ஆண்கள் உடைகளை (வஸ்திரங்களை) பெண்கள் அணியலாமா?
நோவாவின் காலத்தில் தேவன் உலகமுழுவதும் ஜனங்களை சிதறி போகப்பண்ணினாலும் உடை கலாச்சாரம் நாடுகளுக்கு நாடுகள் வித்தியாசமாக இருக்கிறது.
ஒவ்வொரு தேசத்தின் அடிப்படையில் வஸ்திரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் பெரும்பாலான ஜனங்கள் தங்கள் புறம்பான அழகை காண்பிக்கவே உடை அணிகிறார்கள்.
நிர்வாணத்தை மறைப்பதற்காகவே உடையே தவிர உடல் அழகை கவர்ச்சியாக காட்டுவதற்காக உடை அணியக்கூடாது.
கலாச்சாரம் என்ற பெயரில் உடையை கிழித்துக் கொண்டு திரிவதும் உள்ளான நிர்வாணத்தை உடையைக் கொண்டு அரை நிர்வாணமாக காண்பிப்பதும் தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கிறது.
கிறிஸ்தவர்களும் உலகத்தாருக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போல் போட்டிக் கொண்டு கவர்ச்சியாக உடையை அணிந்து வருவதும் கொடுமையிலும் கொடுமை.
நாம் அணிந்திருக்கும் உடையின் மூலமாக நாம் பிறருக்கு இடறலை ஏற்படுத்துவோம் என்றால் நமக்கு ஐயோ வந்து சேரும் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்து இருக்கிறார்.
மத்தேயு 18:7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
நிர்வாணமாகிய நம்முடைய அவலட்சணத்தை மறைப்பதற்காகவே உடை அணிய வேண்டும்.
வெளி 3:18 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
கிறிஸ்தவர்கள் எப்படிபட்ட வஸ்திரத்தை அணிந்து கொள்ள வேண்டும் என்று வேத ஆதாரத்துடன் கவனித்து பார்ப்போம்.
ஆதாமும், ஏவாளும் எப்போது பாவம் செய்தார்களோ அப்போதே அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தி இலைகளை தைத்து தங்களுக்கு அரைக் கச்சைகளை உண்டு பண்ணி உடுத்திக் கொண்டார்கள்.
ஆதியாகமம் 3:7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
- ஆனால் தாங்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று தெரியாமல் வெறும் அரைக்கச்சைகளை (இடுப்புக்கு கீழ்) மட்டுமே அணிந்து கொண்டார்கள்.
பிற்பாடு தேவன் அவர்கள் உடுத்திக் கொள்ளுவதற்கு தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
ஆதியாகமம் 3:21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
- தேவன் ஆதாமுக்கும் (ஆண்) ஏவாளுக்கும் (ஸ்திரீ) தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தி (அணிந்து) விட்டார்.
- ஆண் எப்படி உடையணிய வேண்டும் ஸ்திரீயானவள் எப்படி உடை அணிய வேண்டும் என்று காண்பித்து இருக்கிறார்.
மோசேயின் கால கட்டத்தில் தேவன் நியாயப்பிரமாணத்தில் தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு பிரமாணத்தை கொடுத்தார்.
உபாகமம் 22:5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
மோசேயின் காலகட்டத்தில் வாழ்ந்த அநேக ஜனங்கள் புருஷரின் (ஆண்கள்) உடைகளை ஸ்திரீ(பெண்கள்) தரித்து கொண்டும் ஸ்திரீயின் உடையை புருஷர் தரித்துக் கொண்டு வாழ்ந்து இருந்து இருக்கிறார்கள்.
- தம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் அப்படி செய்யக்கூடாது என்றும் ஆண்களின் உடைகளை (வஸ்திரங்கள்) பெண்கள் அணிந்து கொள்ளக்கூடாது என்றும் பெண்களின் உடைகளை (வஸ்திரங்கள்) ஆண்கள் அணிந்து கொள்ளக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டார்.
- அப்படித்தரித்து (அணிந்து) கொள்ளுகிறவர்கள் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் என்று எச்சரித்து இருக்கிறார்.
ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய கிறிஸ்தவர்கள் எப்படி உடை அணிகிறார்கள்?
பெண்கள் வஸ்திரங்களை ஆண்கள் அணிவது இல்லை. ஆனால் ஆண்கள் வஸ்திரங்களை பெண்கள் அணிந்து கொண்டு இருக்கிறார்கள்.
- இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக ஸ்திரீகள் ஆண்களை போல பேண்ட் ஜீன்ஸ் டி-சர்ட் போன்ற உடைகளை அணிந்து கொள்ளுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
- இன்னும் அநேகர் சினிமா நடிகர்கள் நடிகைகளைப் போல உடை அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
- அநேக கிறிஸ்தவ ஸ்திரீகள் சினிமா நடிகைகளைப் போல அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு கிறிஸ்தவ பாடல்களுக்கு ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு வஸ்திரங்களை ஆங்காங்கே கிழித்துக் கொண்டு நாகரீகம் என்ற பெயரில் உடைகளை தரித்துக் கொள்ளுகிறார்கள்.
லூக்கா 8:27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
நல்ல வஸ்திரம் தரித்திராதவர்கள் எல்லாம் பிசாசின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கிறார்கள்.
என்றைக்கு அவர்கள் நல்ல வஸ்திரம் தரித்துக் கொள்ளுகிறார்களோ அன்றைக்கு தான் அவர்கள் புத்தி தெளிந்து கிறிஸ்துவின் பாதத்திற்கு வருவார்கள்.
லூக்கா 8:35 ,,, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
இப்படி அறைகுறையான ஆடைகளை கிறிஸ்தவ ஸ்தீரிகள் அணிந்து கொள்ளுவது தேவனுக்கு முன்பாக பிரியமாய் இருக்குமா?
