ஒருவன் பகலிலே நடந்தால் வெளிச்சத்தின்படி இடறமாட்டான்.
If anyone walks in the day, he does not stumble, because he sees the light of this world. (John 11:9)
Jn9:4; Jn4:6; Jn7:30; Jn8:20; Jn12:35; Jn13:1; Lk13:31-33; Act27:24; Job7:1; Job33:28; Pr3:23; Pr4:12; Isa59:10; Jer31:9.
இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு, மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். (யோவான் 11:9)
யோவான் 9:4; யோவான் 4:6; யோவான் 7:30; யோவான் 8:20; யோவான் 12:35; யோவான் 13:1; லூக்கா 13:31-33; அப்போஸ்தலர் 27:24; யோபு 7:1; யோபு 33:28; நீதிமொழிகள் 3:23; நீதிமொழிகள் 4:12; ஏசாயா 59:10; எரேமியா 31:9.
வெளிச்சம் என்பது இடறலில்லா வாழ்க்கைமுறை.
தேவன் படைத்த உலகமானது இருள், வெளிச்சம் கொண்ட நல்ல உலகமாயிருந்தது. வாழ்க்கை ஓட்டத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் பகல் – வெளிச்சம் தரப்பட்டது. அமைதிக்கும் இளைப்பாறுதலுக்கும் இருள் – இரவு தரப்பட்டது.
பகலுக்கு வெளிச்சம் கொடுக்க சூரியனை படைத்தார். இந்த சூரியன் பகலை மட்டுமல்ல, தென்றலின் வெளிச்சமாகிய இரவின் சந்திரனையும் ஒளிர்வித்து இருளையும் ஆளுகின்றதாயுள்ளது.
சூரிய வெளிச்சமானது உலகம் பசுமையாகக் காணப்பட முக்கிய பங்காற்றுகின்றது. சூரியனின் வெளிச்சத்தினால் நமது கண்கள் பிரகாசிப்பிக்கப்பட்டு செயல்படுகிறது. தடைகளையும், இடறல்களையும், சூதுவாதுகளையும், வஞ்சகத்தையும், ஏமாற்றுதல்களையும், குற்றசெயல்களையும் தவிர்ப்பதற்கு இவ்வெளிச்சம் பயன்படுகிறது. இதனைதான் இயேசுகிறிஸ்து குறிப்பிடுகின்றார். பகல்பொழுதில் நாம் இயல்பாகவே இடறலற்றவர்களாக வாழ இயலும் என்று இயேசு கற்பிக்கின்றார்.
பகலுக்கு 12 மணி நேரம் இருந்தும் நாம் வளர்ச்சியடையாமலும், உயர்வடையாமலும், மேன்மையடையாமலும் இருந்துகொண்டு தோல்விகளையும், வியாதிகளையும், தரித்திரங்களையும் குற்ற செயல்களையும் உடையவர்களாயிருப்பது பகலை கொடுத்த தேவனை அவமதிப்பதாகும். உழைப்பை உறுதிபடுத்துவதே பகல் தான். பகல் தோன்றும்போதே, ‘மனிதனே உன்னை 12 மணி நேர உழைப்புக்கு ஆயத்தப்படுத்து’ என்ற சத்தம் பகலிடமிருந்து தொனிக்கின்றது. உறுதியும், உழைப்பும், உயர்வும் ஆகிய மூன்று நிலைகளுமே சூரிய வெளிச்சம் நமக்கு கற்று தருகின்ற பாடம். எல்லா மனிதர்க்கும் பயன்படவே சூரிய வெளிச்சம் தரப்பட்டுள்ளது. தேவனை விசுவாசிப்பவரோ அல்லாதவரோ எல்லாரையும் காப்பாற்றுவது இந்த வெளிச்சமே. ஆனால் இந்த வெளிச்சத்தினால் தேவனிடமோ, பரலோகமோ, சொர்க்கமோ போகவியலாது. அதற்கு இயேசுவாகிய வெளிச்சம் வேண்டும். இயேசுவே உனக்காய் மரித்து ஜீவன் தந்து பாவம் கழுவி ஒளியின் மேன்மைகளை அடய வழிகாட்டுகிறார். முடிவில் ஒளியாகிய தம்மிடம் அடைக்கலம் புக வைக்கின்றார்.
கர்த்தாவே சூரிய ஒளியை தந்து வாழ்வடைய செய்த நீர் நாங்கள் ஒளியிழந்து, களையிழந்து பாவத்தில் மூழ்கியபோது கிறிஸ்துவாகிய ஒளியை தந்து மீட்டு இவ்வுலகின் ஒளியில் வாழவைத்ததற்காய் ஸ்தோத்திரம்.