தலை சீலை தனி தனியே வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார் பேதுரு.
Handkerchief, not lying with the linen cloths, but folded together in a place by itself. (John 20:7)
Matthew 10:26; Matthew 28:6; Mark 12:25; Luke 24:6; Acts 4:12; Romans 3:22; Hebrews 13:14.
சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். (யோவான் 20:7)
மத்தேயு 10:26; மத்தேயு 28:6; மாற்கு 12:25; லூக்கா 24:6; அப்போஸ்தலர் 4:12; ரோமர் 3:22; எபிரெயர் 13:14.
இங்கே இல்லை:
திறக்கப்பட்ட கல்லறையானது இயேசு கிறிஸ்து கல்லறையில் இல்லை என்பதற்கான ஆதாரமாகும். அவரை சுற்றி இருந்த சீலைகள் காணப்படுகிறது. தலையில் சுற்றி இருந்த சேலை மட்டும் தனியாகவே வைக்கப்பட்டிருந்தது என்பது வலிமையான ஆதாரமாகும். இயேசு இங்கே இல்லை என்பதை யோவான் ஆகியோர் தெளிவாக கூறுகின்றார்.
மரித்த இயேசுவின் கல்லறையைத் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் உயிர்த்த இயேசுவைக் கல்லறையில் தேடியது தான் ஆச்சரியமாக உள்ளது. இயேசு உயிர்த்தெழுந்துள்ளார் என்பதை இருவரும் அறிந்துகொண்டார்கள். ஆனால் அதை நம்பினார்களா என்பதை பின்வரும் பகுதியில் காணலாம்.
மரித்த இயேசுவின் சரீரம் கல்லறையினுள் ஏன் காணப்படவில்லை என்பதை நாம் அறிய விழைகிறோம். அவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்பதுவே அத்தாட்சியாகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் தேவனால் செய்யப்பட்ட பலத்த கிரியையாகும். தமது குமாரன் பாவிகளை மீட்கும் படியான இரட்சண்ய பணியை செம்மையாக செய்து முடித்ததினால் தமது மகனை. உயிரோடு எழுப்பும் கிரியையும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் செய்துமுடித்தார்.
கல்லறையானது பாவமில்லாத சரீரத்தை தனக்குள் வைத்திருக்க இயலவில்லை. அழிக்கும் சக்தியாகிய உருமாற்றும் சக்தியும் இயேசுவின் தூய்மையான சரீரத்தின் மேல் பெலன்கொள்ள இயலவில்லை. அவரது சரீரத்தை சுற்றியிருந்த கட்டுகளும் அவரது மகிமையின் சரீரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே அவைகள் எல்லாம் தங்கள் இயலாமையை ஒப்புக் கொண்டு இயேசுவின் சரீரத்தை விடுவித்தது. மரணத்துக்கு அதிகாரியான சாத்தானாலும் செத்த சரீரங்களை தன் வசப்படுத்திக் கொள்ளும் சாத்தானாலும் அவரின் சரீரத்தை கைப்பற்ற இயலவில்லை.
தேவனுடைய மக்கள் பாவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு தூய்மையாக்கப்பட்டுள்ளார்களானால் அவர்களின் மரித்துப்போன சரீரங்களை கல்லறைகளோ அழிவின் சக்திகளோ கட்டுகளோ அடிமைத்தனமோ அடக்கியாளவும் மேற்கொள்ளவும் இயலாது. அவர்கள் கிறிஸ்துவுக்குள் மரித்ததினால் அவர்களின் சுவிசேஷ நற்கிரியைகளினிமித்தம் தேவன் அவர்களின் சரீரத்தை மகிமையின் சரீரமாக மாற்றி உயிர்த்தெழுதலுக்குள் கொண்டு வருகின்றார்.
தேவனுடைய மக்களை கல்லறையில் தேடிச் செல்லும் நாட்கள் மாறப்போகின்றது. கல்லறை நாட்களும் உயிர்ப்பு நாட்களாக பரிணமிக்க போகின்றது.
இயேசு இங்கே இல்லை. அப்பொழுது அங்கே எனக்கும் வேலை இல்லை. நான் மரித்தால் என்னை கல்லறையில் தேடி வர வேண்டிய அவசியமும் இல்லை.
உயிர்ப்பு புது ஜீவனுக்கான முதல் படி.
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 15:50-57.