கிறிஸ்தவ ஸ்திரீகள் தங்களை எப்படி அலங்கரிக்க வேண்டும்?
1தீமோத்தேயு 2:10 தகுதியான வஸ்திரத்தினாலும், ……..தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
1பேதுரு 3:3 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,
1பேதுரு 3:4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
1பேதுரு 3:5 இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
- தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற கிறிஸ்தவ ஸ்திரீகள் மற்றவர்கள் இடறல் அடைவதற்கான ஆடைகளை ஒருபோதும் அணிய மாட்டார்கள்.
- புறம்பான அலங்கரிப்புக்கு ஒருபோதும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
- அவர்கள் எப்போதும் தகுதியான வஸ்திரங்களை மாத்திரமே தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுவார்கள்.
- தகுதியில்லாத வஸ்திரங்களை புறம்பே தள்ளிவிடுவார்கள்.
- தேவனுடைய பார்வையில் எது விலையேறப்பெற்றதோ அதை அவர்கள் தெரிந்து கொள்ளுவார்கள்.
- நியாயப்பிரமாணத்தில் நேரடியாக ஆண்களின் உடைகளை (வஸ்திரங்கள்) பெண்கள் அணிந்து கொள்ளக்கூடாது என்றும் பெண்களின் உடைகளை (வஸ்திரங்கள்) ஆண்கள் அணிந்து கொள்ளக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டார்.
- ஆனால் புதிய ஏற்பாட்டு பிரமாணத்தில் தேவன் தகுதியான வஸ்திரத்தினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும் என்கிறார்.
- கிறிஸ்தவ ஸ்திரீகள் அந்ததந்த தேசத்துக்குரிய தகுதியான வஸ்திரங்களினால் ஸ்திரீகளுக்குரிய உடைகளை அவர்கள் மற்றவர்கள் இடறல் அடையாதபடிக்கு உடுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் ஆண்களுக்குரிய வஸ்திரத்தை தரித்து கொள்ளும் போது அது தேவனுக்கு முன்பதாக நீதியான செயலாக இருக்குமா?
லூக்கா 16:15 அவர் அவர்களை நோக்கி: ,,, மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
- மனுஷர்கள் உங்களை புகழ வேண்டும் என்பதற்காவும் உங்கள் அழகை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் உடை அணியாதீர்கள் அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
தலை முடியை நீளமாய் வளர்ப்பது ஸ்திரீகளுக்கும் மகிமையாக இருக்கிறது என்றும் ஆண்களுக்கு முடியை நீளமாய் வளர்ப்பது அவனுக்கு கனவீனமாய் இருக்கிறது என்று சுபாவமே நமக்கு போதிக்கிறது இல்லையா?
1கொரிந்தியர் 11:14 புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
1கொரிந்தியர் 11:15 ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? …..
- அப்படி இருக்கும் போது ஆண்கள் அணியக்கூடிய வஸ்திரங்களை (உடைகளை) ஸ்திரீகள் அணியக்கூடாது என்று சுபாவமே நமக்கு போதிக்கிறது இல்லையா?
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கத்தக்கதாக வஸ்திரத்தை உடுத்திக் கொள்ளுவோம் ஏனென்றால் நமக்கு ஐயோ வந்து சேரும்.
மத்தேயு 18:6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 18:7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
- பிறருக்கு இடறல் ஏற்படுத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்று இந்த வசனத்தில் கிறிஸ்து சொல்லுவதை நாம் கவனித்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருக்கிற எந்த ஒரு பெலவீனமான சகோதரனுக்கும் சகோதரிக்கும் முன்பாக இடறதலுக்கான கல்லை போட்டு விடக்கூடாது.
- இடறலை ஏற்படுத்துகிறவன் சமுத்திரத்தின் ஆழத்தில் அவனை எந்திரக்கல்லைக் கட்டி அமிழ்த்த வேண்டும் என்று சொல்லும் போது அவன் மறுபடியும் தப்பி வரக்கூடாது என்பது தான் இங்கே கிறிஸ்து நமக்கு சொல்லக்கூடிய சத்தியமாய் இருக்கிறது.
- அப்படியென்றால் இடறல் என்பது எவ்வளவு கொடிய பாவம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் சாப்பிடக்கூடக்கூடிய மாமிசம் ஒரு சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால்?
1கொரிந்தியர் 8:13 ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.
- மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால் அதை என்றைக்கும் புசிக்க மாட்டேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும் போது உடைக்கான விசயத்தில் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.
நாம் எந்த விசயத்திலும் எந்த காரியத்திலும் யாருக்கும் எப்போதும் இடறலற்றவர்களாக இருக்க வேண்டும்.
1கொரிந்தியர் 10:33 நீங்களும் …….. தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.
பிலிப்பியர் 1:11 நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
சபை கூடிவரும் போது மிடுக்கான வஸ்திரம் உடுத்தி ஊழியருக்கும் தரித்திரருக்கும் இடறலை ஏற்படுத்தாதீர்கள்
யாக்கோபு 2:2 ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,
யாக்கோபு 2:3 மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,
யாக்கோபு 2:4 உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?
- ஆண் பெண் இருபாலரும் தகுதியான வஸ்திரங்களினால் தங்களை அலங்கரித்து கொள்ள வேண்டும் என்று தான் தேவன் விரும்புகிறார்.
- நமக்கு தகுதியான வஸ்திரம் எது என்பதை நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- உடை அணியும் போது இது தேவனுக்கு பிரியமாய் இருக்குமா என்று சிந்தித்து பார்த்து அணிய வேண்டும்.
தேவனுடைய எச்சரிப்பை ஒரு போதும் மறக்காதீர்கள்
உபாகமம் 22:5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.