சம்பவம் நமக்கு ஒரு எச்சரிப்பு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கொரோனோ குறித்த அரசாங்க சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME