நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்.
if you would believe you would see the glory of God. (John 11:40)
Jn11:23-26,4,15; Jn12:28,41; Act2:22; Ro 4:17-25; 2 cor 3:18; 2cor4:6; 2Chr20:20; Ps63:2; Ps90:16;
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். (யோவான் 11:40)
யோவான் 11:23-26,4,15; யோவான் 12:28,41; அப்போஸ்தலர் 2:22; ரோமர் 4:17-25; 2 கொரிந்தியர் 3:18; 2கொரிந்தியர் 4:6, 2நாளாகமம் 20:20; சங்கீதம் 63:2; சங்கீதம் 90:16.
மகிமையைக் காண்பாய்:
மகிமை என்பதற்கு பல பொருள் தரப்பட்டிருந்தாலும் இரு பொருள்கள் சிறப்பானது. பிரகாசம் மற்றும் உயர்த்தப்பட்ட நிலை என்பதாகும். இயேசு கிறிஸ்து மார்த்தாளிடம் நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று கூறுகிறார். இங்கு லாசருவின் மகிமையைகு காண்பதற்கு அல்ல, இயேசு கிறிஸ்துவின் மகிமையுமல்ல, தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்கிறார். ப.ஏ-ல் ஆசரிப்பு கூடாரத்தின் மேலும், எருசலேம் தேவாலயத்தின் மேலும், தேசத்தின் மீதிலும் தேவனுடைய மகிமைக் காணப்பட்டதாக குறிப்புகள் காணப்படுகின்றன. அதைப்போலவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் தேவனுடைய மகிமை வெளிப்படுவதாக இருக்கலாம். லாசருவை உயிரோடெழுப்பும்படியான தேவனுடைய வல்லமையும் பலத்த சத்துவமும் இயேசு கிறிஸ்துவின் மேல் தேவன் இறங்கி வரப்பண்ணுகிறதை நீ விசுவாசித்தால் காணலாம் என்கிறார்.
தேவனுடைய மகிமை வெளிப்படையாக காண்பிக்கப்படுவதும் உண்டு. விசுவாசத்தில் உறுதியாயிருப்பவர்களுக்கு காண்பிக்கப்படுவதும் உண்டு. இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய மகிமை வெளிப்படையாக காண்பிக்கப்படவில்லை. இதனை Hidden Glory என்பதுண்டு. ஆனால், இயேசுவே ஆண்டவரும் மீட்பரும் தேவகுமாரனுமாயிருக்கிறார் என்று விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே மகிமை வெளிப்படுத்தப்படுவதும் உண்டு.
இயேசு கிறிஸ்து பேதுருவிடம் மாம்சமும் இரத்தமும் உனக்கு இதை வெளிப்படுத்தவில்லை. பரலோக பிதாவே இதை வெளிப்படுத்தப்படுத்தினார் என்று கூறியது போல மார்த்தாளும், மரியாளும் விசுவாசித்தால் தேவன் இயேசு கிறிஸ்து மூலமாய் செய்ய போகிறதைக் காணலாம் என்கிறார்.
விசுவாசம் காணக்கூடாத ஒன்று. இருதயம், சிந்தனைகளைத் தன் வசப்படுத்தும் ஒன்று. காணக்கூடாதபடி நமக்குள் உருவாகும் விசுவாசம் எப்பொழுது அறிக்கையாக வெளிப்படுகிறதோ அப்பொழுது தேவனுடைய கிரியைகளும், மகிமையும், வல்லமையும் வெளிப்படும்.
லாசருவின் நிகழ்வில் தேவனுடைய மகிமையானது அற்புதமாக – கிரியையாக வெளிப்படப்போகின்றது. கிரியைகளை, அற்புதங்களை யாவரும் காணலாம். ஆனால் அதில் வெளிப்பட்டுள்ள தேவனுடைய செயல்களை – மகிமையை – பிரசன்னத்தை விசுவாசக்கண்கள் உடையவர்களே காணமுடியும். இந்த விசுவாசத்தை ஒவ்வொருவரிலும் உருவாக்கி கிறிஸ்துவில் தேவனுடைய மகிமையைக் காண்பதற்கே வசனங்கள் அடங்கிய விவிலியம், திருச்சபை, ஊழியக்காரர்கள் தரப்பட்டுள்ளன. எனவே நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து தேவனுடைய மகிமையைக் கண்டு மறுரூபத்துக்குள் பிரவேசிக்க ஆயத்தமாவோம்.
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 2கொரிந்தியர் 3:18.