கிறிஸ்தவர்களாகிய நாம் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவது அவசியமா

கிறிஸ்தவர்களாகிய நாம் அரசாங்க சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவது அவசியமா?

அநேக கிறிஸ்தவதவர்கள் இன்றைக்கு அரசியல் என்று வரும் போது அதை நான் வெறுக்கிறேன் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுகிறார்கள்.

அநேகர் அரசாங்கத்திற்கு விரோதமாக துணிகரமாய் பேசுகிறாரகள் . அதோடு மாத்திரம் அல்ல அரசு அதிகாரிகளையும் மோசமான வார்த்தைகளாலும் கெட்ட வார்த்தைகளாலும்  பேசுகிறார்கள்.

நாம் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தலாமா?

உலகத்தில் இருக்கிற சகல ராஜ்யங்களையும் ஆளுகை  செய்து கொண்டு இருப்பவர் நம்முடைய தேவன் என்பதை நாம் என்றைக்கும் விசுவாசிக்க வேண்டும்.

தானியேல் 2:20 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

தானியேல் 2:21 அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

  • உலகத்தில் இருக்கக்கூடிய சகல ராஜ்யங்களையும் ஏற்படுத்தினவர் தேவன் அதில் ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் தேவன் தான்.
  • உலகத்தில் இருக்கக்கூடிய ஞானிகளுக்கு ஞானத்தையும் அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர் தேவன் தான்.

தேவன் மனுஷருடைய ராஜ்யத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

தானியேல் 4:17 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.

  • தேவன் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து கொண்டு இருக்கிறார்
  • தேவன் தமக்கு சித்தமானவனுக்கு அதை கொடுத்து மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின் மேல் அதிகாரியாக்குகிறார்.
  • மேலே சொன்ன இந்த சத்தியங்களை ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
  • இன்றைக்கும் நம்முடைய தேவன் மனுஷருடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.

உலகத்தை ஆண்ட நேபுகாத் நேச்சார் தேவன் தான் மனுஷருடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்கிறார் என்பதை உணர்ந்து அவர் அறிக்கையிட்டார்.

தானியேல் 4:34 அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

தானியேல் 4:35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

  • அப்படியென்றால் இன்றைக்கும் தேவன் மனுஷருடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து கொண்டு தான் இருக்கிறார்.
  • இன்றைக்கு எந்த கட்சி ஆட்சி வந்தாலும் அவர்களை ஏற்படுத்துகிறவர் தேவன் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
  • இன்றைக்கு தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு அவர் ஆளுகை செய்து கொண்டு இருக்கிறார்.
  • கிறிஸ்துவுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பிதாவானவர் கொடுத்து இருக்கிறார் என்பதை நாம்  விசுவாசிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து பூமியின் ராஜாக்களுக்கு எல்லாம் அதிபதியுமாய் இருக்கிறார்.

வெளி 1:5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

இயேசு கிறிஸ்துவுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மத்தேயு 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயேசு கிறிஸ்து கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாய் இருக்கிறார்.

வெளி 17:14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

  • நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கு ராஜாக்களுக்கு ராஜாவாக இருக்கிறார். அப்படியென்றால் இன்றைக்கு உலகத்தையும் எந்த தேசத்தையும் ஆட்சி செய்கிற ராஜாக்களுக்கு (ஆளுநர்கள்) அவர் ராஜாவாக இருக்கிறார் என்கிறார்.

தேவன் நம்மை ஆட்சி செய்யக்கூடிய இன்றைய அரசாங்கத்தை (ஆளுநர்களை) குறித்து என்ன சொல்லுகிறார்?

ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

  • இந்த வசனத்தின்படி உண்டாயிருக்கிற அதிகாரங்கள் எல்லாம் தேவனாலே நியமிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு எந்த மனுஷனும் (கிறிஸ்தவர்கள் மாத்திரம் அல்ல) கீழ்ப்படிய வேண்டும்.

அரசாங்கத்திற்கு விரோதமாக போராட்டம் நடத்துகிறவர்களை குறித்து தேவன் சொல்லுவதை கவனியுங்கள்.

