பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்

He who sins is of the devil. (1John 3:8)

1John 3:10; 1John 5:19b; Matthew 13:38-40; John 8:44; John 6:70; Ephesians 2:2,3,11,12.

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். (1 யோவான் 3:8)

1யோவான் 3:10; 1யோவான் 5:19b; மத்தேயு 13:38-40; யோவான் 8:44; யோவான் 6:70; எபேசியர் 2:2,3,11,12.

பிசாசினால் உண்டானவன்.

பாவம் செய்கிறவன் பிசாசாயிருக்கிறான் என்பதையே பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டானவனாயிருக்கிறான் என்றுக் கூறுகின்றார். பிசாசினால் உண்டானவனை பிசாசின் பிள்ளை என்று விவிலியம் கூறுகின்றது.

விவிலியத்தில் 5 விதமான பிறப்புக்குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும். அது மாம்சத்துக்கடுத்த காரியங்களை குறித்து சிந்திக்கும். மாம்சத்தின் கிரியைகளையே பிறப்பிக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். ஆவிக்குரிய காரியங்களிலே நாட்டம் காண்பிக்கும். ஆவியின் கிரியைகளின் பலன்களாகிய ஆவியின் கனியையே பிறப்பிக்கும். உலகத்தினால் பிறப்பது உலகத்துக்குரியவைகளையே சிந்திக்கும். உலகத்துக்காய் ஓடும். உலகத்துக்காய் உழைக்கும். உலகத்துக்குரிய செல்வம், ஐசுவரியம்,பதவி, புகழ், பெருமை ஆகியவற்றை நாடும். பிசாசினால் பிறப்பது பிசாசாயிருக்கும். சாத்தானுக்கும் அவனது ஆட்களுக்கும் சேவை செய்வதிலே ஆவல் கொள்ளும். பிசாசின் குணங்களாகிய பொய், சூதுவாது, வஞ்சகம், ஏமாற்றுதல் போன்றவைகளை பிறப்பிக்கும். இச்சையினால் பிறப்பது இச்சையாயிருக்கும். இச்சைக்குரிய காரியங்களில் அதிக ஈடுபாடு கொள்ளவைக்கும். சிற்றின்பம், கட்டுபாடற்ற வாழ்க்கை, கவர்ச்சி போன்றவைகளிலே துயில் கொள்ளும். இவ்விதமான ஐந்து விதமான பிறப்புகளை விவிலியம் கூறுகின்றது.

பாவம் செய்கிறவன் பிசாசினால் பிறந்தவன். அவன் மாம்சத்துக்குரியவனாகவும், உலகத்துக்குரியவனாகவும், பிசாசுக்குரியவனாகவும், இச்சைக்குரியவனாகவும் இருந்து அதிலே வைராக்கியம் உடையவனாயிருந்து செயல்படுவான்.

பிசாசானவன் மீறுதலை கொண்டு வந்தவன். பரலோகத்திலேயே தேவ நியமங்களை உடைத்தெறிந்தவன். மீறுதலுக்குள்ளானவன். ஆதிமனிதர்களையும் சட்டத்தை மீறி பாவம் செய்யும்படியாக தூண்டினான். நியாயபிரமாணமாகிய தேவ சட்டத்தை மீறவைத்து இஸ்ராயேலர் தேவனுடைய கோபாக்கினைக்குள்ளாகும்படி செய்தான். இக்காலத்திலும் விவிலிய சட்டங்களை மீறவைத்து அனேக தேவ மனிதர்களை பாவமாகிய படுகுழிக்குள் தள்ளுகிறான். பிசாசினால் பிறந்தவன் ஒருபோதும் தேவனுடைய சட்டங்களை ஏற்றுக்கொள்ள மாட்டான். அவன் ஆவிக்குரியவனாயிராதபடியினால் தேவ சட்டங்களின் மகத்துவங்களை அறியவுமாட்டான்.

ஆவியினால் பிறந்தவனோ தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு உரிமைகாரனாக மாறுகின்றான். அவருடைய கட்டளைகள் அவனுக்கு பாரமானதாக தெரிவதில்லை. தேவ ஆவியினால் அவருடைய பிரமாணங்களுக்கு கீழ்படியும் மனதையும், பிரமாணங்களின்படி நற்கிரியைகளை செய்யும் பெலனையும் பெற்றுக்கொள்கிறான்.

பாவம் செய்கிறவன் பிசாசாயிருக்கிறான். பாவம் செய்யாதவனோ அவனோடே போராடுகிறான்.

கேள்வி. நாம் அவருடைய கட்டளையை மீறுகிறவர்களாயிருந்தால் நம்மில் உள்ள ஆவி எத்தகைய ஆவி?

பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:16-21.

ADD YOUR COMMENT

Powered By Indic IME