ரோமர் 13:2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

  • நம்மை ஆளாக்கூடிய அரசாங்கத்திற்கு விரோதமாக எதிர்த்து நிற்கும் போது (உண்ணாவிரதம், சாலை மறியல், போன்ற இன்னும் பல) தேவனுடைய நியமத்திற்கு (சட்டத்திற்கு) எதிர்த்து நிற்கிறோம்.
  • தேவனுக்கு எதிர்த்து நின்றால் நமக்கு பரலோகம் மற்றும் நித்திய ஜீவன் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்காது.

அரசாங்கத்திற்கு கீழ்ப்படியும் போது நமக்கு புகழ்ச்சி உண்டாகும் என்று தேவன் சொல்லுகிறார்.

ரோமர் 13:3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

ரோமர் 13:4 உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.

  • இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை போதிக்கிறவர்கள் தான் தேவ ஊழியக்காரார் என்கிறோம்.
  • அரசாங்கத்தில் இருக்கக்கூடிய யாவரும் தேவ ஊழியக்காரர்கள் என்று தேவனே பவுலைக் கொண்டு இந்த வசனத்தில் இரண்டு தடவை சொல்லியிருக்கிறார்.
  • அவர்கள் (அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள்) நீதியை செலுத்துகிற தேவ ஊழியக்காரர்கள் என்கிறார்.
  • தண்டனைக்கு பயந்து மாத்திரம் நாம் கீழ்ப்படியக்கூடாது மனசாட்சியினிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
  • நம்முடைய அரசாங்கம் ஹெல்மட் அணிந்து தான் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற கட்டளை  இருக்கும் போது நாம் அதற்கு கீழ்ப்படியவில்லையென்றால் தேவனுடைய சட்டத்திற்கு நாம் எதிர்த்து நிற்கிறோம்.

வரியையும் தீர்வையும் அரசாங்கத்திற்கு நாம் சரியாக செலுத்த வேண்டும் என்று தேவன் நமக்கு கட்டளை கொடுத்து இருக்கிறார்.

ரோமர் 13:6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.

வரி வசூல் செய்யக்கூடியவர்களும் தீர்வை வசூல் செய்கிறவர்களும் கூட தேவ ஊழியக்காரர்கள் தான்.

ரோமர் 13:7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

  • நாம் அரசாங்க அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய கனத்தை செலுத்த வேண்டும்.
  • யாருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு நாம் பயப்பட வேண்டும்.

கிறிஸ்துவும் கூட நமக்கு இதே கட்டளையை கொடுத்து இருக்கிறார்.

 மத்தேயு 22:21 ….. அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும்   செலுத்துங்கள் என்றார்.

ஒருவேளை இன்றைய அரசாங்கம் கிறிஸ்துவையையும் அவருடைய   சத்தியத்தையும் அறிவிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பேதுருவையையும் யோவானையையும் அடித்து கிறிஸ்துவை அறிவிக்க கூடாது என்று அன்றைய அரசியல் மத தலைவர்கள் சொன்ன போது அவர்கள் என்ன சொன்னார்கள்?

 அப்போஸ்தலர் 4:18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

 அப்போஸ்தலர் 4:19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

 அப்போஸ்தலர் 5:29 அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக்   கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.

  • பேதுருவும் யோவானும் அரசாங்கத்திற்கு விரோதமாக எதிர்த்து நிற்கவில்லை. மாறாக அவர்களுக்கு கீழ்ப்படியாமல் தேவனுடைய சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து தேவனுடைய வார்த்தையை போதித்தார்கள்.

நாமும் கூட இப்படி தான் இருக்க வேண்டும். தேவனுடைய சத்தியத்திற்கு விரோதமாக எந்த ஒரு சட்டத்திற்கும் நாம் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை.

பிலிப்பியர் 1:21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.

1தீமோத்தேயு 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

1தீமோத்தேயு 2:2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

1தீமோத்தேயு 2:3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

  • ஒரு வேளை இந்த விசயத்திற்காக இரத்த சாட்சியாக மரிக்க வேண்டியதாக இருந்தாலும் மரிப்பதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்போதும் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கக்கூடாது அவர்களை நியாயந்தீர்ப்பவர் நம்முடைய தேவன் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
  • நல்லாட்சி அமைய நாம் எப்போதும் தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டியது  அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME